சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘புல்லட்’ பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் ‘புல்லட்’ பிரகாஷ். இவருக்கு வயது 44. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த ஒரு மாதமாக துபாயில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி அவர், பெங்களூரு கன்னிகாம் சாலையில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ‘புல்லட்’ பிரகாசின் உடல்நிலை நேற்று மோசமானது. செயற்கை சுவாச கருவி பொருத்தி அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் மரணம் அடைந்தார். சிறுநீரக கோளாறு மற்றும் கணையம் உள்பட உடல் உறுப்புகள் செயலிழந்ததால், அவர் மரணம் அடைந்ததாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.
அவர் எப்போதும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வந்தார். அதனால் அவர் புல்லட் பிரகாஷ் என்று அழைக்கப்பட்டார். துருவா, அதிலக்கடி, ஆர்யண் உள்பட சுமார் 325 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் ரவிச்சந்திரனின் ‘சாந்தி கிராந்தி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு 1998-ம் ஆண்டு அதே ரவிச்சந்திரனின் பிரித்சோது தப்பா என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் நடிகர் சுதீப் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு கைதி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவராஜ்குமார், புனித்ராஜ்குமார், தர்ஷன், உபேந்திரா ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
குண்டான உடல் தோற்றத்துடன் காணப்பட்ட ‘புல்லட்’ பிரகாஷ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்தார். அதன்பிறகு அவருடைய உடல் நிலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. அத்துடன் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. இதன்காரணமாக ‘புல்லட்’ பிரகாஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக அவருடைய நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.