வூஹான் வைத்தியர் விளக்கம்
கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயாக விளங்கிய மத்திய சீன நகரமான வூஹான் இருமாதகால முடக்கத்திற்குப் பிறகு மெதுமெதுவாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது. வூஹானிலும், அதை உள்ளடக்கிய ஹூபே ;மாகாணத்திலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு எவருக்குமே தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோருக்குத் தினமும் அந்நகரில் தொற்று ஏற்பட்டுக்கொண்டிருந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இத்தகையதொரு மீட்சிநிலை நினைத்துப் பார்க்க முடியாததாகும்
அந்த நகரில் கொவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் வைத்தியசாலையின் தொற்றுநோய்ப்பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹொங் ஸீஓசியோங்
அவர் இந்தியாவின் பிரபல ஆங்கிலத்தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘த இந்து”விற்கு அளித்த பேட்டியொன்றில் வூஹான் போராட்டத்திலிருந்து பெற்ற முக்கிய படிப்பினைகள் அனுபவங்கள் குறித்து விளக்கமளித்தார். முக்கியமாக மென்மையான அறிகுறிகள் இருந்த நோயாளிகள் உட்பட சகல நோயாளிகளையும் அவர்களது வீடுகளிலிருந்து மத்திய தொற்றுத்தடுப்புக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று பரந்தளவு மருத்துவ பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மூலமாகத் தொற்றுச்சங்கிலியைத் தகர்த்ததே குறிப்பிடத்தக்கதொரு படிப்பினையாகும் என்று கூறியிருக்கிறார்.
கேள்வி : புதிய தொற்றுக்கள் மற்றும் நீங்கள் சிகிச்சையளிக்கின்ற தற்போதைய நோயாளிகளின் தற்போதைய நிலைமை என்ன?
பதில் : தற்போது வூஹானிலும், ஹூபே மாகாணத்திலும் இருமாதகால தடுப்பு முகாமைத்துவத்தின் மூலம் நோய்நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாகத் தொற்றுக் எவருக்கும் ஏற்பட்டதாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் இன்னமும் கூட நாம் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பையே மேற்கொள்கின்றோம்.
கேள்வி : நெருக்கடி உச்சகட்டத்தில் இருந்தபோது உங்களது அனுபவம் எவ்வாறாக இருந்தது?
பதில் : தொடக்கத்தில் மிகவும் பெருமளவில் நோயாளிகளுக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. நோயாளிகளை அனுமதிப்பதற்கு போதுமான படுக்கைகள் வைத்தியசாலையில் இருக்கவில்லை. தனிப்பட்ட தடுப்பு உபகரணங்களுக்கும் பற்றாக்குறை காணப்பட்டது. கடுமையான தொற்றுக்கு உள்ளாகியோரையும், ஆபத்தான நிலையிலிருந்தவர்களையும் அனுமதிப்பதற்கு எமது வைத்தியசாலை தனியான வளாகமொன்றை – எமது கிழக்கு வளாகத்தை பிரத்யேகமாக ஒதுக்கியது.
கேள்வி : எப்போது திருப்புமுனை ஏற்பட்டது?
பதில் பெப்ரவரி மாத இறுதியில் புதிதாகத் தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களினதும், தொற்றுக்கு இலக்கானவர்களாக சந்தேகிக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்ட போது நாம் திருப்புமுனையை அடைந்தோம். இப்போது எவருக்கும் தொற்று ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை
கேள்வி : நகரையும், மாகாணத்தையும் முடக்கியதைத் தவிர இந்த வைரஸ் தொற்றைக் கையாள்வதில் கடைப்பிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான நடவடிக்கைகள் எவையென நீங்கள் கருதுகின்றீர்கள்? எந்த நடவடிக்கைகள் வேறுபட்ட முறையில் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
பதில் பெருமளவு தொற்றுப் பரவலைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரை தொற்றுக்கு உள்ளாகியவர்களைக் கையாள்வதும், கட்டுப்படுத்துவதும் அதன்மூலம் பரவலை முறியடிப்பதும் முக்கியமான நடவடிக்கைகளாகும். மென்மையானதுமான, மிதமானதுமான தொற்றுக்கு உள்ளானவர்களைப் பொறுத்தவரை அவர்களை தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு மாற்றுவது நல்லதொரு நடைமுறை என்று நாம் கண்டோம். அவ்வாறு 16 தற்காலிக வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் மக்கள் ஒன்றுகூடுவதையும் தவிர்க்கிறோம். முகக்கவசம் அணிவதும், கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் கூட முக்கிய நடவடிக்கைகளே. இவை தவிரவும் மரணங்கள் நிகழக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான அவர்களுக்கு ஏற்பட்ட தொற்றை நேரகாலத்துடன் கண்டறிவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
கேள்வி : மென்மையான தொற்றுக்கு உள்ளானவர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி வைப்பதற்குப் பதிலாக மத்திய மயப்படுத்தப்பட்ட தொற்றுத்தடுப்புக் காவலிலும், தனிமையிலும் பெருமளவில் ஏன் வைத்தீர்கள் என்பதை விளக்கமுடியுமா?
