கொரோனா அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 16-ம் திகதி முதல் ஏப்ரல் 12-ம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து பேட்மிண்டன் போட்டித் தொடர்களையும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் வரும் 24-ம் திகதி தொடங்கவிருந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரும் திகதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்ரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையும் ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் முதல் போட்டி நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நியூசிலாந்து அரசு புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், நாடு திரும்ப வேண்டும். அத்துடன், அவர்கள் 14 நாட்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதன் காரணமாக கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த மாத இறுதியில் இரு அணிகளும் நியூசிலாந்தில் விளையாட உள்ள டி20 போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறாது. இந்த போட்டிகள் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.