பயனர்களின் தனிப்பட்ட உரையாடல் பற்றிய தரவுகளைச் சேமித்து வைத்ததாக மோஸில்லா ஃபயர்ஃபாக்ஸை ட்விட்டர் குற்றம் சாட்டியுள்ளது.
அதாவது பொதுப் பயன்பாட்டில் இருக்கும் கணினினியில், மோஸில்லா ப்ரவுசரில் நீங்கள் ட்விட்டர் பயன்படுத்தியிருந்தால், அதில் டைரக்ட் மெஸேஜ் மூலமாக உரையாடியிருந்தாலோ அல்லது உங்கள் ட்விட்டர் பக்கத் தரவுகளை மொத்தமாகப் பதிவிறக்கம் செய்திருந்தாலோ, நீங்க லாக் அவுட் செய்த பின்பும் அந்தத் தகவல் ப்ரவுசரின் கேச்சில் (cache) பதிவாகியிருக்கும்.
பொதுவாக மோஸில்லா ப்ரவுசரில் கேச்சில் இருக்கும் தகவல்கள் 7 நாட்களுக்குப் பின் தானாக அழிந்துவிடும். இந்தப் பிரச்சினையை சஃபாரி, க்ரொம் போன்ற மற்ற ப்ரவுசர்களைப் பயன்படுத்தும் பயனர்கள் எதிர்கொள்ளவில்லை என்றும் ட்விட்டர் கூறியுள்ளது.
இதற்குப் பதிலாக, ஏன் ட்விட்டர் நிறுவனம் எங்களை மட்டும் தனியாகக் குற்றம் சாட்டுகிறது என மோஸில்லா நிறுவனம் கேட்டுள்ளது.
“ஏன் ஃபயர்க்ஃபாக்ஸ் மட்டும்? இந்தத் தொழில்நுட்ப விஷயங்கள் சிக்கலானவை. கேச்சிங் என்பது சிக்கலானது. ஒவ்வொரு ப்ரவுசரும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். ட்விட்டர் அவர்கள் தளத்தை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே பிரவுசர்கள் நடந்துகொள்ளும். க்ரோம், சஃபாரியில் அவை கேச் செய்யப்படாமல் இருக்கலாம், ஃபயர்ஃபாக்ஸில் செய்யப்படுகிறது. அவ்வளவே.
நாங்கள் சரி, அவர்கள் தவறு என்று சொல்லவில்லை. இது பொதுவான பிரவுசர் நடத்தையின் வித்தியாசங்கள். இந்தத் தரவுகள் கேச்சில் சேமிக்கப்படாமல் இருக்க பொதுவான ஒரு வழிமுறையைப் பின்பற்றினால் போதும். ஆனால், சமீபகாலம் வரை ட்விட்டர் அதைச் செய்யவில்லை. எனவே அப்படி கேச் செய்யாத ப்ரவுசர்களை மட்டுமே சார்ந்து இயங்கியிருக்கிறார்கள்.
நீங்கள் பலர் பயன்படுத்தும் ஒரு கணிணியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் ட்விட்டர் தரவுகளை நீக்க வழி உண்டு. எதுவுமே செய்யவில்லை என்றாலும் 7 நாட்களில் அவை அழிந்துவிடும். வழக்கமாக எல்லா ப்ரவுசர்களுமே, சர்வரிலிருந்து பெறும் தரவுகளைக் கணினியில் சேமித்து வைக்கும். இது, ஒரே விஷயத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்யாமல் இருக்கவே.
இனி ட்விட்டர் தரவுகள் மோஸில்லா ப்ரவுசரில் சேமிக்கப்படாது. இந்த விஷயத்துக்கு வருந்துகிறோம்” என ஃபயர்பாக்ஸ் தரப்பில் விளக்கமும் மன்னிப்பும் தரப்பட்டுள்ளது.
இனி பொதுவான கணினியைப் பயன்படுத்தினால் லாக் அவுட் செய்வதற்கு முன்னர் ப்ரவுசரின் கேச்சை நீக்கிவிடுங்கள் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.