தமிழ்த்தேசியபற்றாளர் சிங்கராசா – இறுதிவணக்க நிகழ்வு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்துவந்த தமிழ்த்தேசியபற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு நடைபெற்றுள்ளது.

அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

எமது தாயக மக்களுக்கான தேசிய விடுதலைக்காக தொடர்ந்தும், பல்வேறு வழிகளில் இணைந்து செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் திரு. பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் மறைவு எம்மனைவரையும் கலங்கச் செய்கின்றது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் வாழ்ந்து வந்த பாலசிங்கம் சிங்கராசா அவர்கள், தொடர்ச்சியாக எமது மக்களின் விடுதலைக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திச் செயற்பட்டவர். தன்னை மட்டுமல்லாது தனது துணைவியார், பிள்ளைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரையும் தமிழ்த்தேசிய விடுதலைக்கான செயல் திட்டங்களில் இணைத்துச் செயற்பட்டவர்.

குறிப்பாக 2009 இல் தமிழீழத்தில் நடைபெற்ற பேரழிவின் பின்னரும், அதே உத்வேகத்துடனும் அதே ஆதங்கத்துடனும் அமைந்த இவரின் செயற்பாடுகள் கவனத்திற்குரியன. எத்தகைய வழிகளில் எமது தாயக மக்களுக்கான உதவிகளைச் செய்யமுடியுமோ அத்தனை வழிகளிலும் எமக்குத் துணையாக தனது குடும்பத்தினருடன் இணைந்து நின்றார்.

சாதாரண மனிதராக வாழ்ந்தவாறு தனது மக்களிற்கான தனது பங்களிப்பாக, எப்போதுமே அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயற்பட்டமை எங்கள் நினைவுகளில் இவரை நிறைத்திருக்கின்றது. தேசிய விடுதலைக்கான பணியில் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையைப் புரிந்தவராக, அதனைச் செயலில் செய்துகாட்டியவராக அனைவருக்கும் வழிகாட்டியாக அவரது வாழ்வு அமைந்திருந்தது.

அத்தகைய உன்னத மனிதராக வாழ்ந்த பாலசிங்கம் சிங்கராசா அவர்களின் இழப்பால் துயருறும் இவரது துணைவியார் இவரது பிள்ளைகள் மற்றும் இவரது உற்றார் உறவினர்கள் நண்பர்களோடு எமது கரங்களையும் இறுகப்பற்றிக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா