கரோனா வைரஸால் கலங்கும் உலக மக்கள்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிிற்கிறார்கள். நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 152 பேர் பலியாகியுள்ளனர். 9,583 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை நாடான ஜப்பானில் 52 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர். 1,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை வடகொரியாவில் என்ன நடக்கிறது? அங்கு கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா, பரவல் என்ன, உயிர் பலி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. வடகொரிய அரசும் இதுவரை கரோனா வைரஸ் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இது சர்வதேச அளவில், சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

ஆனால், கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய உடனேயே தனது எல்லைகள் அனைத்தையும் வடகொரியா மூடுவதாக அறிவித்தது. உலக நாடுகள் கரோனாவுக்கு எதிராக கடுமையான போர் செய்து வரும் சூழலில் எந்தவிதமான பதற்றமும் இன்றி வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய ராணுவ படைப்பிரிவின் துணைத் தலைவர் கூறுகையில், “வான்சான் கடற்பகுதியில் 30 கி.மீ. உயரம், 230 கி.மீ. தொலைவு சென்று தாக்கக் கூடிய குறுகிய தொலைவு ஏவுகணைகளை வடகொரியா இன்று பரிசோதனை செய்தது” எனத் தெரிவித்தனர்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “வடகொரியா இன்று குறுகிய தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை இன்று பரிசோதனை செய்தது. ஆனால், அந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் வரவில்லை. இந்த மாதத்தில் வடகொரியா பரிசோதனை செய்யும் 9-வது ஏவுகணை இதுவாகும். வடகொரிய அரசு தொடர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை அனைத்தையும் அதிபர் கிம் ஜான் உன் உன்னிப்பாக கவனித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன் கடந்த 21-ம் தேதி வடகொரியா கேஎன்-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து இதுபோல் செய்து வருகிறது.