அவுஸ்ரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி

அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து 2 சிறுவர்களை தீவிரவாத தடுப்பு போலீஸ் படையினர் நேற்று(13) கைது செய்தனர்.

ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ஐ.எஸ். அமைப்பின் சார்பில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி செய்து, 16 வயதே ஆன 2 பேர், கத்திகள் வாங்கி இருக்கிறார்கள்.

அவர்களை சிட்னி நகரில் தீவிரவாத தடுப்பு காவல் படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளும், மதம் தொடர்பான குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

அவர்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்போவதாக தங்களது தாயாரிடம் பேசியதை தீவிரவாத தடுப்பு காவல் படையினர் இடை மறித்துக்கேட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த காவல்துறை அதிகாரிகள், கைது செய்யப்பட்ட சிறுவர்கள்மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என கூறினர்.