அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஐடிரிஸ் எல்பா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஐடிரிஸ் எல்பா. 47 வயதாகும் ஐடிரிஸ், கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ் முன்னெச்சரிக்கையாக தனக்கும் சோதனை செய்துள்ளார்.
தற்போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை எந்தவித அறிகுறியும் இல்லை; தான் எப்போதும் போல நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஐடிரிஸ் தனது மூன்றாவது மனைவியான ஷப்ரினாவுடன் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு இன்னும் சோதனை செய்யவில்லையாம். மேலும் மக்கள் அனைவரும் இதுகுறித்து மிக அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
‘ஒருவருக்கொருவர் விலகியிருங்கள்; அடிக்கடி கைகளை நன்றாக கழுவுங்கள்; எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களிடம் இருந்து கூட இந்த வைரஸ் பரவுகிறது; நோய் அறிகுறி இருந்தால் அதனை மறைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்; நாம் பல பகுதிகளில் பிரிந்து வாழ்ந்தாலும் இதனை சேர்ந்தே எதிர்கொள்ள வேண்டும்; யாரும் பயப்பட வேண்டாம்’ என அனைவருக்கும் அறிவுரையும் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal
