அதுவோர் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்பு… அன்றைய விரிவுரையை நடத்துவதற்கு, அறைக்குள் வந்த பேராசிரியர், தான் கற்பிக்கப் போகும் விடயப் பரப்பின் தலைப்பையும் தனது பெயரையும் திரையில் விழுத்துகிறார்.
வகுப்பெங்கும் சலசலப்பும் அங்காங்கே முணுமுணுப்புகளும்….
பேராசிரியர் இப்படித் தொடங்குகிறார்; “வணக்கம்! நான் இத்தாலியன் என்பதை நீங்கள் அனுமானித்திருப்பீர்கள். வடக்கு இத்தாலியில் உள்ள எவருடனும் நான், நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை. இத்தாலியில் இருந்து வந்த எவரையும் நான், கடந்த இரண்டு மாதங்களாகச் சந்திக்கவில்லை. இவை, உங்களுக்கு நம்பிக்கையூட்டும் என்று நம்புகிறேன்”. வகுப்பில் ஒரு நீண்ட பெருமூச்சு; அதைத் தொடர்ந்தது மயான அமைதி.
இது மேற்குலகப் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த நிகழ்வு. இந்தச் சம்பவம், கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் பரிமாணங்களையும் அறிவியலையும் தாண்டி, அச்சம் மேலோங்குவதையும் காட்டி நிற்கிறது.
ஒருபுறம், சீனாவில் கொரோனாவின் தாக்கம் மெதுமெதுவாகக் குறைகின்ற அதேவேளை, ஐரோப்பாவை அது வீரியமாகத் தாக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டு விடயங்களை, இங்கு நோக்க வேண்டியுள்ளது. முதலாவது, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சவுணர்வு, புதிய எல்லையை எட்டியுள்ளது.
இரண்டாவது, அறிவியலுக்குப் புறம்பான பல விடயங்கள், அறிவியலின் பெயரால் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தகவல் பரப்பு ஊடகங்களின் ஊடாகவும் பரவுகின்றன.
அறிவியலின் மூலமும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் மனிதகுலம் எதிர்நோக்கும் அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்ளமுடியும் என்று நேற்றுவரை, உலகம் நம்பியிருந்தது. ஆனால், இன்று அது எவ்வளவு மாயை என்பதை, கொரோனா கோடிட்டுக் காட்டியுள்ளது.
சீனாவின் தற்போதைய நிலை
சீனா, இப்போது கொரோனாத் தொற்றை, ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதற்காக, சீனா மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளது. ஏராளமான வைத்தியர்கள், தாதிமார், மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகமே, இன்று இந்தத் தொற்று, சீனாவில் குறைவதற்குக் காரணமாகியுள்ளது.
இந்தத்தொற்றின் தீவிரத்தை அறிந்தவுடனேயே, சீன அரசு துரிதமாயும் கண்டிப்புடனும் செயலில் இறங்கியது. அதை, உலக சுகாதார நிறுவனம் மெச்சியது. ஆனால், இவை ஊடகங்களில் கவனம் பெறவில்லை.
இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த, சீன மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள், கியூபாவால் உருவாக்கப்பட்ட Antiviral Recombinant Interferon Alpha 2B (IFNrec) என்ற மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது பலனளிப்பதாகச் சீனா தெரிவித்துள்ளது.
இந்த Interferon, 1981ஆம் ஆண்டு உயரியல் தொழில்நுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கியூபாவால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.
கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தடை, இந்த மருந்துகள் வேறுநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்தது. இன்று, கியூப மருந்துகளே இந்தத் தொற்றுக்கெதிரான போராட்டத்துக்கு உதவுகின்றன.
சீனாவில் இந்தத் தொற்றுத் தொடங்கியது முதல், சீனவன்மம் உலகின் பல நாடுகளில் அரங்கேறியுள்ளது. சீனரின் கடைகளுக்குப் போவதைத் தவிர்ப்பதும், சீனரை நுழைய விடாது தடுப்பதும் பெருமளவில் நடந்தது. அமெரிக்காவிலும் சீனர் மீது, தனிப்பட்ட பகைமை பாராட்டும் போக்கு ஊக்குவிக்கப்பட்டது. இப்போது நிலைமைகள், கொஞ்சம் மாறிவருகின்றன.
