கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்ட விவாதம் வியாழக்கிழமை “மந்திரி.எல்கே” வின் முகப்புத்தக பக்கத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அரசாங்கம் அவசியமில்லை இராணுவம் போதும் என்ற கருத்துக்களை ஏற்றுகொள்ள முடியாது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர
“கொவிட் -19” தொற்றுநோய் பரவல் காரணமாக உலகமே பாரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இலங்கையிலும் அதிகளவிலான மக்கள் இப்போது வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை குணப்படுத்தும் வகையில் 28 வைத்தியசாலைகள் இப்போது வரையில் தயார் நிலையில் உள்ளது. அத்துடன் ; பி.சி.ஆர் பரிசோதனை வேலைத்திட்டங்களும், அவசர சிகிச்சை பிரிவின் இடமும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தாக்கத்தில் அதனை கையாளும் விதத்தில் மேற்கத்திய நாடுகளை விடவும் இலங்கை மிகவும் ஆரோக்கியமான வகையில் மருத்துவ வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எமது மருத்துவ சேவை குறித்து நாம் பெருமை கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல அத்தியாவசிய தேவைகள் குறித்த நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை பூர்த்தி செய்ய அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு வருகின்றது. நாட்டில் சகல பகுதிகளிலும் இந்த சிக்கல் நிலைமை உள்ளன. அத்துடன் விவசாயத்தை பலப்படுத்த அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. இந்த வேலைத்திட்டங்களை பலப்படுத்துவதுடன் மறுபக்கம் பொருளாதார நெருக்கடிக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எமது ஆடை உற்பத்திகளில் எமக்கு அதிக வருமானம் கிடைத்தது, முதலீடுகள் மற்றும் சுற்றுலாதுறையின் மூலமாக வந்த வருமானங்கள் அனைத்துமே இப்போது முழுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான கொள்வனவு விலை அதிகரித்துள்ளது. எனவே இவை அனைத்தையும் நாம் கருத்தில் கொண்டு புதிய வருமானங்களை பலப்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் ஜனநாயகம் குறித்து பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. தேர்தல் நடத்த முடியாத நிலைமை உள்ளது. இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் தேவையில்லை இராணுவம் இருந்தால் போதும் என்ற கருத்துக்களை எல்லாம் ஏற்றுகொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் பாராளுமன்ற கலாசாரத்தை விட்டு வெளியேற முடியாது. இதனை அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார, அபிவிருத்தி, மக்கள் உரிமைகள், தேர்தல் முறைமையை பலப்படுத்தி ஜனநாயகத்தை பலபடுத்த வேண்டும். பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது, இப்பொது மக்களுடன் இணைந்து செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் குறித்த அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும் இப்போதுள்ள அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றே கருதுகின்றேன்.
;இந்த நோயை நாம் தேடிப்போவதில்லை, நோய் தான் எம்மை தேடி வருகின்றது. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டே இந்த நோய் தொடரில் இருந்து விடுபட முடியும். அடுத்த இரண்டு வாரங்கலேனும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே இது முன்னெடுக்கப்படுகின்றது. மக்கள் நல வேலைத்திட்டங்களை பொறுத்தவரை அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளோம். இது முழுமையடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அரசாங்கம் மட்டுமே இதனை முன்னெடுக்க முடியாது. அனைவரும் இணைய வேண்டும். அதேபோல் எமது உற்பத்திகளை பலப்படுதியாக வேண்டும். அதற்கான முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் என்றார்.
இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்காது செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி
வரலாற்றில் நாம் முகங்கொடுக்கும் முதல் தொற்றுநோய் நெருக்கடி இதுவாக்கும். இவ்வாறான நோய்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்கவில்லை. எனினும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே சிந்திக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நாடாக மீள வேண்டிய தேவை உள்ளது. நாட்டின் சுதந்திர மருத்துவம், இலவச கல்வி, சேவைகள் என்பன இன்று இவ்வாறான நிலைமையில் நாம் மீள மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகள் இன்று நாசமாகி வருகின்றது. பணம், நவீனத்துவம் இருந்தும் மக்கள் ஒன்றிணையாவிட்டால் இவ்வாறான நோய்களை நீக்க முடியாது என்பது தெரிந்துவிட்டது. அதேபோல் இந்த விடயத்தில் எமது தரப்பில் சில குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக மேல் மட்டத்தில் தீர்மானங்கள் எடுத்தாளும் அது மக்களின் நலனுக்காக கிராமிய மட்டம் வரையில் சென்றுள்ளதா என்ற கேள்வி உள்ளது. கட்சி தலைவர்கள் என்ற விதத்தில் எடுக்கும் சில தீர்மானங்கள் மக்களுக்கு செல்லவில்லை. அரச இயந்திரம் மேல்மட்டத்தை மாத்திரம் இயங்காது அவை கிராமிய மட்டத்தில் இணைந்து பயணிக்கவேண்டும்.
எனினும் அவ்வாறு செயற்படாது இருக்க அரசியல் தலையீடுகள் இதில் இருப்பதும் ஒரு காரணியாகும். அரசாங்கம் அரச பொறிமுறை ஒன்றினைக் கொண்டு மக்களை பலப்படுத்த வேண்டும். மக்களுக்கான நிவாரண பொறிமுறை கிராமிய மடத்திற்கு வரும்வேளையில் அரசியல் தலையீடுகளில் தடுக்கப்படுகின்றது. அதேபோல் நிவராண செயற்பாடுகளில் மக்கள் முழுமையாக திருப்தியடையவில்லை.
அதேபோல் இந்த நிலையில் இனவாதத்தை பரப்ப எவரும் முயற்சிக்க வேண்டாம். இந்த நோய் முழு உலகத்தையும் நாசமாக்கி வருகின்றது. அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் இதில் இனவாதம், மதவாதத்தை பரப்பாது நாடக ஒரு தீர்மானத்தை கொண்டு செயற்படுவோம், ஜனநாயக அடிப்படையை பாதுகாத்து அனைவரும் செயற்படுவோம். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அதன் முழுமையான கௌரவம் அரசாங்கத்தை சாரும். அதில் நாம் மாற்றுக்கருத்துகளை முன்வைக்கவில்லை. எனவே இனவாதத்திற்கு இடமளிக்காது செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த நேரத்தில் அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டினால் அது கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் பலமடையும் என்ற என்னத்தை உருவாக்கும். ஆனால் மறுமுனையில் மக்கள் பிரதிநிதிகளின் நிலைப்பாடுகள், வேலைத்திட்டங்கள் என்னவென்பது மக்களுக்கு தெரியவரும்.
அரச பொறிமுறைக்கு மாறான பொறிமுறையொன்று அவசியமில்லை – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார
இந்த தொற்றுநோய் மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இப்போதே தெரிகின்றது. இதில் இருந்து விடுபட அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனை கையாள அரசாங்கம் ஒன்று உள்ளது. கட்சிகளை ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றோம். எனினும் அரசாங்கம் ஒரு பொறிமுறையை கையாள்கின்றது. அதை விடுத்து புதிய அரச பொறிமுறை ஒன்றினை உருவாக்க முடியாது. யாரையும் கைவிடாது ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களுக்கான நிவாரணங்கள் சென்றடைகின்றது.
