ஜனநாயகத்துக்கான ஆதாரமாக இருக்கும் தேர்தல் என்ற ‘மக்கள் சக்தி’க்கு, இலங்கை தேசம் சற்றும் சளைத்ததில்லை என்பது போல், அடுத்தடுத்துத் தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகின்றது நாடு.
அந்தவகையில், ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளைப் பலப்படுத்தும் முனைப்போடு, தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெருந்தேசிய கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க, இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது.
எனவே, தென்னிலங்கையில் ராஜபக்ஷ அணியின் வெற்றி என்பது, தற்போதைய அரசியல் நிலைவரப்படி, ஓரளவு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற நிலையை அடைவதற்காகச் செயற்பட்டு வருவதாகவே தென்படுகின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அமைப்பார்களா, இல்லையா என்பது, தென்பகுதியில் ஏனைய கட்சிகளின் வேட்பாளர் தெரிவும், அவர்கள் சார்ந்த பிரசார மேடைகளுமே தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன.
இந்நிலையில், சிறுபான்மை இனங்களின் கட்சிகளின் நிலை, பரிதாபத்துக்கு உள்ளாகி அல்லது உள்ளாக்கப்பட்டு வருகின்றமை, அச்சமூகங்களின் அரசியல் உரிமைகளுக்கான கோசங்களைப் பலமிழக்கச் செய்யும் என்பது மறுப்பதற்கில்லை.
கடந்த காலங்களில், வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், சிறுபான்மையினரின் ஊடாகத் தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகளின் பலத்தைச் சிதைப்பதற்கு, தென்னிலங்கைக் கட்சிகள், பெருந்தேசியக் கட்சிகள் பல்வேறு யுக்திகளைக் கையாண்ட வரலாறுகள் இருக்கின்றன.
அந்த வகையில், பல சுயேட்சைகள் தேர்தலில் குதித்து, வாக்குச் சிதறல்களை மேற்கொண்டிருந்த நிலையில், இம்முறை, மக்கள் செல்வாக்குப் பெற்ற, பெரிய தமிழ்க் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு, பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமையானது, தென்னிலங்கை செய்ய வேண்டிய கைங்கரியத்தை, தமிழ்க் கட்சிகள் தமக்குத் தாமே ‘மிகச்சிறப்பாக’ச் செய்து முடித்திருக்கின்றன.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரதான கோரிக்கைகளான, காணாமல் போனோர் விடயம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு என்ற விடயங்கள் தொடர்பாகத் தொடர்ந்தும் ஜனாதிபதி மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை வடக்கு, கிழக்கில் அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை விடுத்து, பிரிந்து நின்று செயற்பட எத்தனிக்கின்றன.பிரிந்துநிற்பதானது, எந்தவகையில் கோரிக்கைகளுக்குப் பலம் சேர்க்கும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க தவறிவிடுகின்றனர்.
முஸ்லிம் கட்சிகள் முடிந்த வரையில், ஒரு தளத்தில் பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அதற்கான பேச்சுகள் வடக்கிலும் கிழக்கிலும் மும்முரமாகவே இடம்பெறுகின்றன. எனினும், இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளும் சஜித் அணியுடனே பயணிப்பதற்கான அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
வடக்கை மய்யப்படுத்தி, ரிஷாட் பதியூதீன், சஜித் தலைமையிலான கூட்டில் தாம் போட்டியிடுவோம் எனத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னராகக் கூறிவந்த நிலையில், கிழக்கில் ரவூப் ஹக்கீமும் அவ்வாறான கருத்தையே பதிவு செய்திருந்தார்.
முஸ்லிம்கள் பரந்து வாழும் பிரதேசங்களில், அவர்களின் வாக்குகளை ஒருமித்துப் பெறுவதற்கும், தற்போதைய அரசாங்கத்தின் சிறுபான்மை வெறுப்பு நிலைப்பாட்டை உடைத்தெறிவதற்கும் அவர்களுக்குள்ள சந்தர்ப்பம், சஜித் தலைமையில் அப்பகுதிகளில் கூட்டாகப் போட்டியிடுவதேயாகும்.
எனவே, வடக்கு, கிழக்கிலும் அவர்களது நகர்வுகள் அவ்வாறானதாகவே இருக்கப்போகும் நிலையில், தமிழ்க் கட்சிகள், மக்கள் மத்தியில் குழப்பகரமான நிலையைத் தோற்றுவித்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பல அணிகளாகப் பிரிந்து, இன்று பிரிந்தவர்கள் கூட்டணி அமைத்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும், தமிழ் மக்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளமை, தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போயுள்ளது.
