யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது என்று சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு விசனம் வெளியிட்டிருக்கிறது.
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக சர்வதேச சட்டவாதிகள் ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த 2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 தமிழர்களைப் படுகொலை செய்த குற்றத்திற்காகக் கடந்த 2015 ஆம் ஆண்டு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்த மரணதண்டனை கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
அவ்வாறிருக்க தற்போது வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது.
மரணதண்டனையை நீக்குவதை நாம் வரவேற்றிருந்த போதிலும் கூட, மிகவும் பாரதூரமான குற்றமிழைத்த ஒரு நபருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி முழுமையாக விடுதலை செய்வதென்பது பாதிக்கப்பட்ட நபருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதில் பின்னடைவொன்று காணப்படும் நிலையில், மிருசுவில் படுகொலை வழக்கு விசாரணைகள் குறித்த எதிர்பார்ப்புக்கள் குறைவாகும்.
எனினும் இத்தகைய பொதுமன்னிப்பு ‘நீதியைப் பெறுவதில் காணப்படும் குறைபாடு’ என்ற அடிப்படையில் சர்வதேச நியமங்களுக்கு முற்றிலும் பொருந்தாததாகும்.
சாதாரண பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத படுகொலைகள் போன்ற பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் விடுதலை செய்வது ஆகிவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம். அத்தகைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு எதிரானதாகும்.
மேலும் கொவிட் – 19 கொரோனா பரவலின் காரணமாக நாட்டுமக்கள் அனைவரும் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இத்தகைய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை பொருத்தமற்றதாகும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தின் போது, ‘போர் வெற்றி வீரர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகளின் கீழ் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில் இனிவரும் காலங்களில் ஜனாதிபதி வழங்கப்போகின்ற பொதுமன்னிப்புக்களின் தொடக்கப்புள்ளி இதுவா என்ற கேள்வி விசனமளிக்கிறது