மரணமடைந்த ஜெர்மானியர் ஒருவரின் இறுதிக் கிரியைகள் எப்படி நடந்தன என்பதை ஜெர்மானியத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இது வழக்கத்துக்கு மாறானது. ஆனால், ஏன் காட்டினார்கள்? ‘அந்த மனிதர் கரோனா தொற்றால் இறந்ததால் தொலைக்காட்சி இடமளித்திருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. அவர் கரோனா தொற்றால் இறக்கவில்லை; இயற்கையான மரணம். அப்படியென்றால், இறந்தவர் அவ்வளவு பிரபலமா? ம்ஹூம். அதுவும் கிடையாது. பிறகு, எதற்காகத் தொலைக்காட்சி இவ்வளவு முக்கியத்துவம் தந்தது? ஏன் தந்தது என்பதில்தான் இன்றைய ஜெர்மனியின் முழு நிலையும் தெரியவரும். கரோனா பாதிப்பு எந்த அளவுக்கு ஜெர்மனியைப் பாதித்திருக்கிறது என்பதும் புரியும்.
கரோனா தொற்றில் ஜெர்மனி நான்காம் படிநிலையை அடைந்திருக்கிறது. ஜெர்மனி மட்டுமல்ல; ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் அனைத்தும் நான்காம் நிலையில்தான் இருக்கின்றன. ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கல் மக்கள் நடந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளைத் தொலைக்காட்சி மூலமாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதன்படி, வீடுகளை விட்டு எவரும் வெளியே போக முடியாது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் ஒருவர் வெளியே சென்றுவரலாம். மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. வெளியே நடமாடும் மனிதர்களுக்கிடையில் குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்; மீறுபவர்கள் அதிகபட்ச அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இந்த விதிகள் வெளியிட்ட அடுத்த நாள்தான் அந்த மனிதரின் இறுதிக் கிரியைகள் நடந்தன.
தேவாலயத்தில் பணிபுரியும் ஒருவர் தூபத்தைப் பிடித்தபடி முன்னால் செல்கிறார். ஐந்து மீட்டர் இடைவெளியில் பாதிரியார் வருகிறார். பத்து மீட்டர் பின்னால் இறந்தவரின் உடல் இருக்கும் பெட்டியானது சாதாரண வண்டி போன்ற ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை இருவர் தள்ளுகிறார்கள். பின்னால் குடும்ப உறுப்பினர்களில் மூவர் மட்டும் வருகிறார்கள். வேறு யாருக்கும் அங்கு அனுமதியில்லை. வெறும் மூன்று குடும்ப உறுப்பினருடன் அந்த மனிதரின் இறுதி யாத்திரை நடந்து முடிந்தது. ஏனையவர்கள் தேவாலயத்தில் பணிபுரிபவர்கள். இப்படியானதொரு இறுதிப் பயணம் ஜெர்மனியில் இதுவரை நடந்ததே இல்லை என்றார்கள்.
இப்படியான விஷயங்கள் ஜெர்மானியர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. கூடவே, கரோனா வைரஸ் தரும் இன்னொரு நெருக்கடி பொருளாதார இழப்பு. கரோனா பாதிப்பைத் தாண்டி இந்த உபவிளைவுதான் ஒவ்வொரு நாட்டையும், ஒவ்வொரு நபரையும் நிலைகுலைய வைத்திருக்கிறது. கரோனா வைரஸின் அட்டகாசம் சீனாவிலிருந்து, பிறகு ஓரிரு நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்த சமயத்தில், “இந்த வைரஸ் இயற்கையாய் வந்ததல்ல; பெருமுதலாளிகள் செயற்கையாக உருவாக்கி வெளியிட்டது” என்பன போன்ற பேச்சுகள் உலவின. ஆனால், கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் அதிகமாக அடிபட்டவர்களுள் பெருமுதலாளிகளும் அதிக அளவில் இருந்தனர்.
