கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின் போக்கை அடியோடு திசை திருப்பியிருந்தன.
அன்றைய ஆளும்கட்சியான ஐ.தே.கவுக்கு மரண அடி கொடுத்த அந்தத் தாக்குதல்கள், அப்போதைய அரசாங்கத்தின் இயலாமையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின.
அதுவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கும், முக்கிய காரணமாக அமைந்தது.
மறுபுறத்தில், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற வெற்றியைக் கொண்டு, தற்போதைய அரசாங்கம் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு, அதிவேகத்தில் பயணிக்க முயன்றது.
பொருளாதார நெருக்கடிகளும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமையும் எதிர்பார்த்த வேகத்தில் அரசாங்கத்தால் செயற்பட முடியாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்றும் நாளுக்கு நாள் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ், இலங்கைக்கு நேரடியாகப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத போதும், எதிர்காலத்தில் அத்தகைய பாதுகாப்பான நிலை தொடருமா என்ற கேள்வி உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைகளை, இலங்கை அரசாங்கம் பின்பற்றத் தவறி விட்டதாகவும் இதனால், நாடு பெரியளவில் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ கூறியிருக்கிறார்.
இலங்கை அரசாங்கம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எதிர்பாராத திசைகளில் இருந்து கொரோனா அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.
வெறுமனே வெளிநாட்டில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி வைத்தலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் தீவிர கண்காணிப்பை முன்னெடுப்பதும் தான், இந்த ஆபத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல.
கொரோனா பரவக் கூடிய சாத்தியங்கள் உள்ள வழிகள் எல்லாவற்றையும் அரசாங்கம் அடைத்தாலும் கூட, வதந்திகளும் மக்கள் மத்தியில் உள்ள அச்சமும் அரசாங்கத்துக்கு ஆபத்தாக மாறத் தொடங்கியிருக்கின்றன.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டாலும் சரி, தடுப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க முயன்றாலும் சரி, அது மக்கள் மத்தியில் எதிர்ப்புகளையே தோன்றுவிக்கும்.
சீனாவில் இருந்து இந்த நோய் பரவத் தொடங்கியதை அடுத்து, இலங்கையில் பணியாற்றும் சீனர்களுக்கு எதிரான உணர்வுகள், இலங்கையர்களிடம் தோன்றின.
நோயைப் பரப்புபவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சீனர்களுக்குப் பொதுப் போக்குவரத்து, விடுதிகள், பொது இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டன.
இது சீனாவுக்குக் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்திடம் அதிருப்தியைத் தெரிவிக்கவும் சீனா தயங்கவில்லை.
அந்த அதிருப்தியின் விளைவாகத் தான், சீனாவில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு மய்யத்துக்கு அனுப்பும் செயல்முறையை அரசாங்கம் அறிவிக்கவில்லை.
ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பும் அரசாங்கம், இந்த நோய் பரவக் காரணமாக இருந்த, அதிகளவில் பாதித்த சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம், ஏன் விதிவிலக்காக நடந்து கொள்கிறது? இந்தக் கேள்வி இப்போது தீவிரமாக எழுந்திருக்கிறது.
இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பொருளாதார ரீதியில் சீனாவின் பொறிக்குள் அகப்பட்டுள்ளதால், சில நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.
இந்த இயலாமை நிலை, இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான ஒன்றாக இருக்க முடியாது. கொரோனா தொற்றுப் பரவக் கூடிய வாய்ப்புகள் இருந்தும், சீனர்களைத் தடுப்பு மய்யங்களுக்கு அனுப்பும் துணிச்சல், அரசாங்கத்துக்கு இல்லாதமை, அதன் முக்கியமான தோல்விகளில் ஒன்றாகக் குறிப்பிடக்கூடியது.
அதுபோலவே, கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை, 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கண்காணிப்புக்கு உட்படுத்தும் திட்டமும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. தெற்கிலுள்ள மக்கள், இத்தகைய கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அதற்கிடையில் அரசாங்கம், இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களைக் கிழக்கில் திறந்து விட்டது. அதற்கு எதிராகக் கிழக்கில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தென்பகுதியில், தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பது, அதற்கு முக்கியமான தோல்வியாகும்.
தென்பகுதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்காமல் விட்டதன் மூலம், சிங்கள மக்களின் வெறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயன்றிருக்கிறது அரசாங்கம்.
அதேவேளை, கொரோனா பாதிப்பைத் தடுக்க முடியாவிட்டால், ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பையும் அரசாங்கம் சந்திக்க நேரிடும்.
