இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கு நியூஸி. கப்டனின் அறிவுரை

வரும் மாதங்களில் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருப்பதை முன்னிட்டு நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன் எளிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்திய அணியிடம் 0-3 என்று ஒயிட்வாஷ் ஆன நியூஸிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்று டெஸ்ட்டிலும் தோல்வி தழுவியது. இந்திய பிட்ச்களில் முதலில் பேட் செய்யும் சாதகங்களைக் குறிப்பிட்டு கேன் வில்லியம்சன் கூறும்போது,

“டாஸில் வெல்வது உதவியாக இருக்கும். நிச்சயம் அணிகள் இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்ட்த்திறனை வெளிப்படுத்துவது அவசியமான தேவை. கிரீசில் அதிக நேரம் செலவிட்டு முதலில் பேட் செய்வதான முழு சாதகங்களையும் பயன்படுத்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பதுதான் வழி. 2-ம் 3-ம் நாளில் முதல் இன்னிங்ஸை ஆடுவது கூட இந்திய பிட்ச்களில் கடினமே.

இந்த இந்திய அணி மிகச்சிறந்த அணியாகும், இங்குள்ள நிலைமைகளை நன்கு அறிந்துள்ளனர் என்பதில் ஒருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை. இந்தத் தொடரில் இந்திய அணி மிகச்சிறந்த அணியாக திகழ்ந்தது.

உண்மையில் தோல்வி பெருத்த ஏமாற்றமளிக்கிறது. களத்தில் இறங்கும் போது முழுத்திறமையையும் காட்டி முழு பங்களிப்பு செய்யும் உற்சாகத்துடன் இறங்க விரும்பினோம், ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் போனது.

அஸ்வின் பந்து வீச்சுக்கு எதிரான மனத்தடை எதுவும் இல்லை. அவரது பந்துவீச்சின் தரம் பற்றிய கேள்வியாகும் இது. தொடர் நாயகனாக அவரைத் தேர்வு செய்ததற்கு முழுத் தகுதி படைத்தவர்தான் அவர்.

எங்களைப் பொறுத்தவரை உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களுக்கு எதிரான அனுபவம் பெற்றதே ஒரு உடன்பாடான அம்சமாகும். வெறுப்படையும்போதுதான் நாம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்றார்.