எமது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகள் செயற்பாடுகளை பார்க்கையில் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் ஒரு பச்சை விளக்கு ஒளிரும் என நம்புகிறோம். சில வேளைகளில் அவ்வாறு நடக்காது மேலும் நெருக்கடி வரலாம். எனவே அதற்கும் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்களின் வாழ்க்கையை நாசமாக்க முடியாது, அதேபோல் நாட்டின் பொருளாதாரதை வீழ்த்தவும் முடியாது. ஆகவே இரண்டையும் சரியாக கையாண்டு நாட்டினையும் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும். மேலும் இன்றுள்ள நெருக்கடி நிலையில் மக்களுக்கு அதிக செலவு வரப்போவதில்லை. நிவாரணங்களை அரசாங்கம் செலுத்தி வருகின்றது. அத்துடன் விவசாயிகளின் மரக்கறிகள் நிராகரிக்கப்படவில்லை. அவை சந்திக்கும் வருகின்றது. மக்களின் நுகர்வுக்கு செல்கின்றது . சந்தைகளை மூட நடவைக்கை எடுக்கப்பட்டதை விமர்சிக்கின்றனர். ஆனால் இவை வைத்திய ஆலோசனைக்கு அமையவே எடுக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் அவசர நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்திற்கு கைகொடுப்பதும் எமது கடமை. – முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
இந்த நோய் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலில் நோயின் தாக்கம் மற்றும் அச்சுறுத்தலை கருத்தில் கொள்ள வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களுக்கும் இப்போது இந்த நோய் பரவ ஆரம்பித்துள்ளது. நோய் குறித்து மிகக்குறுகிய தகவல்களை எமக்கு தெரியும். இதன் தாக்கம் இரண்டாம், மூன்றாம் நான்காம் சுற்றாக மீண்டும் மீண்டும் பரவும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றார். எனவே இதிலிருந்து விடுபட முன்னெடுக்கக்கூடிய துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கும் நிவாரணங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். பாதுகாப்பு துறை, அரச துறை மீது அதிக நம்பிக்கை உள்ளது. எனவே அவர்களை கொண்டு நிவாரணங்களை வழங்க வேண்டும். அதேபோல் நோய் அறிகுறிகள் குறித்து கண்டறிய அதிக சிரமங்கள் உள்ளது.
எனவே இது குறித்த மருத்துவ நிபுணர்கள், அனுபவமிக்க வைத்தியர்கள் பலர் உள்ளனர். அவர்களை இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். அதேபோல் கஷ்டப்படும் மக்கள் அனைவருக்கும் உரிய முறையில் நிவாரணங்களை வழங்க வேண்டும். மக்கள் வாழக்கூடிய விதத்தில் அவர்களுக்கான நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஏனைய நாடுகளை போல எமது நாட்டிலும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். அத்துடன் உணவு, மருத்துவ உற்பத்திகளை மேம்படுத்த வேண்டும். இதில் இனவாதம் மதவாதம் என்பவற்றை தொடர்புபடுத்திக்கொண்டு நாட்டினை குழப்பக்கூடாது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேசிய உற்பத்திகளை பலபடுதியாக வேண்டும். விவசாயத்தை பலபடுத்த வேண்டும். மக்களிடம் பணம் இல்லை, சந்தைகள் மூடியுள்ளது. ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டவுடன் மக்கள் அடகுக்கடைக்கு செல்கின்றனர். எனவே இதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். ஒரு நாட்டவராக நாம் மீள வேண்டும். எதிர்க்கட்சியின் கடமை விமர்சனங்களை முன்வைப்பது மட்டுமல்ல. குறைகள் இருப்பன் அதனை சுட்டிக்காட்டுவது அவசியம்.
