ஆஸ்திரேலிய ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்து அகதியும் இசையமைப்பாளருமான மோஸ்தபா அசிமிடபரின் பாடல் பதிவுக்கு ஆஸ்திரேலிய எல்லைப்படை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
சுமார் 7 ஆண்டுகளாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த மோஸ்தபா, மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு மாதங்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மாற்று தடுப்பு மையாக அறியப்படும் இந்த ஹோட்டலில் இவருடன் 55 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.
மோஸ்தபா பப்பு நியூ கினியாவில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது நியூசிலாந்து இசைக்கலைஞர் ரூத் முண்டேவுடன் இணைந்து ‘தி பேர்ட்ஸ்’ என்ற பாடலை உருவாக்கி இருக்கிறார்.
மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட மோஸ்தபா, தற்போது ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், பாடல் பதிவிற்காக ஹோட்டல் அருகே உள்ள ஸ்டூடியோவுக்கு செல்ல முயன்ற மோஸ்தபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலிலேயே பாடலை பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
“என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் செய்த குற்றம் என்ன? நான் ஸ்டூடியோவை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை?,” எனக் கேள்வி எழுப்புகிறார் மோஸ்தபா.
இவ்வாறு அகதிகளை தடுத்து வைக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு ஓர் இரவுக்கு 160 ஆஸ்திரேலிய டாலர்களை ஆஸ்திரேலிய அரசு செலுத்துகின்றது. இந்த அகதிகளை கண்காணிக்க பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நிலையில், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படுவதாகக் கூறப்படும் பப்பு நியூ கினியா தீவில் 228 அகதிகளும், நவுருத்தீவில் 211 அகதிகளும் வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வைக்கப்பட்டுள்ள அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.