கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!

கரோனா தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் வழியே புதுப் புது விஷயங்களைக் கண்டறியும் நிபுணர்கள் கழிப்பறைச் சுத்தமும் மிக முக்கியம் என்கிறார்கள். தொற்று ஏற்பட்டவர்களில் சரிபாதி நோயாளிகளுக்குச் செரிமானக் கோளாறு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்றாளர்கள் மலம் கழிக்கும்போது அதன் வழியாகவும் கரோனா வைரஸ் வெளியாகிறது. ஆகவே, ஒவ்வொருவரும் மலம் கழித்துவிட்டு, கழிப்புச் சாதனத்தை நன்கு சுத்தம் செய்வது அவசியம். கூடவே, ஒவ்வொரு முறையும் கழிப்பறைக்குச் செல்லும்போதும், கழிப்பு முடித்துத் திரும்பும்போதும் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். அதேபோல், ஒருவர் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வந்தால் சற்று இடைவெளி விட்டு அடுத்தவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். முக்கியமாக, மேற்கத்தியக் கழிப்பறையாக இருந்தால் உட்காரும் இடத்தில் கிருமிநாசினியைத் தெளித்து, சுத்தம் செய்துவிட்டே அதைப் பயன்படுத்த வேண்டும்.

ஊரடங்கிலும் பொதுப் போக்குவரத்தை ஏன் பிரிட்டன் இயக்குகிறது?

பிரிட்டனில் பிரதமர் ஜான்ஸனே கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்; இதுவரை பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது ஆயிரம். பிரிட்டனும் ஊரடங்கின் கீழ் இருக்கிறது. இந்த ஊரடங்கு மேலும் ஆறு மாதத்துக்கு நீடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் பிரிட்டிஷார். ஆயினும், சொந்த மக்கள் அவதிக்குள்ளாகக் கூடாது என்பதில் எப்போதும்போல் அக்கறை காட்டுகிறது பிரிட்டன் அரசு. மருத்துவர்கள், காவலர்கள் முதல் ஊடகர்கள், தூய்மைப் பணியாளர்கள் வரை அத்தியாவசியப் பணிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் வழக்கம்போல் சிரமம் இன்றி சென்று வர வேண்டும் என்பதற்காக பஸ்களையும் ரயில்களையும் இயக்குகிறது. சேவை எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தாலும் பொதுப் போக்குவரத்துக்குத் தடை இல்லை. பத்து பெட்டிகளைக் கொண்டு வழக்கமாக ஆயிரம் பேரைச் சுமந்துசெல்லும் ரயில் வண்டி தற்போது ஆறே பேரைச் சுமந்துசெல்கிறது என்று சொல்கிறார் லண்டனில் வாழும் தமிழ்ப் பத்திரிகையாளர் எல்.ஆர்.ஜெகதீசன். “ஆறு பேருக்காக ஒரு ரயிலை இயக்குவதா என்று லாப நோக்கு பாராமல், அத்தியாவசியச் சேவையாளர்கள் சிரமப்படக் கூடாது என்று எண்ணும் இந்தச் சமூக நல நோக்கைத்தான் இந்திய ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கூடவே பொதுப் பள்ளிகள், பொது மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்துச் சேவையின் முக்கியத்துவத்தை இந்தியச் சமூகமும் உணர வேண்டிய தருணம் இது” என்றும் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் அவர்.