இணையத்தள ஊடகவியலாளர் நடராசலிங்கம் துஷாந் மீது கிளிநொச்சி – உதயநகர் அலுவலத்தில் வைத்து நேற்று (30) மாலை 5.30 மணியளவில் நால்வர் கொண்ட குழு தாக்கல் மேற்கொண்டுள்ளது.
பொல்லுகள் கொண்டு தாக்கியதுடன், போத்தல் ஒன்றை உடைத்து துஷாந்த் மீது குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவர் கைகளில் காயமடைந்துள்ளார்.
“உதயநகர் பகுதியில் அமைந்துள்ள துஷாந்த் பணியாற்றிய இணைய ஊடகம் ஒன்றின் அலுவலகப்பகுதியில் நபர் ஒருவர் நின்றதாகவும், அவரை அங்கிருந்து வெளியேறப் பணித்த போது, குறித்த நபர் மேலும் சிலரை அழைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மது போதையிலும் காணப்பட்டதாக” – அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது அலுவலகத்தில் இருந்த கம்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் அடித்து நொருக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அலுவலகத்தில் இருந்த மேலும் ஒரு நபரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவத்தை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் அவர்கள் இதுவரை விசாரணை செய்ய வரவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளானவர் இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.