அதேபோல் தேவைகலைக்கு அமைய நிலைமைகளை உணர்ந்து கைகொடுப்பதும் எமது கடமை. இதில் பாராளுமன்றத்தை கூட்டி பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்று அனைவரயையும் இணைத்துக்கொள்வதே அவசியமாகும். தொற்றுநோயாளர்களை கண்டறிய பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இலங்கையில் பரிசோதனை வேலைத்திட்டங்கள் போதுமானதாக இல்லை. இந்த சூழலில் சேவை செய்யும் சுகாதார சேவையர், படைகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றுக் கருத்துகள் இருப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தால் பேசமுடியும் இதற்கு பாராளுமன்றம் அவசியமில்லை. -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷ
கொவிட் 19 தொற்றுநோய் என்பது எமக்கு புதியதாக இருந்தாலும் ஆசியாவில் வேறு நாடுகள் வெவ்வேறு பேர்களில் இந்த நோயை எதிர்கொண்டுள்ளனர். எனினும் எவ்வாறான பயங்கரமான நோயை நாம் முதல் தடவடியாக எதிர்கொள்கிறோம். அவ்வாறு இருக்கையில் உலகில் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள், பலமான நாடுகள் அனைத்துமே இன்று பலவீனமடைந்துள்ளது. பணம், அதிகாரம் என்பன மக்களை பாதுகாக்காது என்பது இன்று நீருபிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தை விடவும் மக்கள் பாதுகாப்பு என்பதற்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும். அது இல்லாதுவிடத்தே நாடு பாரிய வீழ்ச்சியை காணும்
எமது நாடு பயங்கரவாத யுத்தத்தின் போது அரசாங்கம் யுத்தத்தை கையாளும் வேளையில் பாதுகாப்பு துறையின் கருத்தை அரசாங்கம் கேட்டக வேண்டும். அதேபோல் இவ்வாறான நோய் தாக்கங்களின் போது தீர்மாங்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும் கூட அவற்றை இயக்குவது சுகாதார மருத்துவ அதிகாரிகளே. சுகாதார தரம் குறித்து கடந்த காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும் உலகில் ஏனைய நாடுகளை விடவும் ஆசியாவில் அனைத்து நாடுகளை விடவும் எமது நாட்டின் சுகாதார தரம் உயர்வாக உள்ளது என்பது நிறுபனமாகியுள்ளது. இப்போது நெருக்கடியொன்றை நாம் சந்திக்கின்றோம். இதில் ஒருவரை ஒருவர் குறைகூராது ; அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். இருக்கும் பணத்தை எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுக்க அரசாங்கம் தேவையில்லை. அதனையும் தாண்டி பலமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொருளாதார வேலைத்திட்டங்களை எவ்வாறு இந்த நிலைமையில் முன்னெடுப்பது என்பது அவசியம்
சிறிமா அம்மையாரின் காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் பின்னர் மறக்கப்பட்டது. வேறு நாடுகளில் இருந்து கைநீட்டி எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டது. இன்று இவ்வாறான நிலைமையில் மீண்டும் நாட்டின் சுய உற்பத்திக்கு திரும்ப நேர்ந்துள்ளது. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது இப்போது அவசியமாக என்ற கேள்வி உள்ளது. அவசரகால சட்டம் ஒன்று இல்லை. இது சுகாதார கேள்வியை ஏற்படுத்தியுள்ள நிலைமையாகும். இதில் அரசாங்கம் உரிய முறைமைகளை முன்னெடுத்து வருகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையிலும் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. உலகமயத்தால் இன்று எவ்வளவு பெரிய பிரச்பினையை உருவாக்கியுள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டும்
பாராளுமன்றத்தில் கூட்டி இந்த விடயங்களை கையாளும் போது கொரோனா விடயம் மறக்கப்பட்டு வேறு பிரச்சினைகளுக்கு திசை திரும்ப வேண்டிவரும். முதலில் இவை அனைத்தையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க கட்சி மத இன பேதம் ஏதுமின்றி அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் கருத்துகள் இருந்தால் கட்சி தலைவர்கள் கூட்டத்தால் பேச முடியும். இதனை பாராளுமன்றத்தில் கொண்டுசேர்கக வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றம் அவ்வாறு கூடினாலும் கூட அதில் புதிதாக சட்டம் எதனையும் உருவாக்க முடியாது. ஜனாதிபதி உருவாக்கிய ஆலோசனைகளை& ஒன்று ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க மட்டுமே முடியும்.எனவே அதில் எந்த அர்த்தமும் இல்லை.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி சட்டங்களை உருவாக்கவேண்டும். – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்
கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக இன்று நாட்டில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுய தொழிலாளர்கள் பலர் இந்த தாக்கத்தின் பின்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகின்றது. இதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்க்றோம். அதே நிலையில் இன்னும் எத்தனை காலம் மக்கள் இவ்வாறு வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது என்ற கேள்வியும் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் பட்டினி சாவு வந்துவிடும். எனவே வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் அதே வேளையில் வெளியில் சென்று வேலை செய்ய ; வேண்டிய கட்டாயமும் உள்ளது.
