இனியும் ‘உக்கிய’ முடிவுதானா?

அறிவிக்கப்பட்டுள்ள ​ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும் ‘தொடைநடுங்கி’க் கொண்டிருக்கும் இந்தவேளையில், தேர்தல் வைரஸ்தான் இலங்கையை வீரியமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலின் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுதல், கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது வரையிலான பூர்வாங்க நடவடிக்கைகளில் எல்லாக் கட்சிகளும் மும்முரமாகி இருக்கின்றன.

பெரும்பான்மையினக் கட்சிகள் அனைத்தும், தத்தமது அரசியல் நலன்கள் சார்ந்தும், தங்களது இருப்பின் மீதான வலுவை மீளுறுதி செய்வதற்கும், போட்டிகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி, கைவிட்டுப்போன வெற்றியை எட்டிப்பிடிப்பதற்கு  எத்தனையோ வியூகங்களை வகுத்தும், கடைசியில் தாய்க்கட்சி சுக்குநூறாக உடைந்து போயிருக்கிறது.

ஜே. ஆருக்கு அடுத்த, ‘அரசியல் சாணக்கியன்’ என்று கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவால் பன்னெடுங்காலமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ஐக்கிய தேசிய கட்சி, தலைமைத்துவம் உட்பட அந்தக் கட்சியின் கூட்டு இருப்பும் சிதைந்து போயிருக்கிறது.

இனிமேல், ஐக்கிய தேசிய கட்சி எனப்படுகின்ற பாரம்பரிய கட்சியை, புதிய வகையில் மீள்கட்டுமானம் செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்கு, அக்கட்சியின் உள்வீட்டுப் பூசல்கள் நடுவீதியில் சிந்திச் சிதறி, நாற்றமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

இது இப்படியிருக்க, ராஜபக்‌ஷக்களிள் தரப்பைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் அவர்களது ஒற்றை எதிர்பார்ப்பு, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் அள்ளிக்கொள்வதுதான். இதற்காக அவர்கள், மிக நுணுக்கமான பல வேலைத் திட்டங்களைக் களத்தில் பரிசோதித்த வண்ணம் உள்ளார்கள்.

தங்கள் தரப்பைப் பலப்படுத்துவதில் ஒரு தரப்பு வேலைசெய்துகொண்டிருக்க, எதிர்த்தரப்பைப் பலவீனமாக்குவதற்கும், தேர்தல் முடிந்த பிறகு, சிறிய வித்தியாசத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காமல்விட்டால், அப்போது ஏனைய கட்சிகளிலிருந்து ஆட்களை உருவுவதன் மூலம், அந்தப் பெரும்பான்மைப் பலத்தை உறுதிசெய்வதற்குரிய உள்ளடி வேலைகளை ராஜபக்‌ஷ தரப்பின் பாரம்பரிய ‘சுளியன்’ என்று கூறப்படும் பசில் தலைமையிலான தரப்பு, மும்முரமாக மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை, இம்முறை விநோதமான தேர்தல் முன்னணிகள் எல்லாம் களத்தில் இறங்கி, மக்களுக்கு மிகப்பெரிய நகைச்சுவைக் காட்சிகளை அரங்கேற்றுவதற்குத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான தேர்தல் வேட்டொலிகள், தமிழர் தாயகத்தின் மூலைமுடுக்கெங்கும் இப்போதே கேட்கத்தொடங்கிவிட்டன.

தமிழர் அரசியலின் ஆரம்பத்தில், தமிழ் காங்கிரஸிலிருந்து தமிழரசுக் கட்சி பிரிந்து சென்று, பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாகி, பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு உருவாகியது. இந்தக் கட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆனந்த சங்கரி பிரித்துக் கொண்டு போக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.

அதுபோல, 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு, கஜேந்திரகுமார், இந்தத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஸைப் பிரித்துக் கொண்டுபோய், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கி, மக்களுக்கு முன்னால் கோலம் போட்டு, தேர்தல் கும்மியடிக்க, இப்போது அதேபாணியில், தமிழ் கூட்டமைப்பில் இருந்து, ஒரு தொகுதியினரைப் பிரித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கிளம்பியுள்ளார். அவர், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பென்று புதிய அரங்கொன்றைத் திறந்து, மீன் சின்னத்தில் வெற்றிபெற்று, மக்களுக்கு ‘மீட்சி’ தரப்போவதாகக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்.

பலகாலமாகவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்த்தரப்பிலிருந்து போர்ச் சங்கு ஊதிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கடந்த காலங்களில் எந்த வெற்றி வாய்ப்புகளையும் பெறாது, மக்களால் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், இம்முறை தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பானது, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பலமான எதிர்ப்பைக் கொடுக்கும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வெற்றி கொண்டு, மக்களின் ஆதரவை அள்ளியெடுத்துக் கொள்ளும் என்றுமோர் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

எதிர்பார்ப்புகளுக்குத் தமிழர்கள் மத்தியில், என்றைக்குமே குறைச்சல் இருந்ததில்லை. அரசியல் கட்சிகள் முதல், மக்கள்வரை எல்லோருக்கும் எல்லா வடிவத்திலும் எதிர்பார்ப்புகள் தொடர்ந்துகொண்டுதான் வந்திருக்கின்றன. ஆனால், களத்தில் நடப்பது எப்போதும் விசித்திரமான உண்மைகளாகவே இருந்திருக்கின்றன.

