கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள பிரபல அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்கிறக் குற்றச்சாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் அறுவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, வடக்கு, கிழக்கில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து வடக்கில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, வீடொன்றிலிருந்து நவீன தொடர்பாடற் கருவிகளும், சக்தி வாய்ந்த வெடிப்பொருள்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மன் நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, குறித்த வீட்டிலிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேநபர்களுக்கு இந்திய, மலேசிய நாடுகளில் வசித்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் நிதி உதவி வழங்கிவருவதும் தெரியவந்துள்ளதோடு, சக்தி வாய்ந்த வெடிப்பொருள்கள் தொடர்பில் விசேடப் பயிற்சியை குறித்த சந்தேகநபர்கள் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது.