பற்றிப் பரவும் கரோனா

சீனா: பாதிப்புகள் – 80,793 மரணங்கள் – 3,169

இத்தாலி: பாதிப்புகள் – 12,000 மரணங்கள் – 827

ஈரான்: பாதிப்புகள் – 9,000 மரணங்கள் – 354

தென் கொரியா: பாதிப்புகள் – 7,869 மரணங்கள் – 66

ஸ்பெயின்: பாதிப்புகள் – 2182 மரணங்கள் – 49

பிரான்ஸ்: பாதிப்புகள் – 1,784 மரணங்கள் – 33

ஜெர்மனி: பாதிப்புகள் – 1908 மரணங்கள் – 3

ஜப்பான்: பாதிப்புகள் – 1278 மரணங்கள் – 19

அமெரிக்கா: பாதிப்புகள் – 1267 மரணங்கள் – 37

இந்தியா: பாதிப்புகள் – 76

சோப்பு நம் காவலன்

கரோனாவை எதிர்கொள்வதில் சோப்பு ஒரு முக்கியமான ஆயுதம் என்கிறார் ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் வேதியியல் கல்லூரிப் பேராசிரியர் பாலி தோர்டர்சன். சோப்பைக் கொண்டு கைகழுவுவதன் அவசியத்தைப் பற்றி அவர் போட்டிருக்கும் ட்விட்டர் பதிவுகள் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் இங்கே…

பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு முறை தங்கள் முகத்தைத் தொடுவார்கள்.

வைரஸ் நம் கையில் பட்டுவிட்டதென்றால் நீங்கள் கை கழுவினாலொழிய வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நீரைக் கொண்டு மட்டும் கை கழுவினால் போதாது. ஏனெனில் கரோனா வைரஸ் ஒட்டும் இயல்புள்ளது. வெறும் தண்ணீரால் கழுவினால் போகாது.

சோப்புநீர் என்பது முற்றிலும் வேறானது. சோப்பில் ஆம்ஃபிஃபில்ஸ் எனப்படும் கொழுப்பு போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இவை வைரஸின் வெளி உறையில் உள்ள லிப்பிடுகளைப் போலவே இருப்பவை.

சோப்பு மூலக்கூறுகள் வைரஸின் லிப்பிடுகளுடன் போட்டி போடுகின்றன. வைரஸைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பசையை கரைத்துவிடுகின்றன.

வைரஸுக்கும் நம் தோலுக்கும் இடையிலான தொடர்பையும் சோப்பு மூலக்கூறுகள் தடுத்துவிடுகின்றன.

சோப்பு, நீர் ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டால் வெகு விரைவில் வைரஸ்கள் தனித்தனியாகக் கழன்று உதிர்கின்றன.

நமது தோல் சுருக்கங்கள் நிறைந்ததாக இருப்பதால் நம் கைகளை சோப்பால் நன்றாகத் தேய்த்து நீரிலும் முழுமையாக முக்கி எடுக்க வேண்டும். அப்போதுதான், வைரஸ்கள் ஒளிந்திருக்கக்கூடிய எல்லா இண்டு இடுக்குகளுக்கும் சோப்புநீர் பரவி வைரஸ்களைத் துடைத்தழிக்கும்.

தொற்றுநீக்கிகள் (டிஸ்இன்ஃபெக்ட்டன்ட்ஸ்), துடைப்புக் காகிதங்கள், ஜெல்கள், க்ரீம்கள் போன்றவையும் ஆல்கஹாலைக் கொண்டிருந்தாலும் சோப்பு அளவுக்கு அவை பயனுள்ளவை கிடையாது.

ஏனென்றால், துடைப்புக் காகிதங்களையும் ஜெல்களையும் கொண்டு துடைக்கும்போது உங்கள் கைகளில் உள்ள வைரஸ்களைக் கொல்லுமளவு உங்கள் கை முழுவதுமாக சுத்தமாகும் என்று சொல்ல முடியாது.