சீனாவை அவமதிப்பதற்காக கொவிட் — 19 கொரோனாவைரஸை வௌநாட்டவரகள் மீதான வெறுப்புணர்வின் தொனியில் ‘ சீன வைரஸ் ‘ என்று அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் செய்த வர்ணனைக்கு பரவலாக கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன.
கொரோனாவைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸ் பரவலுக்கு சீனா மீது பழியைச் சுமத்துகின்ற ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகள் அதை ‘ சீன வைரஸ் ‘ அல்லது ‘ அந்நிய வைரஸ்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிக்கிறார்கள்.
சீன வைரஸ் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதை கடுமையாக கண்டனம் செய்திருக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார அவசரநிலை செயற்திட்ட நிறைவேற்று பணிப்பாளரான மைக்கேல் றையன், ” வைரஸ் வகைகளுக்கு நாடுகளின் எல்லைகள் தெரியாது.நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றியும் அவற்றுக்கு அக்கறை கிடையாது.உங்களது தோலின் நிறம் பற்றியோ அல்லது வங்கியில் உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றியோ வைரஸுகளுக்கு கவலை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
அதனால் நாம் பயன்படுத்துகின்ற சொற்பதங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டியது முக்கியமானதாகும் ” என்று ஜெனீவாவில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறிய றையன், 2009 ஆம் ஆண்டில் பரவிய எச்.1என்.1 சளிக்காய்ச்சல் பற்றிய உதாரணம் ஒன்றையும் எடுத்துவிளக்கினார். அதாவது அந்த சளிக்காய்ச்சல் வட அமெரிக்காவில் இருந்தே பரவ ஆரம்பித்தபோதிலும், நாம் அதை வட அமெரிக்க காய்ச்சல் என்று அழைக்கவில்லையே என்று அவர் கூறினார். கொவிட் — 19 பரவலுக்கு எதிரான போராட்டத்தில் சகல நாடுகளினதும் ஒன்றிணைந்த முயற்சிகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
றையனின் கருத்தையே மைக்ரோசொவ்ற் கோர்ப்பரேசனின் இணை தாபகரான பில் கேட்ஸும் எதிரொலித்தார். ‘ றெடிற் ‘ என்ற அமெரிக்க சமூக செய்தித்தளத்தில் ‘ என்னிடம் எதையும் கேளுங்கள் ‘ என்ற நிகழ்ச்சித்தொடரில் கடந்த புதன்கிழமை எழுதிய பில் கேட்ஸ், ” இதை நாங்கள் சீன வைரஸ் என்று அழைக்கக்கூடாது ” என்று குறிப்பிட்டிருந்தார்
160 க்கும் அதிகமான நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பரவியிருக்கும் கொவிட் — 19 கொரோனாவைரஸின் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் 220,000 க்கும் அதிகமானவர்கள் இலக்காகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்களகத்தின் கணனி அறிவியல் மற்றும் பொறியியல் நிலையத்தின் புள்ளிவிபரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.
இந்த வைரஸ் தொற்றுநோய் பரவலின் விளைவாக மிகவும் பாரிய சவாலுக்கு உலகம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், ” ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைவதற்கான முன்னொருபோதுமில்லாத வாய்ப்பாகவும் இது அமைகிறது ” என்று உலக சுகாதார ஸ்தாபனம் புதனன்று அதன் ருவிட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறது.
கொரோனாவைரஸை சீன வைரஸ் என்று வெள்ளை மாளிகை வர்ணித்ததை தனது ருவிட்டர் பக்கத்தில் கண்டனம் செய்திருக்கும் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாறென், ” கொரோனாவைரஸ் பாரபட்சம் காட்டுவதில்லை ” என்று பதிவிட்டிருக்கிறார். ஆசிய மக்களுக்கு எதிரான இனவெறி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல ; அது அமெரிக்கப் பண்புமல்ல. அது கொவிட் — 19 வைரஸுக்கு எதிரான எமது போராட்டத்துக்கு ஊறுவிளைவிப்பதுமாகும் என்றும் மசாசூசெட்ஸ் மாநில செனட்டரான அவர் கூறியிருக்கிறார்.
