எங்கேயும் எப்போதும்’படத்தில் தங்கையின் காதலை அங்கீகரிக்கும் அக்கா கதாபாத்திரத்தில் தொடங்கி, சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஜூனியர் வக்கீலாக வந்து கவர்ந்தது வரை, பல வண்ணக் கதாபாத்திரங்களில் யதார்த்தக் கலைஞராக மிளிர்பவர் வினோதினி. இவரைத் திரைப்படக் கலைஞராகத் தெரிந்த அளவுக்கு தீவிர நாடகாசிரியராக, நாடக இயக்குநராக, நடிப்பைச் சொல்லித்தரும் ஆசிரியராகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
நாடகம் வழியே திரைப்படத்துக்கு வந்தவர் நீங்கள் என்று தெரியும். அந்தப் பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
அதிக சுதந்திரம் தரும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். அப்பா எம்.பி.ஏ. படித்தவர். மார்க்கெட்டிங் துறையில் பொது மேலாளராகப் பணியாற்றிவந்தவர். அம்மா, சென்னை எத்திராஜ் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அப்பா ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப் படிப்பார். அம்மா தமிழ்ப் புத்தகங்களைப் படித்துக்கொண்டேயிருப்பார். இருவர் வழியாகவும் எனக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது.
அது பள்ளி நாடகங்களில் நடிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. பள்ளி நாடகங்களில் கிடைத்த கைதட்டல் எனக்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் பயோ- கெமிஸ்ட்ரி படித்தேன். அதன் பிறகு அந்தப் படிப்பு பிடிக்காமல் போய்விட்டது. உடனே எம்.பி.ஏ. மனிதவளம் படித்தேன். அதன் தொடர்ச்சியாக எம்.எஸ்.சி. சைக்காலஜி படித்தேன்.
பிறகு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது நாடகம் என்னை நிம்மதியாக வேலை செய்யவிடவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு, கூத்துப்பட்டறையில் இணைந்தேன். பிறகு ஞாநி, வெளி ரங்கராஜன், மெட்ராஜ் பிளேயர்ஸ் போன்ற பல குழுக்களின் நாடகங்களில் பங்கேற்றிருக்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக நாடகமே வாழ்க்கை என்றாகிவிட்டது.
வேலையை விட்டுவிட்டு நாடகத்துக்கு வந்தபோது வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?
இல்லாமலா? அம்மா வேலைக்குச் செல்லும் பெண். நாடகத்தில் பணம் கிடைக்காது என்ற யதார்த்தம் தெரிந்தால் யார்தான் அனுப்புவார்கள். மனிதவள அதிகாரியாகக் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவள் திடீரென நாடகத்தில் நடிக்கிறேன் என்று வேலையை விட்டுவிட்டு வந்தது அவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
நாடகத்தில் நடிக்கிறோம் என்றால் “சீரியல் பேர் என்ன?” என்று கேட்பவர்கள்தான் இன்றைக்கும் நம்மைச் சுற்றி அதிகமாக இருக்கிறார்கள். இல்லை இல்லை ‘இது தியேட்டர்’ என்றால் ‘தேவி தியேட்டரா இல்லை. சத்தியம் தியேட்டரா’ என்று கேட்பார்கள். நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பலருக்கு தியேட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நான் நாடகத்துக்கு வந்தேன். ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது.
இயக்குநர் பாலுமகேந்திராவின் மாணவி என்றும் உங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்களே?
இல்லை. நான் கூத்துப்பட்டறையில் இயங்கியபோது, நான் பங்கேற்று நடித்த பல நாடகங்களைப் பார்க்க பாலு சார் வந்திருக்கிறார். அவர் ‘சினிமா பட்டறை’ என்ற பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அங்கே தேசிய நாடகப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த பாலகிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார். அவருடைய உதவியாளர்களில் ஒருவராக நானும் அங்கே நடிப்பு சொல்லித்தரும் ஆசிரியையாக இருந்தேன். அப்படித்தான் நான் பாலு சாருக்கு அறிமுகமானேன். அவரது ‘தலைமுறைகள்’ படத்தில் அவருடைய மகளாக நடிக்கும் அரிய வாய்ப்பை எனக்குத் தந்தார்.
நடிப்பை நிகழ்த்துவது, நடிப்பைச் சொல்லித்தருவது இரண்டில் எதை அதிக விருப்பத்துடன் செய்ய நினைப்பீர்கள்?