;வடக்கு கிழக்கில் விசேடமாக மக்கள் பட்டினியில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிளிலும் இவ்வாறான சூழல் நிலவுகின்றது. ஆளவே மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ; ஜனநாயக சூழலில் அனைவரும் பேசி சம்பாசனை செய்து முடிவெடுக்க வேண்டும். அதற்காக பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தில் அதற்கான அங்கீகாரம் உள்ளது. நிதி மூலங்களை வகுக்க வேண்டும்.இப்போதைய சூழலில் ; தேர்தலை நடத்த முடியாது. அவ்வாறு தேர்தலை நடத்தினால் வேறு பல பிரச்சினைகள் வரும். எனவே பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எடுப்பது தான் அவசியமானது.
இந்த நிலைமையில் சட்டங்களை உருவாக்க பாராளுமன்றம் அவசியமாகின்றது. வேறு நாடுகளில் அவசர நிலைமை குறித்து உடனடி சட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இது புதிய அச்சுறுத்தல் என்பதால் புதிய சட்டங்களை உருவாக்கியாக வேண்டும். அதேபோல் இதனை வெகுவாக நீக்கவும் முடியாது. எனவே இது நாட்டின் பொருளாதாரம், மக்கள் பாதுகாப்பு என்பவற்றை பாதிக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு அவசரகால நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும். நாட்டின் கடுமையான நிலைமைகள் அனைத்தையும் பாராளுமன்றம் மூலமாகவே கையாள வேண்டும். இதில் அனாவசிய கருத்துக்களை கூறி, உறுப்பினர்கள் சுயநலமாக செயற்படுகின்றனர், வருமானத்தை எதிர்பார்க்கின்றனர் என்ற காரணிகளை கூறி மோசமாக நடந்துகொள்ள வேண்டாம்.
நாட்டின் பொருளாதரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக
கொரோனா தொற்றுநோய் பரவல் விடயத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் எமது நாடு மிகவும் முன்னணியில் உள்ளதென்றே நாம் கருதுகின்றோம். எமது நாட்டில் பாதிப்புகள் இருந்தாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் பாதிப்பு வீதம் மிக குறைவாக உள்ளது. எமது நாட்டின் சட்டமாக இருந்தாலும், வைத்திய சேவையாக இருந்தாலும் மிக சிறப்பான விதத்தில் செயற்பட்டு வருகின்றது என்பதை ஏற்றுகொண்டாக வேண்டும். எமது சுகாதார சேவைக்கான நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் விளைவாக இன்று நாம் நன்மைகளை அனுபவித்து வருகின்றோம். ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு துரிதமாக செயற்பட்டதன் காரணமாகவே இது சாத்தியமானது. அதற்காக சுகாதார துறையினருக்கும் அவர்களின் ஆலோசனையை கேட்டு செயற்பட்ட அரசாங்கத்திற்கும் நாம் நன்றிகளை தெரிவிக்கின்றோம் ; அதேபோல் குறைபாடுகள் சிலவும் உள்ளன. குறிப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுப்பதில் உள்ள குறைபாடுகள் உள்ளன. மக்களுக்கான சேவையை கிராமங்களுக்கு கொண்டுசெல்லும் வேலைத்திட்டத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்படுகின்றது.
