மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடைபயண பேரணி நடந்தது. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு பேரணி தொடங்கியது. பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி எத்திராஜ் சாலை, கல்லூரி சாலை, ஹாடேவ்ஸ் சாலை, ஆயகர் பவன் வழியாக நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கன்வென்ட் அரங்கத்தை அடைந்தது. அங்கு பேரணி நிறைவு விழா நடந்தது. கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பேரணியையொட்டி பெண் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகை நயன்தாராவுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் ஸ்டைலாக வந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.