ஆஸ்திரேலியாவில் வெறிச்சோடி வரும் சூப்பர் மார்க்கெட்டுகள் – காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சூப்பர் மார்க்கெட் கடைகளில் டிஷ்யூ பேப்பர்கள், வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவை உடனே விற்று தீர்ந்துவிடுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.87 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட் கடைகளில் கைகளை சுத்தம் செய்யும் ஜெல், டிஷ்யூ பேப்பர்கள், வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவை விற்று தீர்ந்து விட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை முதியவர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து வருகின்றனர்.
இதனால் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வரும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கைகளை சுத்தம் செய்யும் ஜெல், வலி நிவாரண மருந்துகள் மற்றும் டிஷ்யூ பேப்பர்ஸ் உள்ளிட்ட பொருள்கள் வந்தவுடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.
மேலும் அத்தியாவசிய பொருள்களும் விரைவில் காலியாகி விடுகின்றன. இதனால் சூப்பர் மார்க்கெட் கடைகள் அனைத்தும் பொருள்கள் இன்றி காலியாக காட்சி அளிக்கின்றன என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி வைப்பதால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சில நாடுகளில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாலும் இந்த நிலை உருவாகி வருகிறது