சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு உத்தரவு!

கொடுக்கல் வாங்கல்களையும், அத்தியாவசிய தேவைகளையும் கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வங்கிகளின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பமாகியது.

லங்கா சதோச மற்றும் பிக் மீ சேவையின் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

நுகர்வோர் பிக் மீ செயலியின் மூலம் சதோச நிறுவனங்களுக்கு தமக்கு தேவைப்படும் பொருட்கள் தொடர்பில் அறிவித்தால் அவற்றை வீடுகளிலேயே பெறுவதற்கான வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.

இவ்வாறு பொருட்கள் கொண்டுவரப்பட்டு நுகர்வோரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அதற்கான பணத்தை செலுத்த முடியும்.

தற்போது இந்த சேவை கொழும்பு நகரில் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதுடன் வெகுவிரைவில் அது நாட்டில் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது,