ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடிதம்!

“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்களை சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் முன்வைத்துள்ளனர்.

குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள தாங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமற்றது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அரசின் அறிவுரையிலேயே, தடுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று ஏற்படுவதற்கான ஆபத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் குடிவரவுத்துறை தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், வில்லாவுட் தடுப்பு முகாமில் உள்ள ஒருவருக்கு கொரோனாவுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே போல், மெல்பேர்ன் முகாமிலும் ஒரு தஞ்சக்கோரிக்கையாளருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்துடன், அகதிகளை தடுத்து வைப்பதற்கான மாற்று இடமாக பயன்படுத்தப்படும் பிரிஸ்பேன் ஹோட்டலில் உள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தடுப்பிலிருந்த 300 பேரை இங்கிலாந்து உள்துறை விடுவித்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்கும் விதமாக உடனடியாக ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தொற்று நோய்களுக்கான ஆஸ்திரலேசியா (Australasia) சொசைட்டி, தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஆஸ்திரேலிய கல்லூரி, அகதிகளுக்கான மருத்துவர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுவரை எந்த குடிவரவுத் தடுப்பு முகாம்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை, “தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களும் தொற்று சந்தேகம் ஏற்படும் நிலையில் அதை நிர்வகிப்பதற்கான திட்டங்களும் நடைமுறையில் உள்ளன,” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், தடுப்பு முகாம்களில் தொற்று கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் சோப்பு, சானிடைசருக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல், உணவிற்காகவும் பிற தேவைகளுக்காவும் தடுப்பில் உள்ளவர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.