செவ்வாய்கிழமை (10), சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங், தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வூஹான் மாகாணத்துக்கு விஜயம் செய்தார். இந்த விஜயம், சீனர்களிடையே மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. சீனா மீண்டு வருகிறது.
ஐரோப்பிய நிலைவரம்
சீனாவில் கொரோனா தொற்றுத் தொடங்கி உக்கிரமடைந்தபோது, பல ஐரோப்பிய அரசாங்கங்கள் மகிழ்வுற்றன. சீனாவைப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடையச் செய்யவும் தனிமைப்படுத்தவும் இவை உதவும் என எதிர்பார்த்தன. ஆனால், இதே கொரோனா தொற்று, தங்கள் நாடுகளைப் பாரியளவில் தாக்கும் என எதிர்பார்க்கவில்லை.
இத்தாலியில், இந்தநோய்த்தொற்று மோசமாகிப் பரவி, வடக்கு இத்தாலி முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. செவ்வாய்கிழமை (10) இத்தாலியப் பிரதமர் முழுநாட்டுக்குமான பயணத்தடையை அறிவித்ததோடு முழுநாடுமே தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (09) இத்தாலியில் ஒரே நாளில் 97 பேர் மரணமடைந்ததோடு, நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 26 சதவீதத்தால் அதிகரித்தது.
பல ஐரோப்பிய நாடுகளில், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இருமல், தும்மல், சளி போன்ற ஏதாவதொன்று இருக்கிறவர்கள் வீட்டில் இருக்கும்படி கேட்கப்படுகிறார்கள். கூட்டங்கள் கூடுவது, நிகழ்ச்சிகள் வைப்பது போன்றன நிறுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம், “கொரோனாத் தொற்று, உலகளாவிய ரீதியில் மிகப் பாரதூரமான கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் அதிகமுள்ளது” என எச்சரித்துள்ளது.
அச்சத்தின் அவலம்
உலகின் பல நாடுகளில் பல்பொருள் அங்காடிகளில் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மக்கள் பெருமளவில் பொருள்களை வாங்கிச் சேமித்து வைக்கிறார்கள். தங்களுக்கு கொரோனாத் தொற்றுவந்தால், வீட்டை விட்டு வெளியேற முடியாது என்ற காரணமும், சீனாவில் இருந்தே பல பொருள்கள் வருவதால், அவை தீரமுதல் வாங்கிச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் பிரதான காரணங்கள் ஆகும்.
இது மூன்று எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. முதலாவது, இந்தச் செயற்பாடு, மக்களிடையே அச்சவுணர்வை அதிகரித்துள்ளது. இரண்டாவது, பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மூன்றாவது, பொருள்கள் கிடைக்காமல் பலர் அவதிப்பட நேர்ந்துள்ளது.
மனிதர்களின் பொறுப்பீனத்தால், வைரஸ் தொற்று துரிதமாகியுள்ளது. பலநாடுகளில் தனிமையில் வீட்டில் இருக்கும்படி கேட்கப்பட்டவர்கள் வெளியே நடமாடுகிறார்கள். இதனால், தொற்று வேகமாகப் பரவுகிறது. பொதுமக்களின் நம்பிக்கையும் ஒத்துழைப்புமின்றி நோய்ப்பரவலைத் தடுப்பது கடினமானது. இதை மக்கள் உணராதவரை, இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினம்.
அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்
கடந்த ஒரு மாதமாக, கொரோனாத் தொற்றிலிருந்து தப்புவதற்கான ஏராளமான வழிமுறைகளை, ஒவ்வொருவரும் தமது அலைபேசிகளின் ஊடாகப் பெற்றிருப்போம்; பெற்றுவருகிறோம். அவற்றில் பெரும்பாலானவை, அறிவியல் ரீதியாகத் தவறானவை. ஆனால், அவற்றை உணராமல், அவை உண்மை என்று நம்பி, நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சில தினங்களுக்கு முன்னர், உலக சுகாதார நிறுவனம் இவற்றுக்கு விரிவான பயனுள்ள பதில்களை அளித்துள்ளது.
