புகழ்பெற்ற புலனாய்வுப் பத்திரிகையாளரான நிக் டேவீஸ் நல்ல நாவலாசிரியரும்கூட. அரசும் ஆட்சியாளர்களும் மறைக்க நினைக்கும் ரகசியங்களைத் தேடிக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தும் இவர், ‘விக்கி லீக்ஸ்’ பல உண்மைகளை அம்பலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பிரிட்டனில் ரூபர்ட் முர்தோச்சின் ஊடக சாம்ராஜ்யம் தொடர்பான தகவல்களுடன், ‘நியூஸ் ஆஃப் த வேர்ல்ட்’ பத்திரிகை ஒட்டுக்கேட்பு விவகாரத்தையும் எழுதினார். தான் வழங்கிய புலனாய்வுச் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு நூல்களையும் எழுதுவது இவருடைய வழக்கம்.
ஒவ்வொரு முறை புத்தகம் எழுதும்போதும் பெரிய போராட்டமாகத்தான் இருக்கிறதா?
புத்தகம் எழுதுவது கடினமான வேலை தான்; அதற்குப் பல மாதங்கள்கூடப் பிடிக்கும்.
எல்லாத் தகவல்களும் கிடைத்த பிறகு, ஒரு புத்தகத்தை எழுத எவ்வளவு காலம் பிடிக்கும்?
இரண்டு ஆண்டுகள். எழுதத் தொடங்கும் போது எல்லாத் தகவல்களும் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை ஆய்வுசெய்து எழுத ஒவ்வொரு புத்தகத்துக்கும் எனக்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன.
குறிப்பிட்ட நேரத்தில்தான் பெரும்பாலும் எழுதுவீர்களா? பல எழுத்தாளர்கள் அதிகாலை நேரம்தான் எழுதுவதற்கு உகந்த நேரம் என் கிறார்கள்; நீங்கள் எப்படி? லண்டன் மாநகரி லிருந்து தொலைவிலிருக்கும் பண்ணை வீட்டில் இருக்கிறீர்கள் அல்லவா?
காலையில்தான் பெரும்பாலும் எழுதுவேன். மூளை அப்போது கூர்மையாகச் செயல்படும். பிற்பகலிலும் எழுதுவது உண்டு. ஆனால், அவ்வளவாகச் சரிப்பட்டு வராது. மாலை வேளைகளில் எழுத முயற்சிகள் மேற்கொண்டேன். அப்போது மூளை களைத்தும் சோர்ந்தும் போய்விடுவதால் எழுத்துத் தரமானதாக இருக்காது. புத்தகத்தை எழுதுவதற்கு ஆழ்ந்த சிந்தனை அவசியம். அதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். எனவே நன்றாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவது அவசியம். எல்லா நேரங்களிலும் வேலை செய்துகொண்டே இருப்பதும் கூடாது.
புலனாய்வு அடிப்படையில் திரட்டி எழுதும் செய்திகளைக் கொண்டு எப்படிப் புத்தகம் எழுதுகிறீர்கள்? பிரிட்டனில் முர்தோச் நடத்தும் செய்தித்தாள்களின் பத்திரிகையாளர்கள் மற்ற வர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டு செய்திகளைத் திரட்டியது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட செய்திகளை அளித்திருக்கிறீர்கள். அப்புறம் எப்படி அதையே புத்தகமாக எழுத முடிகிறது?
உண்மையில், அது மிகவும் கடினமானது. அப்படிச் செய்ய முயலும்போது இரு கதைகளை நீங்கள் எழுத நேர்கிறது. முதலாவது இந்தச் செய்தி எப்படி எனக்குக் கிடைத்தது என்பது. என்னுடைய ஆய்வாளரும் நானும் ‘நியூஸ் ஆஃப் தே வேர்ல்ட்’ பத்திரிகையில் பணிபுரிந்த 30 பேரிடம் பேட்டி கண்டோம். எப்படி அந்தச் செய்தி உங்களுக்குக் கிடைத்தது என்று 30 பேருடைய பேட்டிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து எழுதினாலும் முழுப் புத்தகத்துக்கு அது போதாது. பிறகு, அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் என்ன நடக்கிறது, புலனாய்வு செய்வதில் திறமைவாய்ந்த ஸ்காட்லாந்து யார்டில் என்ன நடக்கிறது, பிரிட்டிஷ் அரசில் என்ன நடக்கிறது என்றெல்லாம் தகவல் திரட்டி எழுத வேண்டும். ‘தி ஹேக்’ என்ற புத்தகம் அப்படி எழுதப்பட்டது. அதில் முதல் அத்தியாயம், அந்தச் செய்தியை எப்படி, எங்கே பிடித்தோம் என்பது பற்றியது. அடுத்தது அந்தச் செய்தியைப் பற்றியது.
