புதிய ஆட்கொல்லி வைரஸின் முதல் தொற்று குறித்து சீனா உலகிற்கு அறிவித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு கொவிட் – 19 என்ற அந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து உலகம் தினமும் அறிவித்துக்கொண்டிருக்கிறது. வைரஸ் பரவலின் விளைவாக சீனா ஆழமான சமூக சுகாதாரம் தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. அங்கு 130,000 க்கும் அதிகமானவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற அதேவேளை 4600 க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.
ஆனால், அதிவிசேடமான பொதுச்சுகாதார நடவடிக்கைகளை அமுல்படுத்தியதன் மூலமாக நிலைவரத்தை இப்போது சமநிலைப்படுத்தியிருப்பதாக சீனா இப்போது கூறுகிறது. அதேவேளை, கொவிட் – 19 வைரஸ் துரதிர்ஷ்டவசமாக சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் விரைவாக நகர்ந்துவிட்டது
வேறு பல முக்கியமான சந்தைகள் இப்போது இந்த வைரஸின் கொடுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்காசியாவில் குறிப்பாக, தென்கொரியாவில், சிங்கப்பூரில், மலேசியாவில் 7000 க்கும் அதிகமானவர்களும் மத்திய கிழக்கில் ஈரானில் 9000 க்கும் அதிகமானவர்களும் ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் 8000 க்கும் அதிகமானவர்களும் தொற்றுக்கு இலக்காகியிருக்கும் அதேவேளை, வேறு கண்டங்களுக்கும் வைரஸ் பரந்தளவில் பரவியிருக்கிறது.அமெரிக்காவில் 1000 க்கும் அதிகமானவர்களுக்கும் இந்தியாவில் 100 க்கும் அதிகமானவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கிறது. சமூக மற்றும் பொருளாதார காரணங்களுக்காக தினமும் கோடிக்கணக்கான மக்கள் பிரயாணம் செய்கின்ற ஒரு பிராந்தியத்தில் வியாபித்துவிட்ட இந்த வைரஸ் அதன் பரவலை தடுப்பதை கஷ்டமான காரியமாக்கியிருக்கிறது. இந்த சிக்கல் நிலைமைகளுக்கு மேலதிகமாக ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற வேறு பல நாடுகளையும் வைரஸ் தாக்கியிருக்கிறது.
புதிய கொரோனாவைரஸின் பரவலைத் தடுப்பதற்கான முன்னென்றும் இல்லாத வகையிலான ஒரு முயற்சியாக அமெரிக்கப் பிரஜைகள் அல்லாதவர்கள் 30 நாட்களுக்கு ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகை அறிவித்தது.ஆனால், இந்த பயண இடைநிறுத்தம் ஐக்கிய இராச்சியத்துக்கு பிரயோகிக்கப்படவில்லை.
உலக சந்தைகள்
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப்போன்ற பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை கொரோனாவைரஸ் மூளவைக்கக்கூடும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் பிராங்பேர்ட்டில் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
புதிய கொரோனாவைரஸ் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை உட்பட உலக பங்குச்சந்தைகள் சரிவைக் கண்டுவருகின்றன.அமெரிக்கப் பங்குகள் கடந்த புதன்கிழமை ஏறத்தாழ ஐந்து சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டு மக்களுக்கு ரையாற்றிய பிறகு ஐரோப்பாவில் இருந்து பயணங்களுக்கு தடை கொண்டுவரப்பட்டதை அடுத்து பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் பீதியடைந்திருக்கிறார்கள். ஏனென்றால் உலகளாவிய இடர்காலங்களில் அந்நிய செலாவணி திரவத்தன்மை ( Foreign Exchange Liquidity) பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
உலக பொருளாதார மந்தநிலை பெரிய கம்பனிகளை விடவும் சிறியரக மற்றும் நடுத்தர கம்பனிகளே தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகும். முன்னேறிய பொருளாதாரங்களை விடவும் குறைந்த வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் கூடுதலாகப் பாதிக்கப்படும்.இந்த சூழ்நிலையில் சகல துறைகளுமே சமமான அளவில் பாதிக்கப்படும் என்றில்லை.
விமானப்போக்குவரத்து, பயணத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உட்பட சேவைத்துறைகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. விமானசேவைகள் அவற்றில் இலாபகரமான சர்வதேச மார்க்கங்களில் போக்குவரத்தில் கடுமையான வீழ்ச்சியை ஏற்கெனவே அனுபவித்திருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், விமானசேவைகளும் ; விருந்தோம்பல்துறையும் அவற்றின் வழமையான கோடைகால உச்சஅளவு வருமானங்களை இழக்கப்போகின்றன. ஏனென்றால் வைரஸ் தொற்றுக்கு பயந்து பயணிகள் தங்கள் செலவுகளைத் தவிர்த்திருக்கிறார்கள்.
பாவனைப்பொருட்களைப் பொறுத்தவரை, கேள்வியில் ஏற்படக்கூடிய கடுமையான வீழ்ச்சி தாமதிக்கப்படக்கூடிய கேள்வி என்றே அர்த்தப்படும்.இது விரைவாக விற்பனையாகும் பாவனைப்பொருட்கள் தயாரிப்பு கம்பனிகளையும் சொற்ப இலாபத்தில் இயங்குகின்ற அவற்றின் விநியோகத்தர்களையும் ; பாதிக்கும். அதன் விளைவாக அவற்றின் பணப்புழக்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குன்றும்.சகல நிதிச்சந்தைகளையும் பொறுத்தவரை சந்தைத் திரவத்தன்மை( Market liquidity) முக்கியமான ஒரு அம்சமாகும்.
மேற்குலகில் கோடைகாலத்தின் வருகையுடன் வைரஸ் பற்றிய கவலை குறைவடையும் பட்சத்தில் ஜூன் மாதமளவில் கேள்வி மீண்டும் அதிகரிக்குமானால், இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் சந்தைகள் மீட்சியடையும் என்று நம்பலாம்.கேள்வியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியின் விளைவாக எண்ணெய் விலைகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் கீழ்மட்டத்தில் தொடர்ந்து இருந்துவருகின்றன.
எது எவ்வாறெனினும் சீனாவின் ஊடாகச்செல்லும் விநியோக சங்கிலித்தொடர் நிறுவனங்கள் ; மீதான பாதிப்பு 2020 பூராவும் கவலை தருவதாகவே இருக்கும்.ஏனென்றால், சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்பட்டமையின் விளைவான பாதிப்பு உலக விநியோக சங்கிலித்தொடர்கள் பூராவும் ஏற்கெனவே உணரப்பட்டிருக்கிறது.
இறுதி ஆய்வாக கூறுவதென்றால், தேசங்கள் உறுதிவாய்ந்தவையாக இருக்கவேண்டுமானால், அவற்றின் இருதரப்பு பங்காளி நாடுகளும் உறுதியானவையாக இருக்கவேண்டும். அதேபோன்றே நிறுவனங்கள் உறுதியானவையாக இருக்கவேண்டுமானால், அவற்றை அங்கமாகக் கொண்ட சமூகங்கள் உறுதியானவையாக இருக்கவேண்டும்.எனவே, ; முன்னென்றும் இல்லாத வகையிலான உலகளாவிய இந்த சுகாதார நெருக்கடியை கடந்துசெல்வதற்கு தேசங்களின் முயற்சிகளுக்கு எவ்வாறு உதவுவதென்று கூட்டாக சிந்தித்துசெயற்படுவது அவசியமாகிறது
தினேஷ் வீரக்கொடி