உள்ளி பயன்படுத்துவது, இந்தத் தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் என்ற செய்தி முதலாவது. ‘உள்ளி மருத்துவக் குணங்கள் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், உள்ளி சாப்பிடுவதால், கொரோனாத் தொற்று ஏற்படாது என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை’ என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாவது, எமது தொண்டையை ஈரலிப்பாக வைத்திருந்தால் கொரோனா வைரஸ் தாக்காது. நீர் அருந்துவது நல்லது; ஆனால், அது கொரோனாத் தொற்றிலிருந்து காப்பாற்றாது; ஏனெனில், கொரோனா வைரஸுகள் சுவாசத்தின் ஊடாக உட்புகுபவை.
மூன்றாவது, வெப்பநிலை; அதிக வெப்பமுள்ள நாடுகளில் இந்தத் தொற்றுப் பரவாது. இதற்கும் அறிவியல் ரீதியான சான்றுகள் இல்லை.
நான்காவது, தேசிக்காய் போன்ற விற்றமின் சீ உள்ளவற்றை உட்கொள்வது, பலனளிக்கும் என்பதாகும். விற்றமின் சீ, சில மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆனால், கொரோனாத் தொற்றிலிருந்தான பாதுகாப்புக்காக அல்ல.
இந்தத் தகவல்கள், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தால் சொல்லப்பட்டதாகச் செய்திகள் பரவின. ஆனால், இதை ஐ.நா சிறுவர் நிதியம் மறுத்துள்ளதோடு, இந்தத் தகவலுக்கான அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை என்று சொல்லியுள்ளது.
கொரோனா வைரஸ் மூலம், நன்மை அடைந்தவர்களில் முக்கியமானவர்கள், உலகின் பெரிய மருத்துவக் கம்பனிகள் ஆவார். நோய் என்ன என்பது பற்றிய அறியாமையை, மருத்துவக் கம்பனிகள் தமது மூலதனமாக்குகின்றன. அவற்றுக்கு உடந்தையாக விநியோகக் கம்பனிகளும் மருத்துவத்துறையினரும் குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளும் செயற்படுகின்றன.
இன்று, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயமும் பதற்றமும் அவர்களுக்கு நல்ல வியாபாரமாகி உள்ளன. கொரோனா வைரஸ் அச்சம் கிளம்பிய சில வாரங்களுள், உலகின் பல நாடுகளில் கணிசமானோர் மூக்குக்கு மேலாக உறைகளுடன் நடமாடினர். அந்த உறைகளால் என்ன பாதுகாப்பு உண்டு என்ற விசாரணை இன்றியே, பலரும் அவற்றை வாங்கினர். அவற்றுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அரசாங்கங்கள் அவற்றின் பயனின்மை பற்றி அறிவிக்கும் முன்பே, சில வணிகர்கள் கோடிக் கணக்கில் சம்பாதித்து விட்டனர்.
இங்கு சொல்லப்பட வேண்டிய முக்கியச் செய்தி யாதெனில், சமூக நலன்கள் சார்ந்த விடயங்களில், ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்.
அச்சத்தை விதைப்பதன் மூலம், இலாபமடைவது சில வியாபாரிகள் மட்டுமே! நோய்கள் பற்றி மக்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவது, ஊடகங்களின் பொறுப்பு.
மாறாக, விஞ்ஞான ரீதியான ஆதாரமற்ற போலி மருத்துவத் தகவல்களுக்கு, பல ஊடகங்கள் துணையாவதும் அதை நம்பி மக்கள் பலியாவதும் வருந்தத்தக்கது.
கொரோனா வைரஸின் தோற்றுவாய்
இந்தத் தொற்றுப் பற்றிய இவ்வளவு அமளி துமளிக்குள்ளும், பதிலளிக்கப்படாத கேள்வி ஒன்று உள்ளது. அதுதான், இந்தத் தொற்று எவ்வாறு ஏற்பட்டது. இதன், மூலம் என்ன என்பதாகும்?
இதற்கான விடையை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவின் வூஹான் மாகாணத்திலேயே இது ஏற்பட்டுப் பரவியபடியால், இதன் தோற்றுவாய் வூஹான் மாகாணத்தில் உள்ள கடலுணலுச் சந்தையே எனச் சந்தேகிக்கப்பட்டது.
மறுபுறம், வூஹான் மாகாணத்தில் உள்ள உயிரியல் ஆய்வுகூடங்களில் இருந்து, தவறுதலாக இந்த வைரஸ்கள் வெளியேறிவிட்டன. இது, சீனாவின் உயிரியல் ஆயுத உருவாக்கத்தின் ஒருபகுதி என்றெல்லாம் எழுதப்பட்டது.
நீண்ட, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, சீன ஆய்வாளர்கள் பின்வரும் முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். “இந்த வைரஸ், முதன்முதலாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இதன் தோற்றுவாய் சீனா அல்ல; இது, முதன்முதலாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்படுவதற்குச் சில காலத்துக்கு முன்னரே, சீனாவுக்குள் வந்துள்ளது.
இது 2019ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் வூஹான் இராணுவ விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்தே, பரவத் தொடங்கியிருந்தது. எனவே, அந்த விளையாட்டுகளில் பங்கேற்க வந்த யாரோ ஒருவரிடமிருந்தே, இது தொற்றியிருக்க வேண்டும்.
சீன உயிரியில் ஆய்வாளர்களால், இந்தத் தொற்றுக்குள்ளான முதலாவது நபரை அடையாளம் காண முடியவில்லை. அவர், நிச்சயமாகச் சீனர் அல்ல; எனவே, இது வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று, சீன ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.
அதேவேளை, ஜப்பானின் ‘ஆஷி’ செய்தி ஊடகமானது, இந்த வைரஸ் அமெரிக்காவில் இருந்து வந்தது என்றும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. அது, அமெரிக்க இராணுவத்தினரே இதைப் பரப்புவதாக வாதிடுகிறது. அச்செய்தியும் வூஹான் இராணுவ விளையாட்டுப் போட்டிகளை நோக்கியே, தனது விரல்களை நீட்டுகிறது.
இதேவேளை, தாய்வானின் தேசிய தொலைக்காட்சி, இந்தத் தொற்றின் தோற்றுவாய் அமெரிக்கா என்றும் சொல்லியது.
இது குறித்த ஆய்வுகளை விளக்கிய தொற்றுநோய் சிறப்பு நிபுணர்கள், “2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், ‘நுரையீரல் பிரச்சினை’ காரணமாக, அமெரிக்காவில் 200 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களது மரணத்துக்கும் நுரையீரல் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவையே கொரோனாவின் தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார்கள்.
ஜப்பானும் தாய்வானும், சீனாவுடன் நட்புறவைக் கொண்ட நாடுகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், மூன்று நாட்டு ஆய்வாளர்களும் இதன் தோற்றுவாயாக அமெரிக்காவையே சுட்டுகிறார்கள்.
ஜப்பானிய ஆய்வாளர்கள், இங்கே இன்னொரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார்கள். கடந்த செப்டெம்பர் மாதம், அமெரிக்காவுக்குப் பயணித்துத் திரும்பிய சிலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் இருந்து வந்தவர்கள், அவ்வாறு பாதிக்கப்படவில்லை என்று சொல்லும் அதேவேளை, அமெரிக்காவில் நீண்டகாலமாக இயங்கிவரும் அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான உயிரியல் ஆய்வுகூடம் (fort detrick biodefense lab) திடீரென்று கடந்த ஓகஸ்ட் மாதம், தற்காலிகமாக மூடப்பட்டது. கிருமிகள் தொடர்பாகவும் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பாகவும் ஆய்வுகள் இங்கு இடம்பெற்றன. பாதுகாப்புக் காரணங்களாக இந்த ஆய்வுகூடத்தைத் தற்காலிகமாக மூடுவதாக அமெரிக்க இராணுவம் அறிவித்தது. இந்த ஆய்வுகூடத்தில் இருந்துதான் இந்தக் கொரோனா வைரஸ் கிளம்பியிருக்கலாம் என்ற ஐயம் நிலவுகிறது.
நாம் உணர்ச்சிப் பெருக்குகளுக்கு இடமளிக்காமல், தர்க்கரீதியாகச் சிந்தித்து, அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, பொறுப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் செயற்படவேண்டிய தருணம் இதுவாகும்.
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