படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற நடிகர் பிருத்விராஜ், இந்தியா திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பதாக கூறியுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். கடந்தாண்டு இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தமிழிலும் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிளஸ்ஸி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் உள்ள பாலைவனத்தில் நடத்த பிருத்விராஜும் படக்குழுவினரும் அங்கு சென்று இருந்தனர். பிருத்விராஜ் ஜோர்டானுக்கு சென்ற பிறகுதான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இதனால் பிருத்விராஜால் இந்தியா திரும்ப முடியவில்லை. ஜோர்டானிலேயே படக்குழுவினருடன் தவித்து வருகிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:- “நாங்கள் கடினமான சூழ்நிலையில் தற்போது ஜோர்டானில் உள்ள வாடி ரம் என்ற இடத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் வேறு எங்கும் எங்களால் செல்ல முடியவில்லை. ஜோர்டானில் தற்போது சர்வதேச விமான போக்குவரத்தும் இல்லை. பாலைவனத்தில்தான் எங்கள் கூடாரம் உள்ளது. நாங்கள் கூடாரத்தில் உட்காரலாம் அல்லது படப்பிடிப்பை தொடரலாம் என்ற நிலை.
அதிகாரிகளுடன் பேசி கூடாரத்தில் இருந்து சில நிமிட தொலைவில் உள்ள தனிமையான இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். பெரிய சவாலை உலகம் சந்திக்கிறது. மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலமும் சுகாதாரமாக இருப்பதன் மூலமே இந்த தொற்றை கட்டுப்படுத்த முடியும்.”
இவ்வாறு பிருத்விராஜ் கூறியுள்ளார்.