வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் அதிகரிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
நேற்று பிற்பகல் வடமராட்சி, கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு மக்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வட கிழக்கு மக்களிடையே அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றங்களை சமாந்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது குறிக்கோள். அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஸ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு.
பலர் கிழக்கைப் பற்றிப்பேசி அங்கு சிங்கள, முஸ்லீம் பெரும்பான்மையினர் மத்தியில் எவ்வாறு வடகிழக்கு இணைப்பை உறுதிப்படுத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார்கள். அதனால் வட கிழக்கு இணைப்பை விட்டுவிடக் கோருகின்றார்கள். முஸ்லிம் மக்கள் தமிழ் பேசுகின்றவர்கள். வட கிழக்கு தமிழ் பேசும் பிராந்தியங்கள் கிழக்கிலும் தமிழ்மொழி பேசுவோரே பெரும்பான்மையினர்.
ஆகவே வலுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். எமது ஏற்றுமதிகளைகூட்டி இறக்குமதிகளைக் குறைக்கப் பாடுபட வேண்டும். எந்தவொரு அவசரகால நிலைமையிலும் நாங்கள் எங்களைப் பாதுகாப்பான நிலையில் வைத்துக்கொள்ள சேர்ந்து ஆவன செய்ய வேண்டும். வருங்காலத்தில் இராணுவ கெடுபிடிகள் கூடக்கூடும். அவர்கள் பிழைகள் செய்தால் அவர்களை அடையாளம் காட்டக்கூடியதாக நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியாக எம் மக்கள் தன்நிறைவு அடைய நாங்கள் எமது கடல் கடந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளோம். எமக்கென ஒரு நம்பிக்கைப்பொறுப்பை எமது கட்சி தொடங்கியுள்ளது. வெளிநாட்டு உள்நாட்டுப் பணங்கள் யாவும் நம்பிக்கைப் பொறுப்பால் ஏற்கப்பட்டு உரியவாறான செயற்றிட்டங்களை வட கிழக்கு மாகாணங்களில் இப்போது செய்து கொண்டு வருகின்றோம்.
இரணைதீவில் கடலட்டை வளர்க்குந் திட்டம் தற்போது மிக வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கின்றது. கனடாவில் கிடைத்த பணத்தை வைத்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அடுத்து மட்டக்களப்பில் இரு செயற்றிட்டங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. உங்கள் மக்களுக்கு, முக்கியமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவர்கள் சேர்ந்து தம்மை பொருளாதார ரீதியாகப் பலப்படுத்தவும் தன்னிறைவை ஏய்தவும் அதற்கேற்ற செயற்றிட்டங்களை எமக்கு ; அடையாளப்படுத்தினால் அவற்றை நாம் பரிசீலித்துப் பார்த்து உரிய உதவிகள் செய்யக் காத்து நிற்கின்றோம். என்றார்.
இச் சந்திப்பில் வடமராட்சி அமைப்பாளர் இரா.மயூதரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், மற்றும் கிராம மக்கள் என் சுமார் நூறு பேர்வரை கலந்து கொண்டனர்.