ஒரு நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுநிலை மூன்றாம் கட்டத்தை அடைய ஆரம்பிக்கும்போது அந்நாடு தன்னைத் தனிமைப்படுத்த ஆரம்பிக்கும். அதனால், பிற நாடுகளுக்கிடையில் நடக்கும் போக்குவரத்துகள் ரத்துசெய்யப்படும். இதனால், விமான நிறுவனங்கள் நஷ்டமடையத் தொடங்கும். பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் நிறுவனத்தையே விற்கும் நிலை ஏற்படும். நான்காம் நிலைக்கு நாடுகள் வரும்போது சிறு, பெரு வணிக நிலையங்களும் தொழிற்சாலைகளும் மூட வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பே இவர்கள்தான். ஜெர்மனி போன்ற தொழிற்சாலை நாடுகளுக்கு இந்த வணிகர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். சென்னை போன்ற பெருநகரமொன்றில் இருக்கும் அனைத்துக் கடைகளும் தொழிற்சாலைகளும் மூடப்படுவதால் எத்தனை பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்!
பல வணிகர்கள் தொழிலைக் கைவிடும்போது நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குப் போகும். ஜெர்மனியில் ஒருவர் எந்தக் காரணத்துக்காகக் கடையைப் பூட்டினாலும் அங்கே பணிபுரிபவர்களுக்கு ஊதியம் கொடுத்தே ஆக வேண்டும் என்பது விதி. மறுக்கவே முடியாது. ‘இனி முடியவே முடியாது’ என அவர் இரு கரங்களைத் தூக்கும் வரை கொடுத்தாக வேண்டும். அப்படி இரு கைகளையும் உயர்த்தும் நிலை இன்று பலருக்கு உருவாகிவருகிறது. ‘பிட்ஸா ஹட்’ போன்று ஜெர்மனியில் இயங்கும் மிகப் பெரிய உணவகமான ‘வப்பியானோ’ தன் அனைத்துக் கிளைகளையும் மூடிவிடுவதாகவும், தாங்கள் பணமில்லா நிலைக்குச் சென்று வணிகத்தை முற்றாகக் கைவிடுவதாகவும் அறிவித்தது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. காரணம், ‘வப்பியானோ’ ஜெர்மன் முழுவதும் பல கிளைகளுடன் ஜேஜேயென வியாபாரம் நடைபெற்றுவந்த ஒரு வணிகச் சங்கிலி.
இன்று கரோனாவால் அந்தச் சங்கிலி அறுந்து தொங்கிவிட்டது. இந்த அறிவிப்பானது பல வணிகர்களைப் பீதியடைய வைத்திருக்கிறது. ஜெர்மன் அரசு உடனடியாகப் பல சலுகைகள் அளித்தது. யாரையும் நஷ்டமடைய அனுமதிப்பதில்லை என ஜெர்மன் அரசு முடிவுசெய்தது. முதல் கட்டமாக, 600 பில்லியன் யூரோக்களை வணிகர்களுக்கு வழங்குவதற்கான ஆரம்பக் கட்ட நிதியாக ஒதுக்கிக்கொண்டது. இது தவிர்த்து, ஐரோப்பிய மத்திய வங்கியானது 750 பில்லியன் யூரோ பெறுமதியான புதிய பணத்தை அச்சடிக்கவும் தயாராகியது. இதன் மூலம் யூரோவின் பெறுமதி கீழ்நோக்கிச் செல்லும் என்றாலும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கரோனா வைரஸ் உண்டாக்கும் பொருளாதார நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பது இன்றைய உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகக் கோரமான கேள்வி. மீண்டுவிடலாம் என்று நம்பிக்கை தருகிறது ஜெர்மனி. எப்படி என்றால், அரசாங்கம் இங்கே எங்களுடன் கை கோத்து நிற்கிறது!
– ராஜ்சிவா, ‘வானியற்பியல்’, ‘குவாண்டம் இயற்பியல்’ தொடர்பாக எழுதிவருபவர்.
தொடர்புக்கு: rajsiva@me.com