பனங்களியிலிருந்து பெறப்படும் பனாட்டுக்களை இலகுவான முறையில் உலரவிட்டுப் பயனடையும் நோக்குடன் சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு 12 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.
இலங்கையிலேயே முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இந்தப் பொறி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்கவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்க கலந்து கொண்டு பனாட்டு உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பான செயன்முறை விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பி.பன்னீர்ச் செல்வம், பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஸ்ரீ விஜேந்திரன் மற்றும் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், வடமாகாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஸ்ரீ விஜேந்திரன் குறித்த நவீன பொறி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
பனாட்டு பாரம்பரிய உற்பத்தி முறையில் காயவைக்கும் போது தரமான உற்பத்திகளைப் பெறுவது கடினமாகவிருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தப் பொறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த காலப் பகுதியில் தரமான, ஏற்றுமதிக்கு உகந்த பனாட்டுகளை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.
பனம் பழங்களிலிருந்து பனாட்டுக்களை உற்பத்தி செய்கின்ற பிரதேசங்களில் இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்வதன் மூலம் பனாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகின்றோம் என்றார்.
பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பி. பன்னீர்ச் செல்வம் கருத்துத் தெரிவிக்கையில், இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பொறி மூலம் குறைந்த நேரத்தில் விரைவாகப் பனாட்டு உற்பத்தியைப் பெறுவதுடன், சுகாதாரம் அதிகமாகப் பேணப்படும்.
மூன்று நாட்களில் பத்துக் கிலோ பனாட்டுக்களை இந்த இயந்திரம் மூலம் உற்பத்தி செய்ய முடியும். குறித்த இயந்திரத்தில் உணவுத் தரத்திற்கேற்ப ஐந்து தட்டுக்கள் காணப்படுகின்றன.