ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஓ’கீபே. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடும்போது ஒரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.
35 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், நியூ சவுத் வேல்ஸ் அணி அவரை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இதனால் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த முடிவு குறித்து ஸ்டீவ் ஓ’கீபே கூறுகையில் ‘‘நான் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை என்று கூறும்போது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் முடிவுக்கு நான் மரியாதை கொடுத்து ஏற்றுக்கொள்கிறேன். ஆகவே, முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். நான் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய காலத்தைப் பற்றி நினைக்கும்போது, நான் பலவற்றை தவறவிட இருக்கிறேன்’’ என்றார்.