இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாதியாக மாறி இருக்கிறார்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு காணொளி வெளியிட்டு, தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவியும் அளிக்கின்றனர்.
ஆனால் இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார். இவர் கடந்த மாதம் திரைக்கு வந்த ‘காஞ்ச்லி லைப் இன் எ ஸ்லாஷ்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக வந்தார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவும் பணிகளில் தொண்டு நிறுவனத்தினர் இணைய வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலராக ‘நர்சு’ பணியில் சேர்ந்துள்ளார்.
இவர் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கதாநாயகி ஆனதால் நர்சு வேலை பார்க்காமல் இருந்தார். இப்போது அந்த பணியை ஏற்றுள்ளார். ஆஸ்பத்திரியில் நர்சு சீருடை அணிந்து வேலைபார்க்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக சேவையாற்ற முடிவு செய்துள்ளேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.