பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தால் சுட்டுத் தள்ளப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸில் 2,633 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.