இரண்டுமே ஒன்றையொன்று தழுவிக்கொண்டு ஒருங்கிணைந்து செல்லக்கூடிய கலை வெளிப்பாடுகள்தான். நடிப்பு என்பது எனக்கு எந்த வழிமுறைகள் வழியாகச் சொல்லித்தரப்பட்டதோ அப்படித்தான் மற்றவர்களுக்கு என்னால் சொல்லித்தரத் தெரியும். நடிப்பை ஒருவர் செய்துகாட்டி, அதை இமிடேட் செய்து அப்படியே நடிப்பது என்ற முறை நடிப்புத் திறமை கிடையாது. எந்தவொரு ஒரு விஷயத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தத் தெரிந்த கலைஞன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான்.
நமக்காகவே கடவுள் அளித்த உடல்மொழியிலிருந்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அந்தக் கலைஞனை வெளிப்பட வைக்கும் நீண்ட செயல்முறையில் உணரப்படுவதுதான் நடிப்பு. அது சிலருக்கு உடனே வசப்பட்டுவிடலாம். சிலருக்குக் கால அவகாசம் பிடிக்கலாம். தொடர்ச்சியான ஈடுபாட்டால் மட்டுமே நடிப்பைக் கண்டடைய முடியும். என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பதில் உடல்மொழியே வார்த்தைகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
நாடக வட்டாரத்தில் உங்கள் நகைச்சுவை உணர்வு பற்றி அதிகம் சிலாகிக்கிறார்களே?
அடிப்படையில் நான் ஒரு ஹ்யூமர் ரைட்டர். என்னிடம் ஒரு டார்க் ஹ்யூமர் இருந்துகொண்டே இருக்கிறது. இது எனது படைப்புகளிலும் கதாபாத்திரங்களிலும் இயல்பாக வெளிப்பட்டுவிடுகிறது. எனது நாடகக் குழுவின் தற்போதைய தயாரிப்பு ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ இந்த நாடகம் முழுக்க முழுக்க நகைச்சுவையான நவீன அரங்க நிகழ்வு.
கடந்த 10 ஆண்டுகளைக் கடந்து ஆங்கில நாடக விழாவை ‘தி இந்து’ குழுமம் நடத்திவரும் நிலையில், அதில் தமிழ் நாடகங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று முதல் தமிழ் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள். அது ‘சாத்தூர் சந்திப்பு’ என்ற நகைச்சுவை நாடகம். இந்த ஆண்டு இந்து நாடக விழாவில் ‘ஆயிரத்து ஒரு இரவுகள்’ என்ற நாடகத்தை நிகழ்த்தினோம்.
இந்த முக்கியமான வாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்க காரணமாக இருந்தது ‘தி இந்து’ நாடகவிழாவில் முதன் முதலில் நாங்கள் நிகழ்த்திய ‘தி கிராண்ட் ரிகர்சல்’ என்ற ஆங்கில நகைச்சுவை நாடகம். இது பம்மல் சம்மந்த முதலியார் எழுதிய ‘சபாபதி’ வரிசையில் வரக்கூடிய ‘ஓர் ஒத்திகை’ என்ற நாடகத்தின் மீள் உருவாக்க வடிவம். தொடக்கமும் முடிவு இல்லாமல் இருந்த அந்த நாடகத்துக்கு அவற்றை எழுதி, மூத்த தெருக்கூத்துக் கலைஞர் ஆ. கு. ஏழுமலையின் ஆடலும் பாடலும் கொண்ட நிகழ்வை நாடகத்தின் ஒருபகுதியாக இணைத்து, அந்த நாடகத்தை எழுதி, இயக்கியிருந்தேன்.
‘சாத்தூர் சந்திப்பு’, ‘ஓர் ஒத்திகை’ ஆகிய இரண்டு நாடகங்களையும் இணைத்து ஒரே நாடகமாக ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ என்ற தலைப்பில் இந்தியாவின் பல நகரங்களில் மேடையேற்றிவருகிறோம். நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
திரையில் உங்கள் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துவிட்டதா?
இல்லை. இந்தக் கேள்விக்கு ஏமாற்றம் என்ற பதிலைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. வர்த்தகமாக இருக்கும் சினிமாவில் ஒரு நடிப்புக் கலைஞராகத் திரையில் கிடைக்கும் கதாபாத்திரங்களை மகிழ்வுடன் ஏற்று நடிக்கிறேன்.