அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் – அமிதாப்பச்சன் வேண்டுகோள்

அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப் பாடுகள் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறவர்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதுபோல் சுயநலமில்லாமல் பணியாற்றுபவர்களால் தான் ஊரடங்கு வெற்றிகரமாக நடக்கிறது. உணவு பொருட்களும், மருந்துகளும் தடையில்லாமல் கிடைக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது. எனவே மக்கள் பொறுமையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாரும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்போடு இருங்கள்.