யுத்தத்தின் போது ‘செல்’ துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது செல் துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர். இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசு விடுதலை செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.