இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர், ; மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று, அங்கு இரு நாட்கள் தங்கியிருந்தமை வெளிபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றாக முடக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த தொற்றாளர் தராபுரத்தில் மிக நெருக்கமாக பழகிய இரு குடும்பங்கள் விஷேட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தராபுரத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 500 பேர் வரையிலானோர் முடக்கப்பட்ட ஊருக்குள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார அதிகாரி, வைத்தியர் டி. வினோத் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இதுவரை 8 மாவட்டங்களில் உள்ள 16 பகுதிகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இதில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதி அபாயப் பகுதிகளாக பெயரிடப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 14 பகுதிகளும் உள்ளடங்குகின்றன.
புத்தளம் சாஹிரா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவர், இந்தோனேஷியாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பியவர் என்பது தெரியவந்தது. அதன்படி அவரது தொற்றுப் பின்னணியையும் தொடர்பாடல் வலையமைப்பையும் கண்டறிய விஷேட விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது குறித்த தொற்றாளர் கடந்த மார்ச் 15 ஆம் திகதி இந்தோனேஷியவில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் பகுதியில் மரண வீட்டுக்கு சென்று அங்கு இரு நாட்கள் தங்கியிருந்துள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்தே தாராபுரத்தை இரு வாரங்களுக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தராபுரத்தின் இரு கிராம சேவகர் பிரிவுகளுக்கு, உட்பட்ட பகுதிகளுக்குள் வெளியில் இருந்து யாரும் செல்வதோ அல்லது அப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்வதோ தடுக்கப்பட்டு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேவேளை புதிதாக முடக்கப்பட்ட பகுதிகள் பட்டியலில் கம்பஹா மாவட்டத்தின் நீர் கொழும்பு – கட்டான அக்கர பனஹ ;பகுதியின் கந்தசூரிந்துகம எனும் பகுதியும் உள்ளடங்கும். அந்த ஊரின் ; நாலரை வயது சிறுவன் ஒருவன் கொரோனா தொற்றுக்குள்ளகையுள்ளமை உறுதியானதையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டு சுகாதார, பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ;யாழ். மாவட்டத்தின் அரியாலை, களுத்துறை மாவட்டத்தின் ; அட்டுலுகம மற்றும் பேருவளையின் சில பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அக்குரணை, புத்தளம் மாவட்டத்தின் கடையன் குளம் மற்றும் நாத்தாண்டி, கம்பஹா மாவட்டத்தின் கொச்சிக்கடை – போரத்தொட்டை, ஜா எல பகுதியின் சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை, குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல, கொழும்பு மாவட்டத்தின் கிராண்பாஸ் காவல் துறை பிரிவின் டி வாஸ் லேன், மருதானை காவல் துறை பிரிவின் இமாமுல் அரூஸ் மாவத்தை, இரத்மலானையின் ஸ்ரீ ஜனநானந்த மாவத்தை ஆகிய பகுதிகளும் குருணாகல் மாவட்டத்தின் கட்டுபொத்தை – கெக்குனுகொல்ல, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ – மாலிதுவ பகுதியும் முடக்கப்பட்டுள்ளன
அதன்படியே மொத்தமாக தற்போது நாடளாவிய ரீதியில் 8 மாவட்ட்ங்களில் 14 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது