உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது.
கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை வல்லுநரான லிஸ் அல்லென்.
ஆஸ்திரேலியாவில் வயதான மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நிலையில், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை சமாளிக்க வெளிநாட்டினரின் குடியேற்றம் தேவையானது என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் லிஸ் அல்லென்.
வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பை “பொருளாதாரத்திற்கான டைம்-பாம்” என கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அரசின் பொருளாளர் ஜோஷ் ப்ரீடென்பெர்க் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த பத்து ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் எனப்படுகின்றது. இதனால் சுகாதாரம், பராமரிப்பு, ஓய்வூதியம் திட்டங்களுக்கு என வயதானவர்களுக்கு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்த நிதிச் சுமை குறைந்துவரும் உழைக்கும் வயது ஆஸ்திரேலியர்களின் மீதே தலையிலேயே வைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
“புலம்பெயர்ந்தோரும் தங்கள் செலவீனங்கள் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்றனர். அது வணிகங்கள் செழிக்கவும் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்கிறது,” என்கிறார் லிஸ் அல்லென்.
பொருளாதாரம் மீது மக்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை என்றால் மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை தவிர்க்க செய்யக்கூடும் என்ற கருத்தை அல்லென் முன்வைக்கிறார். இது எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
தற்போது பிறப்பு விகிதம் ஓரளவு மட்டுமே குறையலாம் எனக் கணிக்கும் லிஸ் அல்லென், ஆனால் பிறப்பு விகிதம் ஏற்கனவே சராசரியை விட குறைவாகவே உள்ளது என்கிறார்.
“ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைந்தது என்றால், பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள (வெளிநாட்டினர்களின்) குடியேற்றம் தேவையானது,” எனத் தெரிவித்திருக்கிறார் மக்கள் தொகை வல்லுநரன லிஸ் அல்லென். இந்த குடியேற்றம் மூலமே ஆஸ்திரேலியாவில் ஏற்படக்கூடிய தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.