கரோனா வைரஸ் தாக்குததல் வரும்; 10 ஆண்டுகளாக உலகை எச்சரித்த பில்கேட்ஸ்

கரோனா வைரஸ் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் எச்சரித்து வந்துள்ளார், அதிலும் கடைசி ஐந்து ஆண்டுகளில் கடுமையாக இதுகுறித்துப் பேசி வந்துள்ளார். யுத்தத்துக்குத் தயாராவதை விட வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் என பில்கேட்ஸ் வலியுறுத்தியதை உலக நாடுகள் அலட்சியம் செய்ததால் இன்று அதற்கான விலையைக் கொடுக்கின்றன.

உலகளாவிய தொற்று பாதிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளாக பில்கேட்ஸ் பேசி எச்சரித்து வருகிறார். தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கும், மருந்து கண்டுபிடிக்கவும் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் தனது வருமானத்தின் பெரும்பகுதியை பில்கேட்ஸ் செலவிட்டு வருகிறார்.

உலகை வைரஸ் கிருமிகள் எப்படி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் என பில்கேட்ஸ் புரிந்து வைத்திருந்தார். அதனால் இதுகுறித்துத் தொடர்ந்து பேசியும், தனது வலைப்பூவில் எழுதியும் வருகிறார். எபோலோ நோய் பரவியபோது அதைப்பற்றி அவர் எழுதியதும், அதுகுறித்து உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவரவும் மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டார்.

அவரது வலைப்பூவில், “ 2010-ல் எச் 1என் 1 (H1N1) உலக அளவில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை, எபோலா உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக நாம் பெரிய அளவில் தயாராகாவிட்டாலும் நாம் தப்பித்துக்கொண்டோம் எனலாம். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நாம் தொற்று நோய் வைரஸ் பரவல் விஷயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் 10 மில்லியன் மக்களைக் கொன்றால் அது உலகப் போரைவிட மோசமானதாக இருக்கும்” என பில்கேட்ஸ் எச்சரித்தார்.

உலகம் முழுவதும் அறிவாளிகள், சாதனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொற்பொழிவாற்றும் டெட் எனப்படும் தளத்தில் 2015-ம் ஆண்டு பில்கேட்ஸ் பேசியவை தீர்க்கதரிசனமான வார்த்தைகள். உலக நாடுகளுக்கு இன்று உலகை அச்சுறுத்தி முடக்கிப்போட்டிருக்கும் கரோனா பற்றி அவர் அன்றே குறிப்பிடுவதும், அதை வளர்ந்த நாடுகள் அலட்சியம் செய்ததையும் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“ அடுத்து வரும் மிகப்பெரிய தாக்குதல் நாம் அதற்குத் தயாராக இருக்கிறோமா?” எனும் தலைப்பில் பில்கேட்ஸ் பேசினார். அவரது பேச்சு, “அணு ஆயுதங்களைவிட கண்ணுக்குத் தெரியாத வைரஸால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் வைரஸால் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. சக்திவாய்ந்த ஏவுகணைகளை விட நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை. ஆனால், வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இப்போதுவரை நாம் தயாராக இல்லை.

கடந்த 1918 ஆம் ஆண்டில் பரவிய புளூ வைரஸால், 263 நாள்களில் 3 கோடியே 33 லட்சத்து 65 ஆயிரத்து 533 பேர் உயிரிழந்தனர். தற்போது எபோலா வைரஸால் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காற்றில் பரவவில்லை என்பதாலேயே மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படவில்லை.

அடுத்த முறையும் இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்று கூற முடியாது. எபோலா வைரஸைவிட அடுத்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும். இதை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும்.

இது ஒரு போரைப் போன்றது. இந்தப் போரில் வெற்றி பெற அனைத்து அறிவியல் தொழில்நுட்பங்களையும் நாம் பயன்படுத்தவேண்டும். முதல்கட்டமாக ஏழை நாடுகளில் வலுவான சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். வைரஸை முறியடிக்கும் புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அனுபவம் வாய்ந்த, திறன் மிகுந்த மருத்துவர்கள் அடங்கிய படையை உருவாக்கவேண்டும். வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல அவர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். அந்த மருத்துவர்களுக்கு அனைத்து வகையிலும் உதவ ராணுவத்தை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.

வைரஸைக் கண்டறியும் பரிசோதனை, வைரஸுக்கான மருந்து ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இதற்கு 3 லட்சம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்ய வேண்டும். நமக்கு நேரம் போதுமானதாக இல்லை. அடுத்த வைரஸ் தாக்குதலுக்கு முன்பாக இப்போதே விழித்தெழ வேண்டும்” பில்கேட்ஸ் என எச்சரித்திருந்தார்.