அரசியல் சுய இலாபங்களை பெற்றுக்கொள்வதில் சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது, இது மோசமான செயற்பாடாகும். அத்துடன் நிவாரணங்களை பொறுத்தவரை மிகவும் குறைந்த அளவிலான மக்களுக்கே நிவாரணங்களை கொடுத்துள்ளனர். இதில் இனம்,மதம் அடிப்படையில் பாகுபாடு காட்டாது செயற்பட வேண்டும். மக்களின் வரியில் தான் அரசாங்கமே மக்களுக்கு சேவை செய்கின்றது ஆகவே இதில் எந்தவித பாகுபாடும் காட்ட முடியாது. பொருளாதரத்தை பொறுத்த வரையில் ; இன்று மிகப்பெரிய வீழ்ச்சி கண்டு வருகின்றது. இப்போது எந்தவித வருமானமும் இல்லாது எவ்வாறு அரசாங்கம் இதனை முகங்கொடுக்கப்போகின்றது என்ற கேள்வி உள்ளது. முதலீட்டு வலயங்கள் ஏழு இந்த நாட்டில் உள்ளது. இந்த முதலீட்டு வலயங்களை ஏன் மீளவும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையும் கையாளாது போனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். அரசியல் கருத்துக்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும்.
மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசியல் தலையீடு உள்ளது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க
கொரோனா தொற்றுநோய் மூலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள்,அதனால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகள், அதன் மூலமாக ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு முரண்பாடுகள் என்பனவற்றை இன்று கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் சசுகாதார அதிகாரிகள் என்ன கூறுகின்றனரோ அதனை முழுமையாக கேட்டு அவர்களின் வழிநடத்தலுக்கு அமைய செயற்பட வேண்டும். இது ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தலாகும். அத்துடன் எமது நாடுகள் வெப்பநிலை தன்மை கொண்ட நாடுகளாகும். எனவே எமக்கு இவ்வாறான நோய்களில் இருந்து சற்று விடுபடும் உடல் தன்மைகள் உள்ளன. எவ்வாறு இருப்பினும் எண்ணிக்கையில் நாம் எம்மை மெச்சிக்கொள்ளக்கூடாது.
நோயாளர்களை கண்டறிய சரியான வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்கவில்லை என சுகாதார அதிகாரிகள் ; கூறுகின்றனர். ஆகவே முழுமையான பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும் ; அதேபோல் மக்களுக்கான நிவாரணங்கள், அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 5 ஆயிரம் ரூவாய் கொடுத்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆகவே ; அவர்களின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு புறம் உணவுகள் வீணடிக்கப்படுகின்றது. மரக்கறிகள் வீசப்படுகின்றது மறுபுறம் வடக்கி கிழக்கிலும் வேறு சில பகுதிகளிலும் மக்கள் ஒருவேளை உணவு இல்லாது பட்டினியில் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தேவையான பகுதிகளுக்கு உணவுகளை வழங்க வேண்டும்.
உணவுகள், மருந்துகள் வழங்குவதில் அரசியல் தலையீடுகள் ; உள்ளது. இது சுயாதீன செயற்பாடுகள் அல்ல. அரசியலில் பிரதான இடங்களில் உள்ளவர்கள் இதனை செய்வது மோசமானது. அதேபோல் அரசியல் அமைப்பை தாண்டி இதனை நிவர்த்திசெய்ய முடியாது. நோயை இல்லாது ஒழிக்க வேண்டும் ஆனால் அதனை அரசியல் அமைப்பின் கீழ் செய்து முடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் உலகில் பரவிவந்த காலத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்த முடியாது என்றால் அடுத்ததாக அரசாங்கம் ; என்ன செய்யப்போகின்றது என அறிவிக்க வேண்டும். மூன்று மாத காலமே காபந்து அரசங்கம் செயற்பட முடியும். நிதியும் செலவழிக்க முடியும். ஆகவே நிதி கையாளுகையில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது ; ஆகவே இந்த விடயத்தில் நாம் முரண்பட்டு அடித்துகொள்ளாது ஜனாதிபதி பிரதமர் சகல கட்சிகளும் இணைந்து ஒரு ஆரோக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டும். அவை அனைத்தையும் அரசியல் அமைப்பின் கீழ் இணைந்து செயற்படுத்த வேண்டும் .
