சீனாவில் கொவிட் – 19 நெருக்கடியின் பரிமாணம் குறைவடைந்து கொண்டுவரும் நிலையில், சீன அரசாங்கம் அந்தத் தொற்றுநோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கும் ஏனைய நாடுகளின் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அதன் கவனத்தை இப்போது திருப்பியிருக்கிறது.
சீனாவில் அண்மைய வாரங்களில் உள்நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அத்துடன் சமூக மட்டத்தில் புதிதாகத் தொற்று ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் அதன் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கிறது. பல நாடுகளுக்கு விமானங்கள் நிறைய மருத்துவ பரிசோதனைக் கருவிகளையும், முகக்கவசங்களையும், காற்றோட்ட சாதனங்களையும், மருந்துப்பொருட்களையும் சீனா அனுப்பிக்கொண்டிருக்கிறது.
அது மாத்திரமல்ல, தமது சுகாதாரத்துறை நிபுணர்களையும் சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிகறது. லைபீரியா மற்றும் கம்போடியா போன்ற வறிய, வளர்முக நாடுகுள் மாத்திமல்ல, பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளும், குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற ஜி-8 உறுப்பு நாடுகளும் இதிலடங்கும்.
கடந்த காலத்தில் உதவிக்காக வொஷிங்டனை நம்பியிருந்த வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இப்பொழுது ஆதரவிற்காக பெய்ஜிங்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலக ஒழுங்கை சீனா இப்போது மீள வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.
மண்டலமும், பாதையும் செயற்திட்டம் சீனாவின் உலகளாவிய பொருளாதார வலிமையை வெளிக்காட்டுகின்றதென்றால், தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுடன் அந்நாடு உலகின் புதிய மனிதாபிமான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.
சீனா அவ்வாறு செய்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதையும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார். தற்போதைய உலக சுகாதார நெருக்கடியில் தனக்கிருக்கின்ற பொறுப்பு வாய்ந்ததும், மற்றவர்களின் நெருக்கடி மீது அனுதாபம் கொண்டதுமான தலைமைத்துவப் பாத்திரத்தை ட்ரம்ப் வகிக்கத் தவறுவதால் சீனாவின் வளர்ச்சி சாத்தியமாகிறது.
அவரது ‘அமெரிக்கா முதலில்” என்ற கொள்கை உலகளாவிய பல்வேறு செயற்திட்டங்களிலும், நிறுவனங்களிலும் அமெரிக்காவின் பங்கேற்பைக் குறைத்துவிட்டது. அமெரிக்கா அதன் சொந்த நலன்களிலேயே முற்றுமுழுதாக மூழ்கியிருக்கும் போக்கு தற்போது முன்னெப்போதும் இல்லாத மட்டங்களுக்குச் சென்றுவிட்டது. ட்ரம்ப் நிர்வாகம் அதன் ஐரோப்பிய நேச நாடுகளைக் கூட அலட்சியம் செய்வது மாத்திரமல்ல, தனது சொந்த மக்களுக்கு உதவுவதில் கூட மிகவும் காலந்தாழ்த்தியே செயற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்” என்று அவர் அழைத்தார். அதன்மூலம் அவரது தந்திரோபாயம் தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு சீனா மீது பழியைப்போடுவதும், நையாண்டி செய்வதுமாகவே இருந்தது. இது உலகத் தலைமைத்துவத்திற்கான ஒரு செயற்பாடல்ல.
கொவிட் – 19 சீனாவிலிருந்தே தோன்றியது என்பது உண்மையே. தொற்றுப்பரவலை சீனா ஆரம்பத்தில் கையாண்ட விதம் பொருத்தமற்றதாகவும், குறைபாடுடையதாகவும் இருந்தது. புதிய வைரஸ் தொற்று அபாயமிருப்பதாக எச்சரிக்கை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, நெருக்கடியின் பாரதூரத்தன்மையைக் குறைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. தகவல்கள் மற்றும் எண்ணிக்கை விபரங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் இரண்டகமான முறையிலும், ஒழிவுமறைவாகவும் செயற்பட்டது.
ஆனால் ஆரம்பத்தில் தவறாக நடந்துகொண்ட பிறகு சீ ஜின்பிங் அரசாங்கம் தம்மை முழுமையாகத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து செம்மைப்படுத்திக்கொண்டது. தனிமைப்படுத்தல் நிலையங்களும், வைத்தியசாலைகளும் குறிப்பிடத்தக்க வேகத்தில் நிர்மாணிக்கப்பட்டன. தொற்றுத்தடுப்பிற்கா நகரங்களை மூடும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை சற்றுக் கடுமையானவையாக இருந்தன. ஆனால் பல வாரங்கள் கழித்து உள்நாட்டு நிலவரம் மேம்படத் தொடங்கியதும் சீனா ஏனைய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டத்தொடங்கியது.
பாரதூரமான நிச்சயமற்ற தன்மையும், நெருக்கடியுமான சூழ்நிலையில் உலகிற்கு உறுதிவாய்ந்த தலைமைத்துவம் தேவைப்படுகிறது. அதை உலகளாவிய ரீதியில் எல்லை கடந்த செயற்பாடுகள் மூலம் சீனா அந்தத் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. சீனா தனது பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுவதாகவே பலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் சீனாவின் இந்த நடவடிக்கை ஏனைய நாடுகளுக்கு சாதகமான வழியில் உதவுகின்றது. நண்பர்களை வென்றெடுத்து, செல்வாக்கை அதிகரிப்பதற்குச் சீனா அதன் மென்சக்தியைப் பயன்படுத்துவதை உலகளாவிய தலைமைத்துவம் பற்றிய பாசாங்கைக் கொண்ட அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் ஏளனம் செய்யவோ அல்லது விளையாட்டகவோ கருதக்கூடாது.
டெக்கான் ஹெரால்ட் ஆசிரியர் தலையங்கம்