கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாண்ட அவுஸ்திரேலிய அரசு தன்னுடைய சிறிய தவறினால், இன்று நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவ காரணமாகியுள்ளது.
தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், பயணம் முடித்து வந்தடைந்தது. அது பின்னர் அடுத்த பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.
அந்த கப்பலில், வந்தவர்களில் 158 பேர் உடல்நலம் குன்றி இருப்பதை கண்ட அரசு 9பேருக்கு கொரோனா சோதனை செய்தது. அதில், யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வரவில்லை.
எனவே அந்த கப்பலில் இருந்த 2,700 பயணிகளும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடு விட்டு நாடு பயணம் செய்பவர்கள் மூலம் பல நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், அந்த பயணிகள் பலர் வெளியில் வந்தது அவுஸ்திரேலியாவுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
அதன்படி ரூபி பிரின்சஸ் கப்பலில் ஏறி இறங்கியவர்கள் மற்றும் அவர்கள் மூலம் மட்டும் 600பேருக்கும் கொரோனா தொற்று தற்போது வரை பரவியுள்ளது. அதில், 15பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த பயணத்தை தொடங்க இருந்த ரூபி பிரின்சஸ் வானிலை சரியில்லை என்று கூறி ரத்து செய்துள்ளது. அது உண்மையில், பலர் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாலேயே ரத்து செய்ததாக பின்னர் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரிவு பொலிசார் பாதுகாப்பு கவசங்களுடன் சிட்னி துறைமுகத்தில் நின்றிருந்த ரூபி பிரின்சஸ் கப்பலுக்கு விசாரணை செய்ய சென்றுள்ளனர்
பொலிசார் 10 நாட்கள் அந்த கப்பலில் தங்கி விசாரணை செய்ய உள்ளனர். அந்த கப்பலில் தற்போது 50நாடுகளை சேர்ந்த 1,040 ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில், இதுவரை 200பேருக்கு கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொலிசார் கப்பலில் இருந்த கறுப்பு பெட்டியை கைப்பற்றியுள்ளனர். அதன் மூலம் கப்பலில் என்ன நடந்தது என்பது குறித்து வெளியுலகிற்கு தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதில், கருப்பு பெட்டி தவிர வேறு சில ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியா இந்த கப்பலால் கொரோனா வைரஸ் பாதிப்பில் பின்தங்கினாலும், கடந்த சில நாட்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 96 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். மார்ச் 28 அன்று மட்டும் 458 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது
Eelamurasu Australia Online News Portal