வட மாகாணத்தில் 8,58,861 வாக்காளர்களைக் கொண்டு, 13 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்களில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஏழு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தவற்காக 571,848 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய, வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 287,013 வாக்காளர்கள், ஆறு பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவுள்ளனர்.
வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்பதற்கப்பால், கடந்த காலங்களில் வடக்கின் வாக்களிப்பு சதவீதம் மிகவும் குறைவானதாகவே பதிவாகியுள்ளமையும் அவதானிக்க வேண்டியதாகும்.
இதற்கு மக்களின் அசமந்தம், அரசியல்வாதிகள் மத்தியில் உள்ள வெறுப்புணர்வு, எவரும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வை தரப்போவதில்லை என்ற விரக்தி மனநிலை போன்ற இன்னோரன்ன சாட்டுப்போக்குகள், நியாயங்கள், இவ்வாறான வாக்களிப்புக் குறைவுக்கு காரணமாக அமைகின்றன.
இவ்வாறான சூழலிலேயே, இம்முறை மதவாதமும் இனவாதமும் அதிகளவில் வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
தென்பகுதியில், எவ்வாறு சிங்கள தேசியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்களோ, அதேபோன்றதான நிலை, நாடாளுமன்றத் தேர்தலிலும் இருக்கத்தான் போகின்றது.
சிங்களப் பெரும்பான்மையின் நாடாளுமன்றத்தை அமைக்கப்போகின்றோம் என்ற வாதத்தை முன்வைக்கின்றபோது, தென்பகுதியில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் அனைவரும், பௌத்த, சிங்கள மக்களை மாத்திரமே கொண்டதாக அமையப்போகின்றது.
அவ்வாறான நிலையில், வடக்கில் இவர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் ஓர் ஆசனத்துக்காகத் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கி, தென்பகுதியில் கிடைக்கும் அதிகளவான ஆசனங்களை இழக்க இவர்கள் விரும்பவில்லை.
அதற்குமப்பால், நாடாளுமன்றத்தில் கூட்டணி அமைத்து, அதிகளவான அமைச்சரவையை நியமிப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, அதற்காகவே ஒரு தளத்தை வடக்கு, கிழக்கில் அமைக்கவும் ராஜபக்ஷக்கள் முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனக்குள் காணப்படும் தனிக்கட்சி அதிகாரப் போக்கின் காரணமாக, பல பிரிவுகளாகியதன் தாக்கம், இன்று நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானமெடுக்கும் நிலையைக் குழப்பத்தில் தள்ளியுள்ளது.
வன்னித் தேர்தல்த் தொகுதியைப் பொறுத்த வரையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக, கடந்த தேர்தலில் போட்டியிட்ட பலரும், இன்று பல்வேறு கட்சிகளுக்குச் சென்றிருப்பதன் காரணமாக, மக்கள் பிரதிநிதியாகச் செல்லவேண்டியவர்கள் என மக்களின் சிந்தனையில் உள்ளவர்கள் கூட, இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர்.
இவ்வாறான நிலை, தேசிய கட்சிகளினூடாகப் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், அதிகப்படியான வாக்குகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வல்லனவாக அமைகின்றது.
எனினும், தேசிய கட்சிகளுடாகப் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தமிழ் அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் நிலைப்பாட்டின் காரணமாகவே, இவ்வாறான நிலை தோற்றம் பெற்றது என்பதையும் மறுத்து விட முடியாது.
எனினும், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சிதறிய வாக்களிப்பானது தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் மக்கள் அல்லாதவர்களை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. இச்சூழலில், தமிழ்க் கட்சிகளின் போக்கு, தமிழ் மக்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளியிருப்பதானது, தமிழ் அரசியல்வாதிகளிடம் காணப்பட்ட தலைமைத்துவத்துக்கான போட்டி மிகுந்த விருப்பமே காரணம் என்பதை மறுத்து விடமுடியாது.
அதற்குமப்பால், தமிழ்க் கட்சிகளிடம் காணப்படும் வேட்பாளர் தெரிவு விடயத்தில், தற்போதும் இழுபறி நிலை காணப்படுகின்றமையும் பல்வேறு வகைப்பட்ட விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள், தற்போதைய காலச்சூழலில், தமிழர்களுக்கான நீதியை எவ்வகையில் பெறத் தமது முன்னகர்வை மேற்கொள்ளப்போகின்றனர் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
க. அகரன்