“உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்” -எஸ்.ராமகிருஷ்ணன்
சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் துடிப்பான, எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய இளம் மனங்களில் எது சரி, எது தவறு என்றுணரும் பக்குவத்தையும் எழுத்து வடிவில் விதைக்கின்றன.
குழந்தைகளானவர்கள் தாங்கள் எவற்றைப் பார்க்கிறார்களோ, படிக்கிறார்களோ அவற்றையே தங்களின் முன்-மாதியாகக் கொள்கிறார்கள். புத்தகங்கள், சிறுவர்களுக்கு எவ்வாறு வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திப்பதெனக் கற்றுக் கொடுக்கின்றன; அவை அவர்களுக்கு வாழ்வியல் சாத்தியங்களை பற்றிச் சிந்திக்க ஒரு களமாக அமைகின்றன; மட்டுமல்லாமல், புத்தகங்கள் நம் முன்னோர்களின் சேகரிக்கப்பட்ட அறிவையும், அதன் மூலமாக பண்பாட்டையும், சமூக மதிப்பீடுகளையும் சிறுவர்களுக்குள்ளே புகுத்துகின்றன.
சிறுவர்களின் புலனுணர்வு வளர்ச்சி, வார்த்தைகளை வெளிப்படுத்தும் திறன், கல்வி வளர்ச்சி -இவற்றிற்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய குழந்தை தெளிவான வார்த்தை உச்சரிப்பை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்ற குழந்தைகளை விட அதிகமாக பகுத்தறியும் திறன், எழுத்தாற்றல் மற்றும் விமர்சிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
இப்படியாக நம்மை நல்ல வாசிப்பாளர்களாக வார்த்தெடுத்த சிறுவர் இலக்கிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. இப்போது நாம் இருக்கின்ற இந்த இணைய உலகில், முன்பிருந்ததை விட மிக அதிகமான அளவில் சிறுவர் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. எண்ணிலடங்கா மின்-நூல்களும், இணைய நூல்களும் உள்ளன. வெவ்வேறு சிறுவர் இலக்கிய நூலாசிரியர்கள், வெவ்வேறு கதைக்களங்கள், வெவ்வேறு விதமான கதை சொல்லும் யுக்திகள், வெவ்வேறு வாசகர்கள், வெவ்வேறு வடிவங்கள் -என காலங்கள் மாற மாற, வளர்ந்து வரும் சமூகச் சூழல்களுக்கு ஏற்ப சிறுவர் நூல்களும் பல தலைமுறைகளாக, பல மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளன. இருப்பினும் எல்லா காலத்திலும், எல்லா தலைமுறையினரும் விரும்பி வாசித்த நூல்கள் எனச் சில நூல்கள் காலத்தால் அழியா புகழோடு உள்ளன. அவற்றை நாம் Classic Children’s Literature என்கிறோம்.
எத்தனை நவீன கதைகள் பல்வேறு காலங்களில் வெளிவந்திருந்தாலும், அவை ஒருபோதும் ‘ஹக்ல்பெரி ஃபின்’–ன் சாகசங்களுக்கும், கட்டை விரல் அளவு குட்டையான ‘தம்பலீனா’-வுக்கும், வெவ்வேறு உலகங்களில் பயணித்து வந்த ‘ஆலீஸ்’-கும் ஈடாகாது. இந்த பட்டியலில் இன்னும் பல தேவதைகளும், இளவரசிகளும், சில குட்டி முயல்களும், கரடிகளும் கூட அடங்கும். இவ்வகையான போற்றத்தக்க சிறுவர்களுக்கான நூல்களைப் படைத்தவர்களில் ‘ரால்ட் டால்’, ‘எனிட் பிளைடன்’, ‘சி.எஸ்.லூயிஸ்’, ‘பீட்ரிக்ஸ் பாட்டர்’, ‘சார்லஸ் டிக்கன்ஸ்’, ‘ஆண்டர்சென்’, ‘A.A.மில்னே’, ‘மைக்கேல் பாண்ட்’, ‘E.B.வைட்’, ‘மார்க் ட்வைன்’ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ அவர்களுக்கு இந்நாளுக்குரிய தனிச் சிறப்பு உண்டு! அவரைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்!
நம்முடைய சுய சிந்தனைகளையும், உணர்வுகளையும், நெறிமுறைகளையும், நம் இயல்புநிலை பாதிக்காமல் பாதுகாப்பான முறையில் அந்த சிறுவர் நூல்கள் நம்முள்ளே வளர்த்தது போல வேறெந்தவொரு நிகழ்வும் செய்திருக்க முடியாது. ஆனால் இன்றிருக்கும் சூழலில் “சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்” போல ஏதாவதொரு தினத்தில் தான் இது போன்று சிறுவர் நூல்களைப் பற்றி விவாதிக்க முடிகிறது. வருடங்கள் இத்தனை கடந்த பின்னும், எங்காவது நூலகங்களிலோ, புத்தகக் கடைகளிலோ சிறுவயதில் வாசிக்காத ஏதேனும் சிறுவர் இலக்கிய நூல்களைக் காண நேர்ந்தால், அந்தப் புத்தகங்களை இழந்து விட்ட இளம்பருவத்தினை எண்ணி மனம் கசந்து போகிறது.
