இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது நபரான சுற்றுலா வழிகாட்டியை அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவினர் புகைப்படம் எடுத்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக உள்ளூரில் அடையாளம் காணப்பட்ட முதல் இலங்கையரான சுற்றுலா வழிகாட்டி பூரண சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
;இன்று முற்பகல் அவர் அவ்வாறு வீடு திரும்பியதாக அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் கேசரிக்கு உறுதிப்படுத்தினார்.
மத்தேகொடையைச் சேர்ந்த குறித்த சுற்றுலா வழிகாட்டி, இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலா குழுவொன்றுக்கு வழி காட்டியாக செயற்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி வைரஸ் தொற்றுக்கு உள்ளகையிருப்பது உறுதியானது.
இதனையடுத்தே அவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அங்கிருந்து வெளியேறினார்.
;முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண் ஜனவரி 28 ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டார்.
அதனையடுத்து அங்கு தங்கியிருந்து சிகிச்சைப் பெற்ற அவர், பெப்ரவரி 19 ஆம் திகதி குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறி நாடு திரும்பினார். அது முதல் 43 நாட்கள் எந்த கொரோனா வைரஸ் தொற்றாளரும் இலங்கையில் அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி குறித்த முதல் உள்ளூர் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். அவரே தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
;விஷேட அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர், மேலும் இருவாரங்கள் அவரது வீட்டிலிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படவுள்ளார்.
இதனைவிட குறித்த சுற்றுலா வழிகாட்டியின் மனைவி, இரு பிள்ளைகளும் சுய தனிமைப்படுத்தலுக்கு 14 நாட்கள் உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்தது.