தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அரசாங்கத்திடம வலியுறுத்தியிருக்கிறது.
நாடளாவிய ரீதியில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவல் பாரிய நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்;ஷவிற்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறது.
காணாமல்போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கம் தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தற்போதையா நெருக்கடி நிலையில் தமது வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முடியாமல் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்திருக்கும் காணாமல்போனோரின் உறவுகளுக்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
கடந்த சில தசாப்த காலங்களில் பொதுமக்கள், பொலிஸார், இராணுவத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும், நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைக்கு அமைவாக, காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டு வரவு, செலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதுடன், அக்குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் இன்னமும் பல குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதுடன், அவற்றில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. எனவே தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.