பதில் தொற்றுத்தடுப்புக் காவலும், வீட்டில் தனிமைப்படுத்தலும் வேறுபட்ட நாடுகளின் சூழ்நிலைகளில் தங்கியிருக்கின்றன. சீனாவிலும், இந்தியாவிலும் சனத்தொகை பெரியதாக இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் பல உறுப்பினர்கள் இருக்கலாம். அவர்களுள் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்று ஏற்படுவது வழமையாகும். மென்மையானதும், மிதமானதுமான தொற்று ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை தற்காலிகமாக நிறுவப்பட்ட வைத்தியசாலைகள் ஒரு நல்ல தொற்றுத்தடுப்புக் காவலாகவும், தனிமைப்படுத்தக்கூடிய இடமாகவும் இருக்கின்றன. ஒரு குடும்பத்திற்குள் தொற்று ஏற்படுவதைத் தடுத்து, தொற்றுச் சங்கிலியைத் தகர்க்க இது உதவுகின்றது.
கேள்வி : வூஹானில் மருத்துவ பரிசோதனை எந்தவளவிலானதாக இருந்தது? அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததா அல்லது பரந்தளவில் இருந்ததா?
பதில் : வூஹான் நகர் முழுவதிலும் மருத்துவப் பரிசோதனை மட்டத்தைப் பற்றி சரியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஜனவரி நடுப்பகுதியளவில் நியூகிளிக் அமிலப்பரிசோதனையைச் செய்யக்கூடியதாக இருந்தபோது தினமும் 1000 இரத்த மாதிரிகளை எமது வைத்தியசாலையில் மாத்திரம் செய்தோம். இப்போது சகல மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும். ஏனெனில் பரிசோதனை உபகரணங்களும், பதார்த்தங்களும் போதுமான அளவு விநியோகிக்கப்படுகின்றன. கொவிட் – 19 வைரஸிற்கான பரிசோதனை மிகவும் முக்கியமான – ஒரு மையமான பாத்திரத்தை வகிக்கிறது. ஏனென்றால் புதிதாகத் தொற்றுக்கு இலக்கானோரையும், தொற்றுக்கு இலக்கானதாகச் சந்தேகிக்கப்படுவோரையும் விரைவாகக் கண்டறிய நாம் விரும்புகிறோம். அவ்வாறு செய்யும் போதுதான் நோயாளிகளைத் தனிமைப்படுத்தவும், தொற்றைத் தகர்க்கவும் முடியும்.
கேள்வி : மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இருக்கின்ற பெரியதொரு சனத்தொகையில் பரந்தளவிலான பரிசோதனைகளுக்கு மாற்று ஏதேனும் இருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில் பரிசோதனைகளுக்கு விஞ்ஞானிகள் வேறுபட்ட நுட்பங்களை வைத்திருக்கிறார்கள். உதாரணமாக நோயெதிர்ப்புப் பதார்த்தக் கண்டுபிடிப்பும், நியூகிளிக் ஆசிட் கண்டுபிடிப்பிற்கான வேறுபட்ட முறைகளும் கூட இதில் பயன்படுத்தப்பட முடியும். அனுபவம் வாய்ந்த கதிரியக்க நிபுணர் சி.ரி.ஸ்கேனை அடிப்படையாக் கொண்டு தொற்று ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிப்பவருக்குத் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிவார்.
கேள்வி : வேறு ஏதாவது படிப்பினைகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்களா?
பதில் : வைரஸ் முழு மனிதகுலத்திற்குமே ஒரு பொது எதிரி. முழு உலகமுமே ஐக்கியப்பட வேண்டும். இந்த இடர்மிகு நேரத்தில் மக்கள் சாத்தியமானளவு விரைவாக இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.