இன்னொரு பக்கத்தில், கொரோனா தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களைக் கிழக்கில் அமைத்துள்ளதால், அங்குள்ள மக்கள் அரசாங்கத்திடம் இருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அரசாங்கம் பழிவாங்கி விட்டதாகவும் தம்மைப் பலிக்கடா ஆக்குவதாகவும் கிழக்கில் உள்ள மக்கள் கருதுகிறார்கள். இதுவும் அரசாங்கத்துக்குச் சிக்கலைக் கொடுத்திருக்கிறது.
ஏற்கெனவே, சிறுபான்மையினரால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கம் என்றும், சிறுபான்மையினரின் நலன்களில் அக்கறையற்ற அரசாங்கம் என்றும் சொல்லப்படுகின்ற நிலையில், இரண்டு தனிமைப்படுத்தல் நிலையங்களைக் கிழக்கில் அமைத்திருப்பது, அரசாங்கத்தின் மீது மேலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா என்பது, இரண்டு பக்கமும் கூரான ஆயுதம் போன்றது; எந்தப் பக்கம் அசைத்தாலும் அது, அரசாங்கத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்.
இந்த நிலையில் தான், கொரோனா பீதியைக் காரணம் காட்டி, அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடத் திட்டமிட்டிருப்பதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவ்வாறான ஒரு திட்டம் குறித்து, அரசாங்கம் தம்முடன் பேசவில்லை என்றும் அத்தகைய நோக்கம் எதுவும் கிடையாது எனவும், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார்.
இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்கும் ஊடகங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
ஆனால், ஐ.தே.கவின் இளம் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோவும் அதே குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.
“கொரோனா பீதியால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடந்தால், அரசாங்கம் தோல்வியைச் சந்திக்க நேரிடும். எனவே, தேர்தலைப் பிற்போட முனைகிறது” என்று அவர் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ, வேட்புமனுவில் முன்கூட்டியே கையெழுத்திட்டிருப்பது, இந்த நாடகத்தின் முதற்கட்டம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கம், தேர்தலைப் பிற்போடுவது என்பது கடினமானது; அவ்வாறான ஒரு சூழல் உருவானால், அது அரசமைப்பு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.
அதேவேளை, கொரோனா பீதி இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெறுப்புணர்வு, அத்தகையதொரு முடிவை எடுக்க, அரசாங்கம் முயற்சிக்காது என்பதை உறுதியாகக் கூறவும் முடியாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், எந்தளவுக்கு மக்கள் மத்தியில் அப்போதைய அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தினவோ, அதேவிதமான எதிர்ப்பலைகளைத் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, கொரோனா வைரஸ் பரவுகையும் உருவாக்க ஆரம்பித்திருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளை, அரசாங்கம் பின்பற்றத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை, அரசியல் கட்சிகளும் முன்வைக்க ஆரம்பித்திருப்பது, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நல்லதொரு சகுனமாக இருக்க முடியாது.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும், அது மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.
உதாரணத்துக்கு, கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களை, இராணுவமே அமைத்து நிர்வகித்து வருகிறது. ஏற்கெனவே, நாட்டில் இராணுவ ஆட்சி பற்றிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், கட்டாயமாக இந்த நிலையத்துக்கு அனுப்பப்படுபவர்கள், அரசாங்கத்தின் மீது வெறுப்படைவது இயல்பு.
முதல் தொகுதியினர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர், உணவுக்காக 7,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியதால், எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை அடுத்தே, எந்தக் கட்டணமும் அறவிடப்படாது என்று இராணுவத் தளபதி அறிவித்திருந்தார்.
இதுபோல, இராணுவம் அல்லது வேறு அரச துறை நிறுவனங்களைக் கொண்டு, கொரோனாவைக் கட்டுப்படுத்த முயன்றாலும், அது அரசாங்கத்துக்கு அவப்பெயரையும் நெருக்கடிகளையும் கொடுக்கும்.
அதுபோல, கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அது வேகமாகப் பரவத் தொடங்கினாலும், அரசாங்கம் சிக்கலையே எதிர்கொள்ளும்.
நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகின்ற சூழலில், அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் தமது பயண, நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்த முடியாத நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எல்லாவற்றையும் கொரோனா தான் தீர்மானிக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த இருமுனைக் கத்தியை அரசாங்கம் எப்படிக் கையாண்டாலும் சரி, கையாளா விட்டாலும் சரி, கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத் திறமை பற்றிய உயர்மதிப்பீடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.
கே. சஞ்சயன்