ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ஆட்டம் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பபட்டன.
ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஸ் உத்தரவின்படி 15 வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின்போது நியூசிலாந்து வீரர் பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவரை கொரோனா தாக்கவில்லை என்பது தெரியவந்தது.
தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்து.
நாடு திரும்பிய தென் ஆப்ரிக்க வீரர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.