கோவிட்-19 காய்ச்சல் அச்சுறுத் தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதையும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப் பட்டு வருகின்றன.
தற்போது கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலைப் பயன் படுத்தி கார்ப்பரேட் நிறுவனங் களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த கணினி வைரஸ் தாக்குதலால் கடுமை யாகப் பாதிப்படைந்துள்ளன.
இதுகுறித்து சைபர் பாது காப்பு நிறுவனமான ‘செக் பாயின்ட்’ மூத்த அதிகாரிகள் கூறும்போது, “கோவிட், கரோனா தலைப்புகளில் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கணினி வைரஸ் கொண்ட இ-மெயில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் மட்டும் பெரிய நிறுவனங் களை குறிவைத்து சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் பல நிறுவனங் களின் முக்கிய தகவல்கள் திருடப் பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங் களிடம் பணம் கேட்டு மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. எனவே கோவிட், கரோனா பெயர்களில் வரும் போலி இ-மெயில்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தனர்.
உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி டபிள்யூ.எச்.ஓ. பெயரில் பலருக்கு போலி இ-மெயில்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி இ-மெயில்கள், இணைய தளங்கள், தொலைபேசி, மொபைல் போன் அழைப்புகள், எஸ்எம்எஸ், பேக்ஸ் தகவல்களை நம்ப வேண்டாம்.
நாங்கள் யாரிடமும் பாஸ்வேர்டு உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேட்பது கிடையாது. ஏதாவது விவரம் தேவை என்றால் https://www.who.int என்ற எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத் தைப் பார்வையிடலாம். மோசடி குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலி இமெயில்கள் குறித்து எங்களது இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு டபிள்யூ.எச்.ஓ. தெரிவித்துள்ளது.