உலகின் பிற பகுதிகளைப் போலவே ஆஸ்திரேலியா எங்கும் பெருகிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இடையேயும் பரவியுள்ளது. இந்த நிலையில், தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்குமாறு எழுந்த கோரிக்கையினை ஆஸ்திரேலிய உள்துறை நிராகரித்துள்ளது.
முன்னதாக, கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சம் காரணமாக குடிவரவுத் தடுப்பில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை இங்கிலாந்து அரசு விடுவித்திருந்தது. இதே போல், ஆஸ்திரேலிய அரசும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்கும் என குடிவரவு வழக்கறிஞர்களும் அகதிகளும் எதிர்ப்பார்த்த நிலையில் அக்கோரிக்கையினை ஆஸ்திரேலியா நிராகரித்திருக்கின்றது.
“குடிவரவுத் தடுப்பில் சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்க முடியாது. அது சாத்தியமற்றது. இதனால் குடிவரவுத் தடுப்பில் உள்ளவர்கள் மட்டும் ஆபத்தில் இல்லை, அங்கு வேலை செய்பவர்களும் அவர்களது குடும்பமும் நண்பர்களும் ஆபத்தில் உள்ளனர்,” என குடிவரவு வழக்கறிஞரான அலிசன் பட்டிசன் எச்சரித்திருக்கிறார்.
ஆனால், தடுப்பில் வைக்கப்பட்டுள்ள எவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர்.
தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்களும் பாதிக்கப்பட்டவர்களாக சந்தேகிக்கும் நபர்களை கையாளுவதற்கான திட்டங்களும் நடைமுறையில் உள்ளதாகக் கூறுகிறார் உள்துறையின் பேச்சாளர்.
“தடுப்பில் உள்ளவர்களிடையே கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்படும் பட்சத்தில் அவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுரையின் படி தனிமைப்படுத்தப்பட்டு சோதிக்கப்படலாம்.”
இதுவரை குடிவரவுத்தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இடையே கொரோனா தாக்கம் ஏற்படவில்லை என்றாலும், தடுப்பு முகாம் காவல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்கள் (Onshore Detention Centres) மற்றும் மாற்று தடுப்பு இடங்களை (Alternate Places Of Detention) பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் Serco நிறுவன காவல் அதிகாரியான இவர், அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரிஸ்பேன் ஹோட்டலில் பணியாற்றி வந்திருக்கிறார்.
எனக்கும் மற்றவர்களுக்கும் தொற்று பரவுவது கணநேரத்தை பொறுத்தது என்கிறார் மாற்று தடுப்பு இடமாக செயல்படும் மெல்பேர்ன் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மோஸ். குர்து- ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரான இவர், ஆஸ்துமா சிகிச்சைக்காக பப்பு நியூ கினியா தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டவராவார்.
இவருடன் 65 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு குறிப்பிடும் சமூக இடைவெளி தாங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பின்பற்றப்படுவதில்லை என்கிறார்.
“உணவு அருந்துவதற்காக லிப்டில் செல்லும் போது 15 பேர் முதல் 20 பேர் வரை ஒன்றாக செல்கிறோம். உணவு பரிமாறுபவர்களில் பெரும்பாலானோர் எந்தவித கையுறைகளையோ முகமூடிகளையோ அணிவதில்லை,” என்கிறார் மோஸ்.
“பணிக்கு வரும் ஊழியர்களை பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் உடல்நலன் மற்றும் பயண விவரங்கள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுகின்றன. ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றது,” என காவல் அதிகாரி ஒருவர் தடுப்பில் உள்ள அகதிகளிடையே தெரிவித்துள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், தடுப்பில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திப்பதற்கான அனுமதியும் தற்போது வழங்கப்படுவதில்லை.