ஆஸ்திரேலிய அகதிகள் அச்சத்தில்! முகாம் காவலாளிக்கு கொரோனா!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டல் அகதிகளை வைத்திருக்கும் தற்காலிக இடமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள காவல் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட அகதிகள், இந்த ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம், ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. உணவு மற்றும் பிற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் இடம் மிக குறுகியதாகவும் பொதுவானதாகவும் இருக்கும் சூழலில், அகதிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தாக்கம் ஏற்பட்டதை அறிந்தவுடன், அதன் நிலையை அகதிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தியாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்திருக்கிறது.

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் பிற தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள், முகாம்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய ஆபத்துள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மோசமான உடல்நிலையுடன் தடுப்பில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அனைவருக்குமான மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் அலிசன் பட்டிசன் தெரிவித்துள்ளார்.