உலகம்பூராவும் கொரானாவைரஸ் பரவிவரும் இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்புணர்வுத்தொனியுடனான மொழியை வெள்ளைமாளிகை பயன்படுத்தியிருப்பது தனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கின்ற போதிலும் தான் அதிர்ச்சியடையவில்லை என்று ருவிட்டரில் பதிவுசெய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸின் ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினரான லுயி பிராங்கெல் இந்த ஆட்கொல்லி நோய்க்கு எதிரான போராட்டத்தில் இனவெறிக்கு பதிலாக சர்வதேச ஒத்துழைப்பையே அமெரிக்க அரசாங்கம் மேம்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
அதேவேளை அமெரிக்க காங்கிரஸின் பொதுக்கொள்கை கமிட்டியின் தலைவரான சார்லி வூ விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் வைரஸை ஒரு கலாசாரத்துடன், ஒரு இனத்துவக்குழுமத்துடன் அல்லது ஒரு நாட்டுடன் அடையாளப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியுமே இந்த ஆட்கொல்லி நோயைத் தோற்கடிப்பதற்கு உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாக மாத்திரமே அமையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ” இன்றைய நெருக்கடி அறிவியலையும் உண்மைச்சான்றுகளையும் தெளிவான மொழியையும் வேண்டிநிற்கின்றதே தவிர, எமது மக்கள் சேவகர்களிடமிருந்து வெளிநாட்டவர்கள் மீதான பீதியணர்வை வேண்டிநிற்கவில்லை. மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பக்கூடிய செயற்பாடுகளையோ அல்லது மற்றவர்கள் மீது குற்றஞ்சுமத்தும் போக்கையோ இந்த நெருக்கடி வேண்டிநிற்கவில்லை என்றும் அவரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நிருவாகத்தின் வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளைக் கொண்டுவரக்கூடியவை என்று கூறியிருக்கும் ‘ நீதியை மேம்படுத்தும் ஆசிய அமெரிக்கர்கள் ‘ என்ற ஒரு தன்னார்வ சட்ட உதவி அமைப்பின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜோன் சி.யாங் , ” இத்தகைய இனவெறித்தனமான சொற்களைப் பயன்படுத்துவது எம்மால் இப்போது காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்புணர்வுச் சம்பவங்களை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும் ” என்று எச்சரிக்கை செய்ததாக என்.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
சீன தேசத்தைக் கேலி செய்வதை அல்லது வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது என்று அழைப்பதையோ விடுத்து கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரியை தோற்கடிப்பதற்கு சீனாவினால் கடைப்பிடிக்கப்படுகின்ற அதிசயிக்கத்தக்க நடவடிக்கைகளில் இருந்து உலகம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சீன — பாகிஸ்தான் பொருளாதார மேம்பாட்டு நிலையத்தின் முன்னாள் ஊடகப் பணிப்பாளர் யாசிர் மசூட்கூறினார். சீனாவுக்கு அல்லது வேறு எந்தவொரு நாட்டுக்கும் எதிரான கறைபூசும் தந்திரோபாயங்கள் இன்றைய இடர்மிக்க காலகட்டத்தில் உலகில் இணக்கப்போக்கை வளர்க்க உதவியாக அமையாது என்று பாகிஸ்தானிய அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் ஆய்வாளரான அவர் குறிப்பிட்டார்.
வரலாறு பூராவும் உலகளாவிய ரீதியில் பரவிய நோய்கள் கோடிக்கணக்கான மக்களை பலியெடுத்துவந்திருக்கின்றன. அத்துடன் ஒரு கணப்பொழுதில் பேரழிவையும் அவற்றினால் ஏற்படுத்தமுடியும்.தொற்றுநோய்களுக்கும் இயற்கை அனர்த்தங்களுக்கும் எல்லைகள் கிடையாது. அவை வருகை குறித்து முன்கூட்டியே அறிவிப்பதுமில்லை.கொவிட் — 19 வைரஸுக்கு எதிரான அதன் போராட்டத்தில் சீனா மகத்தான வெற்றிகளை சாதித்திருக்கிறது. உலகளாவ பரவும் இந்த நோயை தோற்கடிப்பதற்கு இப்போது சீனா ஏனைய நாடுகளுக்கு உதவிக்கரத்தையும் நீட்டுகின்றது என்றும் மசூட் கூறினார்.
;பெரும் குழப்பமும் ஏமாற்றமும் நிறைந்த இன்றைய இடர்மிகு நேரத்தில் அரசியல் வெற்று ஆரவாரப்பேச்சுக்களில் ஆர்வத்தைக் காட்டாமல் உலகம் இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைத்துச் செயற்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர் பாகிஸ்தானில் கொவிட் –19 வைரஸின் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுவருகின்ற அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கூறுகையில் வைரஸை தோற்கடிப்பதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்படுகின்ற முன்னுதாரணமான நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தான் பெருமளவு பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
வூஹான் நகரில் கெரோனாவைரஸ் பரவத்தொடங்கிய நேரத்தில் சீனாவில் இருந்த மசூட் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு மக்கள் சமூகப்பொறுப்புடையவர்களாக நடந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்ததன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த சீன அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை என்று கூறினார்.
;சீனாவில் பொது இடங்களை கிருமிநீக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மக்களை தொற்றுத்தடுப்பு காவலில் கூட்டாக வைப்பதில் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் , வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் சுகாதாரப்பராமரிப்பு எல்லாமே முன்னுதாரணமானவை என்று மெச்சிய மசூட் வைரஸ் பரவலின்போது சீன அரசாங்கமும் அதன் மக்களும் வெளிக்காட்டிய ஐக்கியம், ஒழுங்கு கட்டுப்பாடு மற்றும் மனவுறுதி தன்னைப் பிரமிக்கச் செய்ததாக கூறினார்.சீனாவின் நடவடிக்கைகள் நிச்சயமாக பின்பற்றப்படவேண்டியவை என்பது அவரது உறுதியான நிலைப்பாடாகும்.