மக்களைப் பொறுத்தவரை ஒரு ஊழல் செய்தியை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்பதைவிட, அந்த ஊழல் என்ன என்று அறிவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பது மிகப் பெரிய ராட்சச மிருகத்தை, மூன்றடி உயரக் குள்ளன் பின்தொடர்ந்து செல்வதைப் போன்றது. புத்தகப் பதிப்பாளர்களுக்கு அந்தச் செய்தியும் வேண்டும், ஊழல் பற்றிய விவரங்களை எப்படிச் சேகரித்தார்கள் என்ற திகிலூட்டும் பரபரப்பும் வேண்டும். எனவே ஊழலைப் பற்றி மட்டுமல்ல, ஊழலுக்குப் பின்னால் இருக்கும் விவரங்களையும் சொல்லியாக வேண்டும்.
புத்தகம் எழுத ஆரம்பிக்கும்போது மீண்டும் முதலிலிருந்து தொடங்குவீர்களா? செய்திக் காகப் பேட்டி கண்டவர்களிடம் புத்தகத்துக் காகவும் பேட்டி காண்பீர்களா? தகவல்களையும் அதன் பின்னணியையும் இணைக்கக் கூடுத லாக நிருபர் வேலை எதையும் மேற்கொள் வீர்களா?
பத்திரிகையில் செய்தியாக எழுதிய ஒன்றைப் புத்தகமாக எழுதுவது என்றால் அது தொடர்பான எல்லாத் தகவல்களையும் திரட்டி வைத்துக்கொள்வேன். அதில் மேற்கொண்டு எதைப் புத்தகத்தில் சேர்க்கலாம் என்று பார்ப்பேன். சில வேளைகளில் ஏற்கெனவே சந்தித்தவர்களை மீண்டும் போய்ப் பார்த்து, கூடுதல் தகவல்களைப் பெற வேண்டியிருக்கும் அல்லது கிடைத்த தகவல்களைச் சரிபார்க்க வேண்டியிருக்கும். புத்தகத்தை எழுதும்போது மேலும் சில கேள்விகளுக்குப் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். எனவே, போதும் என்ற திருப்தி ஏற்படும்வரை தகவல்களைத் திரட்டுவது தொடரும்.
நீங்கள் எழுதிய புத்தகங்களிலேயே எது உங்களுக்கு மிகவும் பிடித்தது?
‘ஒயிட் லைஸ்’ (White Lies). டெக்சாஸ் மாகாணத்தின் சிற்றூர் ஒன்றில் வெள்ளை இனப் பெண்ணைப் பாலியல் வன்முறைக்குள்ளாகியதாகக் குற்றஞ்சாட் டப்பட்டு ஒரு கருப்பின இளைஞனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உண்மையில், அந்த இளைஞன் அப்பாவி. உண்மையில், அதைச் செய்தவர்கள் இரு வெள்ளைக்காரர்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள்?
புத்தகம் படிக்கத் தொடங்கிய காலத்தில், டாம் உல்ஃப் எழுதிய ‘தி நியூ ஜர்னலிசம்’ என்ற கட்டுரைத் தொகுப்பை விரும்பி வாசித்தேன். அவர் பத்திரிகையாளராக இருந்து நாவலாசிரியராக மாறியவர். அதில் உண்மையாகவே பல சுவாரசியமான சம்பவங்கள் உள்ளன. உண்மைக் கதையை எழுதும் நாவலாசிரியர் பயன்படுத்தும் உத்திகளை அவர் நன்றாகக் கையாண்டிருந்தார். அதில் உரையாடல்கள், பாத்திரங்கள், பாத்திரங்கள் பார்வையில் நடந்த சம்பவங்கள் என்று அனைத்துமே உண்டு. அப்புத்தகத்தில் இருந்த சில கட்டுரைகள்தான் எனக்கு உந்துசக்தியாக இருந்து நன்றாக எழுத உதவுகின்றன.
தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.