தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டியில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் போர்ட் எலிசபெத்தில் நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா-அவுஸ்ரேலியாஅணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில் 4-வது ஒருநாள் போட்டியில் 17-வது ஒவரின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஷம்சி வீசிய பந்தை அடித்து ஆடினார்.

அப்போது திடீரென இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக திட்டி கொண்டனர். அடுத்த பந்தில் ரன் எடுக்க ஓடுகையில் மேத்யூ வேட், ஷம்சியின் தோள்பட்டையில் முழங்கையால் இடித்தார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் உருவானது. நடுவர்கள் தலையிட்டு இருவரையும் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மோதலில் ஈடுபட்ட மேத்யூ வேட், ஷம்சி ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.