முஸ்லிம் சமூகத்தினரே நோயை பரப்புகின்றனர் என்ற கருத்து பொய்யானது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம்
இந்த சந்தர்ப்பத்தில் முறையான பொறிமுறை ; ஒன்றினை உருவாக்கி அனைவரையும் இணைத்து செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. இதற்கு மாற்றீடாக ; கட்சி தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றது. எனினும் இவை அனைத்துமே ; ஊடக நிகழ்வாக மட்டுமே மாறியதே தவிர மக்களின் பிரச்சினைகளை இதில் சரியாக ஆராயவில்லை. மக்கள் பக்கமுள்ள பிரச்சினைகள் எம்மால் எழுப்பப்பட்டது. இப்போது மூன்று கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கான உணவு, மருந்து பரிமாற்றல் எதுவும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அரசாங்கம் இதனை சரியாக செய்யவில்லை. பள்ளிவாசல் , சிவில் அமைப்புகள் மூலமாக ஓரளவு உதவிகள் செய்துகொடுக்கப்பட்டன. மாறாக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அதேபோல் ஒரு சிலரின் கருத்திக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.
ஊடகங்கள் மூலமாக இதனை செய்கின்றனர். முஸ்லிம் சமூகம் நோயை பரப்புகின்றது என்ற கருத்துகளை ஊடகங்கள் முன்வைப்பது வருத்தமான விடயமாகும். ; சுனாமி நேரத்தில் நிலைமைகளை கையாள விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது பல நெருக்கடிகள் இருந்தாலும் கூட அவ்வாறான முறைமை ஒன்றினை கையாள நினைத்தோம். இப்போதுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளை நிராகரித்து ஒரு பக்க சார்பான வேலைத்திட்டம் முன்னெடுப்பது மோசமானதாகும். இந்த நெருக்கடியை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு செயற்படுவதை தவிர்த்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் எவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயரிழந்தால் ; அவர்களை நல்லடக்கம் செய்யும் முறைமை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாம் கூறியும் இன்னமும் அதற்கான குழு நியமிக்கப்படவில்லை. அதேபோல் நீரினால் கொரோனா பரவாது என உலக சுகாதார ஸ்தாபணமே கூறியுள்ளது. உலகில் அணைத்து நாடுகளும் இந்த முறைமையை பின்பற்றும் போது நாம் மட்டும் ஏன் அதனை நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது.
நோயை இல்லாதொழிப்பதை போல ஜனநாயகத்தையும் ஒழித்துவிட முடியாது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
பாராளுமன்றத்தை கூட்டவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நோய் பரவலை கட்டுபடுத்துவதை போலவே ஜனநாயகத்தையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். நோயை இல்லாதொழிப்பதை போல ஜனநாயகத்தையும் ஒழித்துவிட முடியாது. அனைவருக்கும் ஜனநாயகம் வேண்டும். சுனாமியை அடிப்படையாக வைத்து பல்வேறு மோசமான வேலைகளை செய்ததை போல இதனை அடிப்படையாக வைத்து ஜனநாயகத்தை நாசமாக்கும் வேலைகளை செய்துவிட வேண்டாம். இந்த நாட்டில் எப்போதும் இராணுவ ஆட்சி இருந்ததில்லை. அதனை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். அதேபோல் சுகாதார வைத்திய அதிகாரிகளை, சேவையாட்களை நாம் மதித்து அவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். அதேபோல் அரசாங்கத்துடன் நாம் முரண்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எதிர்கட்சியாக நாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும்.
சரியானவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நிவாரணங்களை வழங்குவதில் எவரையும் கைவிடாது அனைவருக்கும் நிவரன்களை வழங்க வேண்டும். தோட்டத்தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான உதவிகளையும் செய்யுங்கள். அவர்களை நிராகரித்து செயற்பட வேண்டாம். அவர்கள் நாட்டின் பொருளாதார ஆணிவேர். அதேபோல் தோட்டங்களில் மட்டும் அல்லாது அனைத்து பகுதிகளில் வாழும் சுய தொழிலாளர்கள் குறித்து அதிக கவனம் செலுத்துங்கள். அவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாது ; நெருக்கபட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நெருக்கடி நிலையில் அதிக பிரச்சினைகளை சந்திப்பது கொழும்பு மக்களே. அவர்களுக்காக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். கொழும்பு நகரில் உள்ள அனைவருக்கும் உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும்
சுகாதார துறையினர் செய்யும் வேலையை அரசியல்வாதிகள் செய்ய முடியாது. – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய
பாராளுமன்றத்தை கூட்டுவதில் பல அச்சுறுத்தல்கள் உள்ளது. அரசியலில் ; முதுகில் குத்தும், காலைவாரும் ; செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் பல இடங்களில் பொய்யான காரணிகளை கூறி அரங்கத்தை பலவீனப்படுத்த நினைத்தனர். ஆகவே இதையெல்லாம் நாம் மறந்துவிடக் கூடாது. அதேபோல் சில விடயங்களில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் போதுமானதாக இல்லாமல் போகலாம் ஆனால் அதனையும் தாண்டி அரசாங்கம் பல ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவை அனைத்திலும் அரசியலை இணைத்துக்கொள்ளக் கூடாது.
சுகாதார துறையினர் செய்யும் வேலையை அரசியல்வாதிகள் செய்ய முடியாது. எம்மால் செய்ய முடிந்தது சமூக இடைவெளியை பாதுகாப்பதாகும். ஏப்ரல் மாதம் ; இறுதி வரையில் நிலைமைகளை ஆராய்ந்து அதன் பின்னர் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்க முடியும். ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அவர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். அதில் எவரும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இன்று முழு உலகமே பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். எனவே நாமும் இதனை கருத்தில் கொண்டு நாட்டினை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை கையாள வேண்டும். எதிர்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு நாம் முகங்கொடுக்க வேண்டிவரும். எனவே இந்த சவால்களை நாம் அனைவரும் இணைந்து வெற்றிகொள்ள வேண்டும்.
பாராளுமன்றமே ஜனநாயகத்தை பலபடுத்த பிரதான காரணியாகும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தேசிய அனர்த்தம் ஒன்றாக மாறியுள்ள நிலையில் மக்களை பாதுகாக்க சுகாதார அதிகாரிகள், அசர அதிகாரிகள், பாதுகாப்பு அதிகரிகள் எடுத்துவரும் நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். எனது சுகாதார சேவையின் தரம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது, அதேபோல் குறைபாடுகள் உள்ளன அவை குறைத்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நாளாந்த வாழ்கையை வாழும் மக்கள் அதிகமானவர்கள் கஷ்டப்பட்டுள்ளனர் அவர்களை பாதுகாக்க அரசாங்கம் ; நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் விடுபட்டுள்ள சகலருக்கும் உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விடயங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது.
பாராளுமன்றம் தேவையில்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் பாராளுமன்றமே ஜனநாயகத்தை பலபடுத்த பிரதான காரணியாகும். ஜனாதிபதி பிரதமர் அனைவரும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆகவே பாராளுமன்றம் வேண்டாம் என்ற இந்த காரணிகளை அவர்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற கட்டமைப்பு மிகவும் அவசியமானது. இந்த நெருக்கடியில் பொருளாதாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வெறுமனே நோயில் இருந்து விடுபடுவது மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடாது. எனவே அதற்கான கவனம் செலுத்தபட வேண்டும். பிரதமர் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகின்றார். ஜனாதிபதியும் அதேபோல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடியுமென்றால் அது ஆரோக்கியமானதாக அமையும்.
ஆர்.யசி