சர்வதேச சிறுவர் நூல்கள் தினம் (International Children’s Book Day)
InternationalBoard on Books for Young People [IBBY] –ன் ஆலோசனைப்படி ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ (International Children’s Book Day) 1967 முதல் டானிஷ் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ (Hans Christian Andersen) அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 2-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புத்தக வாசித்தலை ஊக்குவிக்க, மற்றும் சிறுவர் நூல்கள் மீதான கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் IBBY-யின் ஒரு தேசியப் பிரிவுக்கு இந்த சர்வதேசக் கொண்டாட்ட நிகழ்வினை அமைக்கும் வாய்ப்புக் கொடுக்க படுகிறது. அதுபோலவே, ஒவ்வொரு ஆண்டும் சிறுவர் இலக்கிய நூல்கள் சார்ந்த ஒரு பொதுவான கருத்தை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி அமைக்கப்படுகிறது. இந்த சிறுவர் நூல்கள் தினத்தன்று IBBY, சிறுவர் இலக்கியங்கள், சிறுவர் நூல் எழுத்தாளர்கள், ஓவியர்கள் (Illustrator) -இவர்களை மையமாகக் கொண்ட ஓவியப் போட்டி, சிறுவர்களுக்கான எழுத்துப் போட்டி, போன்ற பல போட்டிகள் மற்றும் அந்த ஆண்டின் சிறந்த நூல்களுக்கான விருதுகளையும் அறிவிக்கின்றது.
தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் சிறுவர் நூல்கள் தினம்!??!..
நாம் தென்-கிழக்கு நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வசிப்பதினால், நம்முடைய பக்கங்களில் இந்த ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ எவ்வாறு கொண்டாடப்படுகிறது என ஆராய்ந்தோமானால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நம் மக்களிடையே இந்தத் தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமைக்கு காரணம் என்ன? எழுத்தாளர் சு.சி. கூறுகிறார்: “நாம் வசிக்கும் தென்-கிழக்கு நாடுகளில் பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளும், வறுமையுள்ள நாடுகளுமே அதிகம். இந்தியா, வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் -இது போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிப்படையான உணவு, கல்வி குறித்த பிரச்சனைகளே இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.
எனவே இந்த அரசாங்கங்கள் இவற்றை முழுமைப் படுத்துவதற்கான முயற்சிகளிலேயே இன்னும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் விழிபிதுங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் குறிப்பாக சிறுவர் இலக்கியங்களின் மீது கவனம் செலுத்தி, அந்தச் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, இந்தச் சிறுவர்களுக்கு அடிப்படைக் கல்வியை மையப்படுத்தி செயல்படுத்தும் போது, அக்கல்வியோடு சார்ந்த சிறுவர் இலக்கியங்களை அவர்களிடையே புகுத்தினால் தான் அவர்களுக்கும் விழிப்புணர்வும், ஆர்வமும் உண்டாகும். இங்கிருக்கக் கூடிய நூலகங்களும் வெறும் இயக்கங்களாகவும், கட்டிட அளவிலேயும் நில்லாமல், பிற்படுத்தப்பட்டப் பகுதிகளிலுள்ளச் சிறுவர்களை நாடி ‘நடமாடும் நூலகங்களாக’ (Mobile Libraries) வரவேண்டும்.
இப்படி சாதாரண மக்களிடமும் நூல்களை அறிமுகப்படுத்தினால் தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் சிறுவர் இலக்கிய நூல்கள் வளம் பெறும். பத்து ஆண்டுகளில் இன்றைய சிறுவர்கள் எதிர்காலத்தின் சிக்கல்களைச் சமாளிக்கக் கூடிய சிந்தனையுடைய இளைஞர்களாக மாறுவதற்கு இதன் மூலம் வாய்ப்பு உள்ளது.”
இவ்வாறாக தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் ‘சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்’ மற்றும் இன்னபிற புத்தகம் சார்ந்த நிகழ்வுகளின் பால் விழிப்புணர்வு ஏற்படாமல் இருந்தாலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிலை மாறி வருகிறது. ஆம்! புதிது புதிதான பதிப்பாளர்கள் இளம் எழுத்தாளர்கலை ஊக்குவித்து நல்ல நூல்களை நம்முடைய பகுதிகளில் வெளிவரச் செய்கிறார்கள். மேலும் பள்ளி-கல்வி இயக்கங்களும் இப்போது புத்தகங்கள் மீதாக மாணவர் கவனத்தை செலுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நூலகங்களும் எழுத்தாளர் சொன்னது போல மக்களை நாடி வீதிகளுக்கு வரத் தலைப்பட்டுவிட்டன. வளர்ந்து வரும் நாடான இந்தியா-வில், குறிப்பாக தமிழகத்தில் இந்த முன்னேற்றம் பாராட்டத் தக்கதே!