தமிழர் தரப்பின் வாக்குகளை வேட்டையாடுவதற்கு மேற்படி குழுக்கள், இவ்வாறு அரிதாரம் பூசிக்கொண்டு நிற்க, தென்னிலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகளும் தமது பங்குக்கு மக்களின் முன்பாக வந்து, வித்தை காட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டுவருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட கோட்டாபய தரப்பு, தமிழர் தரப்பிடமிருந்து ஓர் ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நப்பாசையுடன், அதற்கு உகந்த ஒருவரைத் தமது தரப்பில், மக்களின் முன்னால் கொண்டுசென்று நிறுத்துவதற்குப் பிரயத்தனம் செய்துகொண்டு நிற்கின்றன. அதற்கான வியூகத்தை வகுப்பதற்கு, ஆலாய்ப் பறக்கின்றன.

ஆனால், இம்முறைத் தேர்தலில் கூட்டமைப்பு – விக்கி அணி, தமிழர் மத்தியில் கூர்மையான போட்டியில் களமிறங்கவுள்ளதால், கஜேந்திரகுமார் அணி, டக்ளஸ் அணி, சந்திரகுமார் அணி ஆகியவைதான் பலத்த அடியை வாங்கவுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், தேர்தலில் கட்சிப் பிரிவுகள் ஏற்படுகின்றபோது வாக்குகள் சிதறும்; வாக்குகள் சிதறும்போது, அது சிறிய கட்சிகளுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

சரி, இந்த ஒட்டுமொத்தத் தேர்தல் திருவிழாவின் பின்னணியில், இந்தப் பத்தி பேச விளையும் விடயம், மேற்குறிப்பிட்டவை அல்ல!

உண்மையில் பேசவிரும்பும் விடயம், இந்த ஒட்டுமொத்த ​ஸ்ரீ லங்கா அரசியல் பற்றியதும் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்ததும் ஆகும்.

தேர்தலில் களமிறங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகளாக இருக்கட்டும், அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களாக இருக்கட்டும் எல்லாத் தரப்புகளிலும் மக்கள் ஓர் ஒற்றுமையை அவதானித்திருக்கலாம். அது, சிங்களப் பெரும்பான்மை கட்சிகளிலும்தான் தமிழ் கட்சிகளிலும்தான் காணப்படுகின்றது.

அதாவது, கடந்த பத்து ஆண்டுகளில், நாடாளுமன்றத்தில் பார்த்த அதே முகங்கள்தான் பெரும்பாலும் இந்தத் தேர்தலிலும் மீண்டும் நுழையக் காத்திருக்கின்றன.

மிகச்சொற்பமான விகிதத்தில் தங்களின் கட்சிகளில் புதிய முகங்களுக்கு ஒவ்வொரு தரப்பும் வாய்ப்பளித்து இருக்கின்றன. பெண்கள் பிரிதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமே என்ற தேர்தல் தேவையோடு, அவர்களையும் படாதபாடுபட்டுக் கட்சிக்குள் இழுத்து வந்திருக்கின்றன.

இந்த மாதிரியான சில மெல்லிய, ஆரோக்கியமான, நடவடிக்கைகள் மூலம், பழைய உறுப்பினர்களைத் தாங்கள் மீண்டும் களத்தில் இறக்கலாம் என்ற முக்கியமான முடிவுக்கு இந்தக் கட்சிகள் மீண்டும் வலுச்சேர்த்திருக்கின்றன. ஒட்டுமொத்த அரசியல் கலாசாரத்திலேயே மிகக்கேவலமானதொரு தீர்மானம் இது.

ஒரு நாட்டுக்கான அரசியல் என்பது, ஒரு தேசத்துக்கான ஜனநாயகச் செயற்பாடு என்பதற்கு அப்பால், அந்த நாட்டு மக்களுக்குச் சரியான ஆட்சியை வழங்குவதற்கு வழி வகுத்துக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகின்ற பிரதான கருவி. அந்தக் கருவி ஒருபோதும், என்றைக்கும் பழுதடையாத உபகரணமாக உருவாக்கப்படுவதில்லை; அதற்கென்று ஓர் ஆயுள் உள்ளது.

நாட்டில் ஏற்படுகின்ற பல்வேறு ‘அரசியல் சிதோஷ்ண நிலைகள்’, இந்த அரசியலைப் பழுதடையச் செய்கின்றன. அப்போதெல்லாம், அது தனக்கான மீளுருவாக்கத்தைக் கோரி நிற்கிறது.