அதற்கு அடுத்த ஆண்டான 2016 -ம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், சில தொற்றுகள் ப்ளூ காய்ச்சல்போல் வரும். எபோலோ மற்றும் சிகா வைரஸ் போன்ற தாக்குதல் வரும்போது அதை எதிர்த்து நிற்க உலகளாவிய நிலையில் நாடுகள் தயாராக இல்லை என்று தனது வருத்தத்தை ப் பதிவு செய்தார்.

மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் 2017-ம் ஆண்டு பில்கேட்ஸ் பேசினார். உலகம் முழுவதும் மக்கள் அண்டை நாடுகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளோம். இதன் அர்த்தம் தேசப் பாதுகாப்பும், சுகாதாரத்துக்கான பாதுகாப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது எனத் தெரிவித்த பில்கேட்ஸ் அடுத்து பேசிய வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை.

உலகத் தொற்று நோயியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசும் அவர், “வேகமாக நகரும் வான்வழி நோய்க்கிருமி ஒரு வருடத்திற்குள் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொல்லக்கூடும். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இது ஏற்படக்கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

“அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் உலகில் ஏற்படுத்தும் மாற்றத்துக்கு இணையாக கொடிய தொற்றுநோய்களின் அச்சுறுத்தலை நான் இங்கே பார்க்கிறேன். உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக தயாராதல் என்பது அணுசக்தி தடுப்பு மற்றும் காலநிலை பேரழிவைத் தவிர்க்கப் பாடுபடுவதற்கு இணையானது” எனக் குறிப்பிட்டார்.

2018-ம் ஆண்டு மாசெசுசெட்ஸ் மெடிக்கல் சொசைட்டி வருடாந்திர சொற்பொழிவில், வாழ்க்கை உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு சிறப்பானதாக இருக்கும்போது, நாம் அதிகம் முன்னேற்றம் காணாத ஒரு பகுதியும் உள்ளது. அதுதான் தொற்றுநோய்க்கு எதிரான தயார்நிலை. இதைப்பற்றி மட்டும் உலகம் சிந்திக்க மறுக்கிறது. அதற்கான தயாரிப்பைச் செய்ய மறுக்கிறது.

நமக்கு வரலாறு சொல்லும் பாடம் என்னவென்றால் ப்ளூ, எபோலா மாதிரி எப்போதும் ஒரு கொடிய தொற்று நோய் தாக்குதல் வரலாம். ஒரு யுத்தத்துக்கு ராணுவம் எவ்வாறு தாயாராக வேண்டுமோ அதுபோன்று உலகளாவிய தொற்றுக்கு எதிராக உலகம் தயாராக வேண்டும்” என்று பில்கேட்ஸ் பேசினார்.

அதே ஆண்டு மற்றொரு பேட்டியில், இவ்வளவு இக்கட்டான காலக்கட்டத்தில் மே 2018 இல், ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தொற்றுநோய் ஆய்வு அலுவலகத்தைக் கலைத்ததை குறிப்பிட்டு பில்கேட்ஸ் தனது கவலையை மீண்டும் பதிவு செய்தார். அதை ட்ரம்ப்பிடம் சொன்னதையும் பதிவு செய்தார்.

பில்கேட்ஸ் பேசுவதுடன் நிறுத்தவில்லை, பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தொற்று காய்ச்சலைத் தடுக்க புதிய தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு பல மானியங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை 2017 ஆம் ஆண்டில் டாவோஸில் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேசக் கூட்டணியான தொற்றுநோய் தயாரிப்புக் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியிலும் முதலீடு செய்தது.

அடுத்து வரும் தொற்று பாதிப்பை அதன் வழியிலேயே எதிர்கொண்டு நிறுத்த பில்கேட்ஸ் ஒரு மாஸ்டர் திட்டத்தையும் வகுத்திருந்தார். நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், கரோனா தாக்குதலை பில்கேட்ஸ் போல் தீவிரமாகப் பார்க்காமல் அலட்சியமாகக் கையாண்ட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதன் விளைவாக தங்கள் மக்களின் உயிரை விலையாகக் கொடுப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து நமது ஆட்சியாளர்களும், நம் மக்களும் பாடம் கற்றுக்கொண்டால் பேரழிவிலிருந்து தப்பலாம். ஒரு யுத்தம் சிலநாட்கள்தான் மக்களை முடக்கும். அண்டை நாடுகளால் நமது நாட்டு மக்களுக்குப் பாதிப்பு வரும். தொற்று அச்சுறுத்தல் வைரஸ், நம் நாட்டு மக்களே நம் மக்களைக் கொல்லும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

கண்ணுக்குத் தெரியாமல் உலகை ஆளும் வைரஸ் கிருமிகளைக் கையாள அத்துறையில் உலக நாடுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியும் அடுத்த தாக்குதலில் இருந்தாவது உலகைக் காக்கட்டும்!