சரி, ஏன் இந்த சர்வதேச சிறுவர் நூல்கள் தினம் ஆண்டர்சென் பிறந்தநாளின் போது கொண்டாடப்படுகிறது? யார் இவர்?
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென் (Hans Christian Andersen)
இலக்கிய உலகில், குறிப்பாக ‘தேவதைக் கதை’ எழுத்தாளர்களில் மிகவும் போற்றத்தக்கவர் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ (Hans Christian Andersen). இவரைத் தவிர்த்து பார்த்தால் சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் வெகு சிலரே உள்ளனர். ஆண்டர்சென்-ன் படைப்புகள் பெரும்பான்மையான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், உலக இலக்கிய அரங்குகளில் மிகப் பரவலாக வாசிக்கப்படும் படைப்புகளும் இவையே.
எச்.சி.ஆண்டர்சென் அவர்கள் டென்மார்க்-ல் உள்ள ‘ஓடென்ஸ்’ என்னும் சிறிய நகரில் 1805-இல் ஏப்ரல் 2-ஆம் நாள் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழலில் இருந்த இவர் டேனிஷ் அரசின் உதவியால் கல்வி கற்க நேர்ந்தது. ஆண்டர்சென் சிறுவயதியே புத்திசாலியாகவும், நல்ல கற்பனை வளம் மிக்கவராகவும், நிறைய புத்தகம் படிப்பவராகவும் இருந்தார். சிறுவயதில் வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை இவர் மிக விரும்பிப் படிப்பவராயிருந்தார்.
இலக்கியம் மற்றும் நாடகங்களில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்த ஆண்டர்சென் தனது 14-வது வயதில் [1816] ‘டென்மார்க்’ தலைநகரான ‘கோப்பென்ஹாகன்’ சென்று தன் திறமையை வளர்க்க முயன்றார். அங்கு இவரின் குரல் வளத்தினால் ‘ராயல் டானிஷ் தியேட்டர்’-ல் வாய்ப்பு கிட்டியது. ஆனால், சில காலங்களிலேயே அவரின் குரல் உடையத் தொடங்கியதும் அந்த வாய்ப்பும் போய்விட்டது.
1822-ல் ஒரு நலம் விரும்பியின் உதவியினால் ஆண்டர்சென்-க்கு Slagelse பள்ளியில் இலக்கணம் படிக்கும் வாய்ப்பு கிடைத்து. இச்சமயத்தில் அவர் தனது முதல் கதையான ‘The Ghost at Palnatoke’s Grave’ –ஐ வெளியிட்டார். பின், 1827 வரை ‘எல்சிநோர்’-ல் தங்கிப் படித்தார்.
‘A Journey on Foot from Holmen’s Canal to the East Point of Amager’ என்னும் சிறுகதையின் மூலம் 1829-ல் ஆண்டர்சென் மிகப்பெரும் வெற்றியை அடைந்தார். அதேநேரத்தில் அவரின் முதல் நாடகமான ‘A Farce’ மற்றும் முதல் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டார். 1833-ல் டானிஷ் அரசவையிலிருந்து கிடைத்த மானியத்தின் உதவியால் மேற்கொண்ட பயணங்களின் போது புகழ்பெற்ற ‘Agnete and the Merman’-யும், 1834-ல் அவரது முதல் நாவலான ‘The Improvisatore’-யும் எழுதிமுடித்தார்.
1835-ல் எழுத்தாளர் ஆண்டர்சென்-ன் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி, இலக்கிய வரலாற்றில் அவரது பெயரை ஆழப்பதித்த பெரும்படைப்பான ‘தேவதைக் கதைகள்’ [‘Fairy Tales] வெளியிடப்பட்டது. மேலும் இவரின் குறிப்பிடத்தக்கப் படைப்பாகப் போற்றப்படும் ‘The Ugly Duckling’ என்னும் சிறுவர் கதையை 1837-ல் வெளியிட்டார். இவருடைய பயணக்கட்டுரைத் தொகுப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆண்டர்சென் எழுதிய, திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் மிகப் புகழ்பெற்ற படைப்புகளின் பட்டியல் மிக நீளமானது. அவரின் ‘The Ugly Duckling’, ‘The Snow Queen’, ‘Thumbelina’, ‘The Emperors New Clothes’, ‘The Princess and the Pea’ and ‘The Little Mermaid’ போன்றவை காலத்தினால் அழிக்க முடியாத படைப்புகளாக இலக்கிய உலகில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றன.
சிறுவர் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் படைப்புகளை இயற்றிய ஆண்டர்சென்-ஐ சிறப்பு செய்யும் விதமாக கோப்பென்ஹாகன் துறைமுகப் பகுதியில் அவருடைய சிலையை நிறுவியுள்ளது டென்மார்க் அரசு. மேலும் இவரின் பிறந்தநாள் “சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்” எனக் கொண்டாடப்படுகிறது.