அவ்வாறான மீளுருவாக்கத்தைக் கோருகின்ற புதிய அரசியலை, அதன் ஊடான புதிய ஆட்சித் தெரிவை ஏற்படுத்துவதற்குப் பல புதிய விடயங்கள் தேவைப்படுகின்றன. அதாவது, புதிய சிந்தனைகளோடு, புதிய தலைமுறையைக் கையாளக்கூடிய புதிய அணுகுமுறைகளுடன்கூடிய, புதிய தரப்பொன்று இந்த அரசியலைக் கையாளுவதற்குக் களமிறக்க வேண்டும்.

இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் முன்வைக்கப்படுகின்ற பாரம்பரிய அரசியல் சமன்பாட்டின் அத்தியாவசியமான ஜனநாயகக் கணியம் ஆகும். இந்தச் சமன்பாட்டின் மூலம், முன்நகர்வதற்குக் குறுக்கு வழிகள் எதுவுமே கிடையாது. சமன்பாடு ஒன்றுதான்; அதன் மூலம் கிடைக்கப்பெறும் பெறுமானங்கள் வேறுபடலாம்.

​ஸ்ரீ லங்காவைப் பொறுத்தவரை, போர் முடிந்து 10 ஆண்டுகள் முடிவடைந்து, 11ஆவது ஆண்டுக்குள் நுழையவுள்ள நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தை எடுத்துப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலில், கடந்த 10 ஆண்டுகளாகக் குப்பை கொட்டியவர்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள்தான் இனியும் இந்த நாட்டின் தலையெழுத்தை முடிவுசெய்யப் போவதாக, மக்களின் முன்பு வந்து நிற்கப் போகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளின் உலக மயமாதலும் ஒரு தசாப்தம் ஏற்படுத்திய தலைமுறை மாற்றமும், எத்தனையோ புதிய பரிமாணங்களை உருவாக்கம் செய்துவிட்டன.

ஒவ்வொரு விடயத்திலும் மக்களின் சிந்தனை, அணுகுமுறை, முடிவெடுக்கும் தீர்மானம் என்பன மாறிவிட்டன. உதாரணத்துக்குத் தனிமனித வாழ்க்கையிலேயே கடந்த 10 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் உருவாகிவிட்டன.

ஒரு பொருளை வாங்குவதிலேயே கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், எடுத்த முடிவுக்கும் இப்போது எடுக்கின்ற முடிவுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசமுள்ளது.

அப்படியிருக்கும்போது, கடந்த 10 வருடங்களாக ‘அரசியல் செய்கிறோம்’ என்ற பெயரில் ​ஸ்ரீ லங்காவின் அரசியலை ஒரு சென்ரிமீற்றர்கூட முன்நகர விடாமல், தங்களின் கால்களுக்குள் வைத்துக்கொண்டு பந்தாடிய அரசியல்வாதிகள், திரும்பவும் இந்த 2020ஆம் ஆண்டில், மக்களின் ஆதரவைக் கொண்டுபோய் வைத்து, என்ன கிழிக்கப் போகின்றார்கள்?

‘அரசியலே வேண்டாம்’ என்ற அச்சத்தை, இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தியதுதான் இவர்கள் இவ்வளவு காலத்தில் செய்த சாதனையென்றால், அதை நாட்டு மக்களும் தொடர்ந்து அனுமதிக்கப் போகிறார்களா? இவர்களின் காலாவதியான முடிவுகளைத்தான் தங்களின் அடுத்த தலைமுறைகளுக்கான ஊட்டச்சத்தாக விற்கப்போகிறார்களா?

தம்மை ஆழப்போவதாக வந்து நிற்பவர்களின் அடிப்படைத் தகுதிகளையும் அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டிய மிகமுக்கியமான தேர்தல் இது.

இனிவரும் தேர்தல்கள், கரைவேட்டிகளையும் நரைத் தலைகளையும் விலத்திவிட்டு, புதிய சிந்தனைகொண்ட சமுதாயத்தை, ஜனநாயக நீரோட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய காலப்பகுதி இது.

எல்லைகளற்ற நாடுகளாக விரிந்து கிடக்கும் புதிய உலகத்தின் சவால்களைச் சந்திக்கவல்ல புதிய அரசியல் சக்தியை, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உருவாக்க வேண்டிய காலப்பகுதியே இது.

உலகம் பேசுகின்ற மொழியே தெரியாத, உலகின் சாணக்கியங்களே புரியாத, உலகின் சூட்சுமங்களே விளங்காத, உலகின் நெளிவு சுளிவுகளே காணாத, தரப்புகளை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் ஒரு வயோதிபர் மடத்தை, ஒரு நித்திரைக் கூடத்தைத்தான் இனியும் உருவாக்கப் போகிறோமா என்பது குறித்து, மக்கள் தீர்க்கத்துடன் இந்தத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டும்.

-விரான்ஸ்கி